கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம்
திங்கள், 10 செப்டம்பர், 2012
இன்று 10/09/2012 கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள செய்திக் குறிப்பு
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த ஓராண்டுகாலமாக அமைதி வழியில் போராடி வந்த பொதுமக்கள் மீது இன்று தடியடி நடத்தி, கண்ணீர்புகை குண்டு வீசி, துப்பாக்கிச் சூட்டை காவல்துறை நடத்தியிருப்பது கண்டனத்துக்குரியது. பல நூறு பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்ட அமைதி வழிப் போராட்டத்தை இத்தகைய அடக்குமுறை மூலம் நசுக்குவது என்பது ஏற்புடைய செயல் அல்ல. காவல்துறையினரின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக கடலுக்குள் குதித்த பலரது கதியும் என்ன என்று தெரியவில்லை? அவர்கள் உயிரோடு உள்ளனரா? என்பதும் தெரியவில்லை. இதேபோல் செய்தியாளர்கள் மீதும் காவல்துறை தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த 20 ஆண்டுகாலமாக நடத்தப்பட்டு வரும் போராட்டம் நியாயமானது. அமைதிவழியில்தான் நடத்தப்பட்டும் வருகிறது. கடந்த ஓராண்டாகவும் ஜனநாயக வழியில் அமைதியாகத்தான் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அணு உலைக்கு எதிராக போராடுவோரின் அச்சத்தை நியாயமான வகையில் போக்க வேண்டுமே தவிர இப்படியான அடக்குமுறைகளின் மூலம் மக்கள் போராட்டங்களை நசுக்கக் கூடாது. கூடங்குளம் சுற்றுவட்டாரத்தில் குவிக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான போலீசாரை திரும்ப வரவழைப்பதுடன் அறவழியில் போராடும் பொது மக்களின் அச்சத்தைப் போக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
தங்கள் எதிர்கால வாழ்க்கையும் வாழ்வாதாரமும் பாழ்பட்டுவிடும் என்ற அச்சத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் அந்த பொதுமக்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக