காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசை மத்திய அரசு நிர்பந்திக்க வேண்டும்: பண்ருட்டி தி.வேல்முருகன் வேண்டுகோள்

புதன், 12 செப்டம்பர், 2012

     


             

                தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசை மத்திய அரசு நிர்பந்திக்க வேண்டும் என  பண்ருட்டி தி.வேல்முருகன் வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு


        காவிரியில் தமிழகத்துக்கு தற்காலிகமாக 10 ஆயிரம் கன அடிநீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு கர்நாடக அரசும் உச்சநீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக விவசாயிகள் என்ற பெயரில் கன்னட இனவெறி அமைப்புகள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டங்களை நடத்தி வருவதுடன் தமிழக முதல்வர் உள்ளிட்ட தலைவர்களின் உருவபொம்மைகளையும் எரித்து வருவது தமிழக மக்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

             தமிழ்நாட்டுக்கு உரிய நேரத்தில் காவிரி நீரை திறந்துவிடாத காரணத்தால் ஏற்கெனவே குறுவை சாகுபடி பொய்த்துப் போய்விட்டது. காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி, ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மேட்டூர் அணைக்கு 95.480 டி.எம்.சி. அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு இருக்க வேண்டும். மத்திய நீர் ஆணையம் வகுத்துள்ள வழிமுறைகளின்படி, இடர்பாடு காலப் பங்கீட்டின்படி கணக்கிட்டாலும் கூட 43.837 டி.எம்.சி. அடி தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்து இருக்க வேண்டும். ஆனால் கர்நாடகம் கொடுத்ததோ வெறும் 9.187 டி.எம்.சி. அடி தண்ணீர் மட்டுமே! இதனால் குறுவைசாகுபடியைக் கைவிட வேண்டிய நிலைக்கு தமிழக விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

          இந்நிலையில் சம்பா சாகுபடியாவது நடைபெற வேண்டுமெனில் காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகம் திறந்துவிட்டாக வேண்டும். தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடப்பட வேண்டிய அணைகளில் ஒன்றான கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த கொள்ளளவான 124 அடியில் தற்போது 110 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணை எந்த நேரமும் நிரம்பிவிடும் என்று கூறப்படுகிறது. இதேபோல் கபினி அணையும் நிரம்பும் நிலையில் இருக்கிறது. கபினியில் இருந்து வினாடிக்கு 5450 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு அந்த தண்ணீர் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்துக்கும் வந்து கொண்டு இருக்கிறது. மேலும் கனமழை தொடர்ந்து பெய்வதால் கபினிக்கான நீர்வரத்தும் 17 ஆயிரத்து 788 கன அடியாக இருக்கிறது. இதனால் தமிழகத்துக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி 10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படுவதால் எந்த ஒரு நட்டமும் கர்நாடகத்துக்கு ஏற்படப்போவதில்லை. கர்நாடக விவசாயிகளுக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை.

கர்நாடக விவசாயிகள் தேவையற்ற போராட்டத்தை கைவிடாவிட்டால் தமிழகம் எதிர்வினை ஆற்ற நேரிடும்

           ஆனால் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ரக்ஷன வேதிகே மற்றும் கன்னட சாலவலி போன்ற அமைப்புகள் போராட்டங்களை தூண்டிவிடுகின்றன. தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுவதை எதிர்த்து நடத்தும் தேவையற்ற இந்தப் போராட்டங்களால் இரு மாநில உறவுகள் சீர்குலைந்து போகும் நிலைமை ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். கர்நாடக விவசாயிகளின் அர்த்தமற்ற போராட்டம் தொடருமேயானால் காவிரி நீர் உரிமைக்காக போராடும் தமிழக மக்களும் தங்களது எதிர்வினையை வெளிப்படுத்த நேரிடும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கிறது.

              மேலும் வரும் 19-ந் தேதி பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற உள்ள காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை திறந்துவிடுவதில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தமிழகத்து காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசை மத்திய அரசும் நிர்பந்திக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP