சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல் - பண்ருட்டி தி.வேல்முருகன்
வியாழன், 6 செப்டம்பர், 2012
சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே முதலிப்பட்டியில் நேற்று 05/09/2012 பிற்கபல் நிகழ்ந்த கோர தீ விபத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கருகி உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. நெஞ்சை உறைய வைக்கும் இந்த தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துக் கொள்கிறது. ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக சிவகாசி சுற்றுவட்டாரத்தில் இத்தகைய தீ விபத்துகள் நடப்பதும் கொத்து கொத்தாக மனித உயிர்கள் கருகிப் பலியாவதும் வாடிக்கையாகிவருகிறது. இனியாவது இப்படி மனித உயிர்கள் கருகிப் பலியாவதைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பட்டாசு ஆலைகளில் போதுமான ஏற்பாடுகள் செய்யப்படாமல் இருப்பதும் இதை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதும்தான் தீ விபத்துக்குக் காரணம். இத்தகைய தீ விபத்துக்கு என்ன காரணம் என்பதை கண்டறிவதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் பட்டாசு ஆலை நிர்வாகங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்தகைய தீ விபத்து நிகழும்போது உரிய சிகிச்சை பெற அங்குபோதுமான மருத்துவ வசதி இல்லை. ஏற்கெனவே விருதுநகரில் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு கூட அறிவிப்போடுதான் இருக்கிறது. அங்கு இனியாவது நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையை விரைந்து அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகாசி சுற்றுவட்டாரத்தில் தீ விபத்துகள் தொடர் கதையாகிவரும் நிலையில் அங்கு நவீன தீயணைப்புக் கருவிகள் அமைக்கப்பட வேண்டும். தீயை உடனே கட்டுப்படுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய ஹெலிகாப்டரை அங்கு நிரநதரமாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். இதேபோல் தீக்காய சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனைகளை சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் அமைக்க வேண்டும். இந்த கோர தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கும் படுகாயமடைந்தோருக்கும் உரிய நிவாரணத் தொகையை தமிழக அரசு விரைந்து வழங்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக