நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கூட்டணி அமைக்காது: பண்ருட்டி தி. வேல்முருகன் அறிவிப்பு
திங்கள், 21 அக்டோபர், 2013
தஞ்சை ரயில் நிலையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் நேற்று (20.10.2013) அளித்த பேட்டி:
பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் ரெயில் பாதை திட்டத்தை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக சென்னை மற்றும் பிற மாநிலங்களுக்கு புதிய ரெயில்களை இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் அகல ரெயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
தஞ்சை மாவட்டத்தையும், கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் அணைக்கரை பாலம் தொடர்ந்து பழுது அடைந்து வருவதால் அங்கு புதிய பாலம் கட்டி பொதுமக்கள் மற்றும் பஸ், கனரக வாகனங்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தினை மேற்கொள்ள வேண்டும். தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் காவிரி பகுதி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் துயர் துடைக்கும் வகையில் பயிர்க்கடன், பயிர் தெளிப்பான், உரக்கடன் போன்றவற்றை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோத செயல்களை எடுத்துரைக்கும் வகையில் பிரசாரம் செய்வோம். அதே போல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுடன் எங்கள் கட்சி கூட்டணி அமைக்காது. பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்றும் சாதி கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவோம் என்றும் கூறும் கட்சிகளை தமிழக மக்கள் புறக்கணித்து தக்க பாடம் புகட்ட வேண்டும்.
ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இது குறித்து எங்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி கலந்து பேசி முடிவு செய்து அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் தமிழ்நேசன், மாவட்ட தலைவர் கார்த்திகேயன், தஞ்சை மாவட்ட செயலாளர் வேலுமுத்து மாரியப்பன், இளைஞரணி மாவட்ட செயலாளர் பாபு, நகர செயலாளர் முகமதுஎகியா, தஞ்சை ஒன்றிய செயலாளர் தீனா, திருவையாறு ஒன்றிய செயலாளர் கஜேந்திரன், நகர இளைஞரணி செயலாளர் முகமது கதிர்அலி, துணைத் தலைவர் முத்துதமிழ்செல்வன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக