சாதி மத கட்சி எல்லைகளைக் கடந்து
தமிழராய் ஒன்று கூடுவோம்! வாரீர்! வாரீர்!!
தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மகிந்த இராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து செப்டம்பர் 20-ல் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
புத்தம் பேசிக்கொண்டே அப்பாவி ஈழத் தமிழர்கள் மீதும், தமிழக மீனவர்கள் மீதும் நித்தம், நித்தம் யுத்தம் செய்து வரும் சிங்கள இனவெறி அரசின் அதிபர் மகிந்த இராஜபக்சேவின் இந்திய வருகையைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
2011 நவம்பரில் நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்துப் பேசுகிற பா.ஜ.க. இன்று பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மத்தியப் பிரதேசம் ராஞ்சியில் நடக்கும் புத்தர் விழாவிற்குப் பவுத்த சிங்கள இனவெறி கொண்ட இராஜபக்சேவை அழைத்திருப்பது புத்தரின் அன்பு, அகிம்சை நெறிகளுக்கே களங்கத்தை ஏற்படுத்தும் செயல் கண்டிக்கத் தக்கதாகும். ஐ.நா.வில் உறுப்பு நாடாக உள்ள இலங்கை எந்தச் சர்வதேசச் சட்டத்தின் கீழ் அப்பாவி ஈழத்தமிழர்களை இலட்சக்கணக்கில், தடைவிதிக்கப்பட்ட குண்டுகளை வீசிக் கொன்றது. தென்னாப்பிரிக்கா, பாலஸ்தீனம், வங்கதேசம், கொசாவோ, கிழக்கு திமோர், தெற்கு சூடான் போன்ற நாடுகளில் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்த இந்தியா, ஏன் ஈழத்தமிழர் இனப்படுகொலையை இதுவரை கண்டிக்கவில்லை?
780 பேர்கள் கொல்லப்பட்டதற்கு லிபியா நாட்டின் மீது போர்க்குற்ற விசாராணை நடத்துவதை ஆதரிக்கும் இந்தியா இலட்சக்கணக்கில் தமிழர்களைக் கொன்ற இலங்கை மீது மட்டும் போர்க்குற்ற விசாரணை நடத்தக் கேட்க மறுப்பது ஏன்? நாடாளுமன்றத்தில் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்லக்கூடாதென்று அவைக் குறிப்பிலிருந்து நீக்குகின்ற காங்கிரசு அரசு, இன்றைய வரையில் இலங்கை மீது அய்.நா. மன்றம் போர்க்குற்ற விசாரணை நடத்தாமல் இருக்கப் பகீரதப் பிரயத்தனம் செய்து தடுத்து வருவதைச் சர்வதேச நாடுகள் வியப்புடன் பார்க்கின்றன.
இந்தியத் தமிழர்கள் என்றாலே மாற்றான்தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்வதையே தனது வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இராஜீவ் கொலைக்கு முன்னரும் கூட மத்தியில் ஆளும் காங்கிரசு அரசு தமிழின விரோதப் போக்கில் நடந்து கொள்வதைப் பல காரணங்களால் நம்மால் உறுதிப்படுத்த முடியும்.
விடுதலை பெற்ற பிறகு பர்மாவிலிருந்து தமிழர்கள் அகதிகளாக இந்தியாவிற்கு விரட்டி அடிக்கப்பட்ட போது பிரதமர் நேரு அரசு, தமிழர்களின் உடைமைகளை மீட்டுத் தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருமதி பண்டாரநாயகா ஆட்சியில் 10.50 இலட்சம் இலங்கை மலையகத் தமிழர்கள் ஒப்பந்தம் போட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட பிரதமர்லால் பகதூர் சாஸ்திரி அரசு துணை போனது. சீனாவைப் பகைத்துக் கொண்டாலும் பரவாயில்லை என்று திபெத்தின் பவுத்த அகதிகளை வசதி வாய்ப்புகளோடு இந்தியாவில் வாழ வழிவகை செய்கிறது.
திபெத்தில் சுதந்திர நாடு அமைக்க விரும்பும் தலாய் லாமாவை இங்கு அரச விருந்தாளியாக வைத்து மரியாதை செய்கிறது. ஆனால் ஈழத் தமிழர்களுக்கு மட்டும் பிற அகதிகளுக்குத் தரும் வசதிகளைக் கூட செய்து தர மறுக்கிறது. மாறாக, இலங்கை அரசின் விருப்பப்படி, விடுதலைப் புலிகள் என்ற முத்திரை குத்தி சிறப்பு முகாம்களில் அடைத்து ஈழத்தமிழர்களை வதை செய்கிறது. காங்கிரசின் தமிழின விரோதப் போக்கிற்கு மிகப் பெரிய அத்தாட்சியாக 2009 - மே, முள்ளிவாய்க்கால் போரில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது, 7 1/2 கோடித் தமிழக மக்களின் வேண்டுகோளை ஏற்று போரைத் தடுத்து தமிழர்களைக் காப்பாற்றத் தவறியது காங்கிரசு அரசு.
ஒருபக்கம் இலங்கையைப் போர்க்குற்ற விசாரணையிலிருந்து காப்பாற்ற முயற்சிக்கும் இந்திய அரசு, மறுபக்கம் சொந்த நாட்டு மீனவர்கள் 560க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றும், இதுவரை அவர்களைத் தட்டிக் கேட்கவும் அஞ்சுகிறது. இத்தாலி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 2 இந்திய மீனவர்களுக்கு, அதாவது கேரள மீனவர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நட்ட ஈடு பெற்றுத் தருகிறது. ஆனால் 560க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இலங்கையிடமிருந்து ஒரு ரூபாய் கூட நிவாரணம் பெற்றுத் தரவில்லை. இதற்காக இலங்கை கடற்படையினர் மீது எவ்வித வழக்கும் இதுவரை போட்டது கிடையாது. ஆற்று நீர்ச் சிக்கலில் காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, தென்பெண்ணை ஆறுகளில் தமிடிநநாட்டின் சட்டப்படியான உரிமைப் பங்கினைக் கர்நாடக, கேரள, ஆந்திரஅரசுகள் தர மறுக்கின்றனர். நீதிமன்றத் தீர்ப்புகளை காலில் போட்டு மிதிக்கிற மாநில அரசுகளைத் தட்டிக் கேட்கத் தயங்குகிறது மத்திய அரசு.
ஆனால், நெய்வேலியில் உற்பத்தி ஆகும் 2750 மெகா வாட் மின்சாரத்தில் 90 சதவீதத்தை தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் மாநிலங்களுக்குத் தாரை வார்க்கிறது. இந்திய ஒருமைப்பாடு என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களை மட்டும் இப்படி ஓரவஞ்சனை செய்வது ஏன்? இனப் படுகொலை செய்த இலங்கை அதிபர் இராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கு இணங்க மறுக்கும் இலங்கை மீது நெருக்கடி தர பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரசு உட்பட அனைத்துக் கட்சிகளும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி 2 ஆண்டுகள் ஆகியும் கூட, மத்திய அரசு இதுவரை அதுகுறித்து வாயே திறக்கவில்லை. இதுதான் கூட்டாட்சித் தத்துவத்திற்கு மத்திய அரசு தரும் மரியாதையா? பற்றியெரியும் தீயில் பட்டாசைப் போடுவதைப் போல, தமிழகமே கொந்தளித்து எழுந்து கோரிக்கை வைத்தும், போராடியும், மத்திய அரசு அலட்சியமாக, இலங்கை நட்பு நாடு, அதனால் 450க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் இந்தியாவில் பயிற்சி தருவோம் என்று ஆணவத்தோடு தமிழர்களின் உணர்வுகளுக்கு சவால் விடுகிறது மத்திய அரசு.
இந்தியாவைவிட, சீனா பாகிஸ்தானை எப்போதும் ஆதரித்துவரும் இலங்கை நட்பு நாடு என்றால், இந்தியாவிற்குள் வாழும் 7 1/2 கோடித் தமிழர்கள் மட்டும் எதிரிகளா? மத்திய அரசு மனசாட்சியோடு இதற்குப் பதில் சொல்லட்டும். எனவே, தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடுவதை வாடிக்கையாகச் செய்துவரும் மத்திய அரசின் தமிழின விரோதப் போக்கை எதிர்த்தும், நம் தமிழின உறவுகளைக் கொன்றொழித்த இலங்கை அதிபர் இராஜபக்சே ராஞ்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் கேட்டு 20.9.2012 வியாழன் அன்று காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் இரயில் மறியல் அறப்போராட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொறுப்பாளர்களும் தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள்.
Read more...