பாகிஸ்தானில் தலிபான்களால் 132 பிஞ்சு குழந்தைகள் உட்பட 142 பேர் படுகொலை: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கண்டனம்

புதன், 17 டிசம்பர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் இன்று 17.12.2014 வெளியிட்டுள்ள அறிக்கை:
 
பாகிஸ்தானில் தலிபான்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 132 பிஞ்சு குழந்தைகளுக்கு கண்ணீர் அஞ்சலி
பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்தில் அந்த நாட்டு ராணுவம் நடத்துகிற பள்ளிக் கூடத்துக்குள் நுழைந்து ஈவிரக்கமற்ற வகையில் 132 பிஞ்சு குழந்தைகள் உட்பட 142 பேரை தலிபான்கள் படுகொலை செய்து வெறியாட்டம் போட்டுள்ள செயல் உலகை உலுக்கி நெஞ்சை பதற வைக்கிறது..
தேர்வு எழுதிக் கொண்டிருந்த பள்ளி குழந்தைகள், துப்பாக்கிகளோடு வந்த தலிபான்களைக் கண்டு அஞ்சி நடுங்கி மேஜைகளுக்கு அடியில் பதுங்கி உயிர் தப்பிய காட்சிகள் எண்ணிப் பார்க்கவே முடியாத ஒன்று.. எங்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்வினைதான் இது என்றெல்லாம் இப்படிப்பட்ட கொடுஞ்செயலை தலிபான்கள் நியாயப்படுத்திக் கொண்டிருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஏற்கவே முடியாத ஒன்று. எந்த ஒன்றின் பெயராலும் எந்த ஒரு வன்முறை தாக்குதலையும் யாரும் ஆதரிக்கவோ நியாயப்படுத்திவிடவோ முடியாது. தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி வன்முறை வெறியாட்டங்களுக்கு ரத்த சாட்சியங்களாகிப் போன பெஷாவர் பிஞ்சுக் குழந்தைகளுக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன்.
தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

முல்லைப் பெரியாறில் கேரளா புதிய அணை கட்டுவதற்காக ஆய்வுக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் கடும் கண்டனம்

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் 14.12.2014  வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லைப் பெரியாறில் கேரளா புதிய அணை கட்டுவதற்காக
ஆய்வுக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கு கடும் கண்டனம்!

முல்லைப் பெரியாறு அணையில் கேரளா புதிய அணையை கட்டுவதற்கான ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்காக 35 ஆண்டுகாலம் பெரும் சட்டப்போராட்டத்தை நடத்தி தற்போதுதான் தமிழ்நாடு தனக்கான நீதியைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் வயிற்றில் அடிக்கும் வகையில் முல்லைப் பெரியாறு அணை அருகேயே கேரளா மற்றொரு அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வாழ்வாதாரமே முல்லைப் பெரியாறு அணை. ஆனால் இந்த மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் புதிய அணை கட்டுவோம் என்று கேரளா அடாவடியாக அறிவித்தது. தற்போது கேரளா முன்வைத்த புதிய அணைக்கான் கோரிக்கையை ஏற்று ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் வன உயிரின வாரிய நிலைக்குழு அனுமதி அளித்துள்ளது.

தற்போதைய அணை மிகவும் பலமாக இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தீர்ப்பளித்துவிட்ட பின்னரும் மத்திய அரசு கேரளாவின் கோரிக்கையை ஏற்று புதிய அணை கட்ட ஆய்வுக்கு அனுமதி அளித்திருப்பது சட்டவிரோதமாகும்.

தமிழ்நாட்டு மக்களின் அத்தனை வாழ்வுரிமை பிரச்சனைகளிலும் கள்ள மவுனமாக இருப்பது அல்லது பச்சைத் துரோகம் இழைப்பது என்பதுதான் எந்த மத்திய அரசாக இருந்தாலும் கடைபிடிக்கிற கொள்கையாக இருக்கிறது. அதுவே தற்போதும் நீடிக்கிறது.

இந்தியப் பேரரசின் தொடரும் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மைக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டத்தான் போகிறார்கள் என்பதை வரலாறு பார்க்கத்தான் போகிறது. கேரளாவின் அடிப்படையில் புதிய அணை கட்ட ஆய்வுக்கு அனுமதித்ததை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.. இல்லையெனில் மிகக் கடுமையான விளைவுகளை மத்திய அரசு சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கிறேன்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தின் அடிப்படையில் மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

பிரிகேடியர் பால்ராஜ் "சமர்க்கள நாயகன்” நூல் வெளியீட்டு விழா - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் முதல் பிரதியை பெற்றார்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கியமான போராளியாக விளங்கிய பிரிகேடியர் பால்ராஜ் அவர்களைப் பற்றிய "பிரிகேடியர் பால்ராஜ் சமர்க்கள நாயகன்” நூல் வெளியீட்டு விழா 13.12.2014 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் புதுச்சேரி பெரியார் திடலில் நடைபெற்றது.

ிராவிடர் விடுதலைக் கழகம் லோகு அய்யப்பன் தலைமை தாங்கினார். தந்தைபிரியன் வரவேற்றார். திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி நூலை வெளியிட தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் பெற்றுக்கொண்டார். வீராசாமி, சிவானந்தம், விஜயசங்கர், சிவகாமி, சார்லஸ், விஜயன், அபிமன்னன், மூர்த்தி, அரிமாபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அன்பெழிலன் நன்றி கூறினார்.
 
 

 

Read more...

கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் அமைக்க ரஷ்யாவுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம்

சனி, 13 டிசம்பர், 2014


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று 13.12.2014 வெளியிட்டுள்ள அறிக்கை:
கூடங்குளத்தை மனிதப் புதைகுழிகளாக்க சதி!

மேலும் 2 அணு உலைகள் அமைப்பதா? மத்திய மோடி அரசுக்கு கடும் கண்டனம்!

தமிழ்நாட்டு மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் அமைக்க ரஷ்யாவுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதற்கு மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரஷ்யா நாட்டு அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமையன்று டெல்லியில் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களில் கூடங்குளத்தில் 3 மற்றும் 4வது அணு உலைகளை அமைப்பது தொடர்பானதும் ஒன்று.

தமிழ்நாட்டு மக்கள் கடந்த பல ஆண்டுகாலமாக கூடங்குளத்தில் அணு உலையே அமைக்கக் கூடாது; எங்களது வாழ்வாதாரமும் சந்ததியும் பூண்டோடு இல்லாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

வேறு எந்த ஒரு தேசத்திலுமே நடத்தாத மக்கள் திரள் பெரும் போராட்டத்தை கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் நடத்தி வருகின்றனர். ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறையும் தீரமுடன் எதிர்கொண்டு இன்னுயிரை ஈந்தும் இந்தப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்ட களத்தில் அந்தோணி ஜான், ராஜசேகர், ரோசலின், சகாயம் ஆகியோர் களப்பலியாகி இருக்கின்றனர். நாட்டின் விடுதலைப் போராட்டக் காலம் போல பல்லாயிரக்கணக்கானோர் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் தொடரப்பட்டு ஒரு அசாதாரண் சூழ்நிலையிலும் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

கூடங்குளத்தில் இயங்குவதாக சொல்லப்படுகிற முதலாவது அணு உலையே முடங்கிக் கிடக்கிறது. இன்னமும் துளி மின்சாரமும் தயாரிக்கப்படாமல் ஏதோ அப்பாவி மக்களை எலிகளாக நினைத்து ஒரு சோதனைக் கூடம் போலத்தான் அதை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் 3வது மற்றும் 4வது அணு உலைகளையும் அமைக்க ஒப்பந்தம் போட்டுள்ள இந்திய பேரரசை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன். அத்துடன் இந்தியா முழுவதும் 10 அணு உலைகளை நிறுவவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.

இந்திய மக்களின் உயிரோடும் வாழ்வாதாரத்தோடும் விளையாடுகிற மத்திய மோடி அரசே! இதுதான் நீங்கள் சொன்ன மாற்றத்துக்குரிய அரசா? இந்திய மண்ணில் எந்த ஒரு இடத்திலும் நாசகார அணு உலைகளை அமைப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடுமையாக எதிர்க்கும்.

கூடங்குளத்தை மனிதப் புதைகுழியாக்க இந்திய அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வரும் இத்தகைய அணு உலைகளை எதிர்த்து தொடர்ந்தும் போராடும் மக்களோடு தோளோடு தோள் நின்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராடும் . இத்தகைய மனிதகுலத்தை நிர்மூலமாக்குகிற அணு உலைத் திட்டங்களை நம்புகிற மத்திய அரசை வன்மையாகக் கண்டிப்பதுடன் இவற்றை உடனே கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

தமிழக அரசு மின்கட்டணத்தை 15 விழுக்காடு அளவில் உயர்த்திருப்பதை திரும்ப பெற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை கோரிக்கை

வெள்ளி, 12 டிசம்பர், 2014


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று 12.12.2014 வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசு மின்கட்டணத்தை 15 விழுக்காடு அளவில் உயர்த்திருப்பது என்பது பொதுமக்களுக்கு மீண்டும் பெரும் சுமையாகும். அண்மையில்தான் பால்விலை மிக அதிக அளவு உயர்த்தப்பட்ட நிலையில் மின்கட்டணமும் உயர்த்தப்பட்டிருப்பதை பொதுமக்களால் ஏற்கமுடியாத ஒன்றாகும்.

வீடுகளுக்கு இரு மாதங்களுக்கு 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு தற்போதுள்ள கட்டணம் ரூ.2.60-ல் இருந்து ரூ.3 ஆகவும் 200 யூனிட் பயன்படுத்துவோருக்கு ரூ.2.80-ல் இருந்து ரூ.3.25 ஆகவும், 201 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு ரூ.4.-ல் இருந்து ரூ.4.60 ஆகவும் 500 யூனிட்டுக்கு மேல் இரு மாதங்களுக்கு பயன்படுத்து வோருக்கு ரூ.5.75-ல் இருந்து ரூ.6.60ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இது மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும். குறிப்பாக வாடகை வீடுகளில் வசிக்கும் நடுத்தர மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதால்தான் இத்தகைய ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

தனியாரிடம் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவதைவிட தமிழ்நாட்டின் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்தின் தேவைக்கான அளவு பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் புதிய மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுத்தால் இத்தகைய சுமைகளை மக்கள் மீது சுமத்த வேண்டியது இருக்காது.

அதே நேரத்தில் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோரின் கட்டண உயர்வை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும்; 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்கள் தற்போது அவர்கள் செலுத்தி வரும் மின் கட்டணத்தையே தொடர்ந்து செலுத்தினால் போதும்: என்ற மாண்புமிகு முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

பொதுமக்கள் மீது பெரும் சுமையாக ஏற்றப்பட்டிருக்கும் இந்த மின் கட்டண உயர்வை திரும்பப் பெற தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

திருப்பதியில் ராஜபக்சேவுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் மீதும், தமிழக செய்தியாளர்கள் மீதும் ஆந்திர காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கண்டனம்

புதன், 10 டிசம்பர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன்  இன்று 10.12.2014 வெளியிட்டுள்ள அறிக்கை:
 
திருப்பதியில் தமிழக செய்தியாளர்கள் மீதும் கொடும் தாக்குதல் நடத்தி கைது செய்திருப்பதற்கும் கடும் கண்டனம்!


ஆந்திரா அரசே! தமிழக செய்தியாளர்களை உடனே விடுதலை செய்க!!


தமிழீழத்தில் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் உறவுகளை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு தமிழினத்தின் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் மீறி இந்தியப் பேரரசு செங்கம்பளம் விரித்து வரவேற்றதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.


திருப்பதிக்கு வந்த கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக நூற்றுக்கணக்கான வாகனங்களில் நேற்று (டிசம்பர் 9)-ந் தேதி மாலை சென்ற ஆயிரக்கணக்கான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் ஆந்திரா எல்லையில் அந்த மாநில காவல்துறையினரால் தடுக்கப்பட்டோம். பின்னர் ஆந்திரா எல்லையிலேயே ஒரு மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தி இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் கொடும்பாவியையும் எரித்தோம்.


இந்த நிலையில் இன்று அதிகாலை திருப்பதி ஆலயத்தில் வழிபாடு நடத்திய படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஜனநாயக வழியில் அமைதியான முறையில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.


ஆனால் ஆந்திரா காவல்துறையினரோ கருப்புக் கொடி காட்டிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் குறிஞ்சிப்பாடி ஒன்றியத் தலைவர் பாலமுருகன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சுந்தர், கடலூர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சத்திரம் குமார், திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர் சிவா உள்ளிட்ட 25 பேரை மிருகத்தனமாக தாக்கி அவர்களது வாகனங்களை நாசமாக்கி தனித்தனியே சிறையிலடைத்துள்ளது.


இதேபோல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணி தலைவர்களான மல்லை சத்யா, வேளச்சேரி மணிமாறன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் நீலவானத்து நிலவன், வித்யாதரன் எனப் பலரையும் ஆந்திரா காவல்துறை கொடூரமாகத் தாக்கி சிறையிலடைத்துள்ளது. ஆந்திர காவல்துறையினரின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.


அத்துடன் இந்த கருப்புக் கொடி சம்பவத்தை பதிவு செய்ய சென்ற திருத்தமணி மாலை முரசு செய்தியாளர் மீது நேற்று திருப்பதியில் ஆந்திரா காவல்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இன்று அதிகாலை தமிழ்நாட்டைச் சேர்ந்த சன் டிவி செய்தியாளர் குணசேகரன், தந்தி தொலைக்காட்சி செய்தியாளர் காண்டீபன், புதிய தலைமுறை செய்தியாளர் மணிகண்டன் உட்பட 10க்கும் மேற்பட்டவர்களையும் ஆந்திரா காவல்துறை மிகக் கொடூரமாக தாக்கியும் அவர்களது செய்தி உபகரணங்களை உடைத்தும் பறிமுதல் செய்தும் கைது செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டிருப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அண்டை மாநிலமான தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் "ராஜபக்சேவின் ஏவல்" படைபோல ஆந்திரா காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக நேற்றும் இன்றும் நடந்து கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது. 


திருப்பதியில் கைது செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மறுமலர்ச்சி திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். அதேபோல் தமிழ்நாட்டு செய்தியாளர்களை உடனே விடுவித்து பறிமுதல் செய்யப்பட்ட உபகரணங்களை ஆந்திரா காவல்துறை திருப்பி ஒப்படைக்க வேண்டும். நாசமாக்கிய செய்தி உபகரணங்களுக்கான உரிய நட்ட ஈட்டை ஆந்திரா அரசு வழங்க வேண்டும்.


இந்தத் தாக்குதலுக்கு ஆந்திரா அரசு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதுடன் ராஜபக்சேவின் கூலிப்படையாக குண்டர் படையாக நின்று தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை உடனே தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.


அமைதி வழியில் போராடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளையும் தங்களது கடமையை செய்ய சென்ற தமிழ்நாட்டு செய்தியாளர்களையும் உடனே ஆந்திரா காவல்துறை விடுதலை செய்யாவிட்டால் தமிழ்நாட்டுக்குள் அந்த மாநில பேருந்துகள் எதனையும் அனுமதிக்க மாட்டோம். 


அத்துடன் தமிழ்நாட்டில் இயங்கும் அத்தனை ஆந்திரா அரசுக்கு சொந்தமான நிறுவனங்களையும் முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை நடத்துவோம் என்றும் எச்சரிக்கிறேன்.


பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.500 கோடி பாக்கி வைத்துள்ள 27 தனியார் சர்க்கரை ஆலைகளை அரசுடைமையாக்க தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் கோரிக்கை

செவ்வாய், 2 டிசம்பர், 2014

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் இன்று (02.12.2014) வெளியிட்ட  அறிக்கை:

கரும்பு விவசாயிகளுக்கு ரூ500 கோடி பாக்கி வைத்துள்ள தனியார் சர்க்கரை ஆலைகளை அரசுடைமையாக்குக!!

தமிழகத்தில் 27 தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு ரூ500 கோடியை வழங்காமல் இழுத்தடித்து வருவது கடும் கண்டனத்துக்குரியது.

கரும்பில் இருந்து மொலாசஸ், எரி சாராயம், மின்சாரம், இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதில் ஒரு டன் கரும்பில் சர்க்கரை ஆலைக்கு ரூ.8 ஆயிரம் கிடைக்க வாய்ப்புள்ளது. 

ஆனால் கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு தர வேண்டும் என்று நிர்ணயித்த மிகக் குறைந்தபட்ச தொகையான ரூ2,650 என்பதை முழுமையாகக் கூட தரமறுக்கின்றன தனியார் சர்க்கரை ஆலைகள். இதில் ரூ300ஐக் குறைத்து கரும்பு டன்னுக்கு ரூ 2,350 என்ற அளவில்தான் வழங்குகின்றன. இந்த வகையில் விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை மட்டும் ரூ500 கோடி.

ஏற்கெனவே சில தனியார் சர்க்கரை ஆலைகள், லாரிகளில், டிராக்டர்களில் கரும்பை ஏற்றிச் சென்று எடை போடும் போது குளறுபடிகள் செய்து விவசாயிகள் வயிற்றில் அடிக்கின்றன. அதாவது ஒரு லாரியில் 10 டன் கரும்பை விவசாயி ஏற்றினால் எடை போடும்போது 2 டன் குறைத்து 8 டன் என்ற அளவில்தான் இருப்பதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டு அதன் மூலமே பல்லாயிரம் கோடிரூபாயை சுருட்டுகின்றன.

இப்படி வஞ்சித்து சம்பாதிக்கும் பல்லாயிரம் கோடி ரூபாயை வேறு தொழில்நிறுவனங்களில் முதலீடு செய்து கொண்டு விவசாயிகளுக்குத் துரோகம் செய்கின்றன தனியார் சர்க்கரை ஆலைகள். அத்துடன் விவசாயிகளிடம் கொள்ளை அடிக்கும் இந்த தனியார் சர்க்கரை ஆலைகள் மத்திய அரசிடம் இருந்து ரூ 6ஆயிரம் கோடி அளவுக்கு வட்டியில்லா கடனைப் பெறுகிறது. இந்த வட்டியில்லா கடன் என்பதே விவசாயிகளுக்கு நிலுவையில்லாமல் தொகை வழங்குவதற்காகத்தான். ஆனால் மத்திய அரசின் கடனையும் பெற்றுக்கு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை தராமல் தனியார் சர்க்கரை ஆலைகள் வைத்திருப்பது சட்டவிரோதமாகும்.

விவசாயிகளிடம் கொள்ளையடித்தும், அரசு நிர்ணயித்த தொகையையில் குறிப்பிட்ட தொகையைத் தந்துவிட்டு நிலுவைத் தொகையை ஆண்டுக் கணக்கில் தராமல் இழுத்தடித்தும் விவசாயிகளை தனியார் சர்க்கரை ஆலைகள் வஞ்சிப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். கரும்பிலிருந்து கிடைக்கும் மூலப்பொருளை கொண்டு தயாரிக்கும் மதுவுக்கு விலை ஏறிக் கொண்டே போகிறது. ஆனால் கரும்பைக் கொடுத்த விவசாயிகளுக்கோ அவர்களுக்குச் சேர வேண்டிய தொகை முழுமையாக கிடைக்காமல் ரூ500 கோடி அளவுக்கு பாக்கி வைத்திருப்பது எந்த விதத்திலும் நியாயமே இல்லை.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் கரும்புக்கான கொள்முதல் விலை மிகக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் டன் ரூ.3,200, பஞ்சாபில் ரூ.3,020, அரியானாவில் ரூ.3,100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையிலும் ரூ500 கோடி பாக்கி வைத்து தனியார் சர்க்கர் ஆலைகள் கரும்பு விவசாயிகள் வயிற்றில் அடிப்பது வேதனைக்குரியதாகும். தனியார் சர்க்கரை ஆலைகள் உரிய காலத்தில் நிலுவைத் தொகையை தராததால் விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க முடியாமலும் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமலும் பெரும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர்.

தற்போதும் கூட 2014-15 அரவை பருவத்துக்கு முத்தரப்பு கூட்டத்தைக் கூட்டவில்லை. விவசாயிகள் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கி வரும், விவசாயிகளுக்கு தர வேண்டிய ரூ500 கோடி அளவு பாக்கி வைத்துள்ள தனியார் சர்க்கரை ஆலைகளை உடனே அரசுடைமையாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். விலைவாசி உயர்வு, கூலி உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்திலும் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ3,500 வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். அத்துடன் கரும்பு விவசாயிகள் கூட்டுறவு மற்றும் பொது சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வெட்டி அனுப்பவும் சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும்.

அதேபோல் விவசாயிகள் கரும்பு வெட்டிய 15 நாட்களுக்குள் ஒட்டுமொத்த நிலுவைத் தொகையை வழங்கிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP