சில்லரை வர்த்தகத்தில் 51% அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு தி.வேல்முருகன் கண்டனம்
சனி, 15 செப்டம்பர், 2012
சில்லரை வர்த்தகத்தில் 51% அன்னிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மக்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத மத்திய அரசாக ஏழை எளிய மக்களின் வயிற்றில் சமையலறையில் அடித்த அடியாக டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு கட்டுப்பாடு என்ற ரணகளம் இன்னமும் ஆறவில்லை. இப்போது சில்லரை வர்த்தகத்தில் 51%அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் கோடிக்கணக்கான சிறு வர்த்தகர்களின் நெஞ்சில் இடியை இறக்கியுள்ளது.
சில்லரை வர்த்தகத்தில் பகாசுர பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துவிட்டு உதட்டளவில் இதில் மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளட்டும் என்று பம்மாத்து காண்பிக்கிறது மத்திய அரசு. மக்களின் நலன் சார்ந்து முடிவெடுக்காமல் பன்னாட்டு நிதியங்களின் வலியுறுத்தல்களுக்கு ஆட்பட்டு மேற்குலக நாடுகளின் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து இத்தகைய அனுமதியை மத்திய அரசு கொடுத்துள்ளது.
சொந்த நாட்டு மக்களை நடுத்தெருவில் தவிக்கவிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு செங்கம்பளம் விரிக்கும் மத்திய அரசின் இந்த சர்வாதிகார செயலை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள பல கோடி சில்லரை வர்த்தகர்க ளின் எதிர்காலத்தை இருள்மயமாக்கியதாக மாற்றியிருக்கும் மத்திய அரசின் இந்த முடிவு உடனடியாக திரும்பப் பெறப்பட்டாக வேண்டும். ஏற்கெனவே நாடு முழுவதும் மக்களின் கோப அலைகளின் கொந்தளிப்பில் சிக்கியிருக்கும் மத்திய காங்கிரஸ் அரசானது இத்தகைய நடவடிக்கைகளால் வரும் தேர்தலில் வன்ம அடி வாங்க நேரிடும் என்றும் எச்சரிக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக