இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே 50 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

புதன், 16 அக்டோபர், 2013

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (15.10.2013) மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வை.காவேரி, எம்.எஸ்.சண்முகம், ப.காமராஜ் மாநில தொழிற்சங்க தலைவர் சைதை சிவராமன், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் சத்திரியன் து.வெ.வேணுகோபால், செந்தில்குமார், துணைத் தலைவர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். துணைப் பொதுச் செயலாளர்கள் ஆர்.பி.தமிழ் நேசன், சத்திரியன் து.வெ.வேணு கோபால், தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் ஜேசுவா, தென் சென்னை மாவட்ட செயலாளர் தேவராஜ், வட சென்னை ஆறுமுகம், இளைஞரணி அமைப்பாளர் அப்துல், பகுதி செயலாளர் வீரராகவன் மாவட்ட மகளிரணி வெள்ளையம்மாள் உள்பட தமிழ் நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி  தலைவர் தி.வேல்முருகன் பேசியது:–

சர்வதேச போர்க் குற்றவாளி ராஜபக்சே தலைமையில் இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பது ஒட்டு மொத்த தமிழர்களின் நிலையாக உள்ளது. எனவே மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த மாநாட்டி பங்கேற்க கூடாது. தமிழ் ஈழ மண்ணில் ஐ.நா.வின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை மற்றும் தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி ஈழத் தமிழர்களை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனே விடுதலை செய்ய வேண்டும்.

இலங்கை ராணுவத்தால், தினமும் திட்டமிட்டு தமிழக மீனவர்களை கைது செய்வதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி மத்திய அரசு இலங்கைக்கு எந்தவித ராணுவ உதவிகள் மற்றும் போர்க் கப்பல்களை வழங்க கூடாது.

மேலும் இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்க கூடாது. இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை வாழ்வுரிமை வழங்க வேண்டும். மத்திய அரசு இதில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு வேல்முருகன் பேசினார்.

இந்தியா இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி சட்டமன்ற தீர்மானம் இயற்ற வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்தார் பண்ருட்டி வேல்முருகன். இலங்கைக்கு எதிரான போராட்டங்களை பொறுத்தவரை இவ்வளவு பெரிய கூட்டத்தை அண்மையில் யாருமே கூட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
காஞ்சி மக்கள் மன்றம் கலைக் குழு சார்பில் தமிழீழ விடுதலை குறித்த எழுச்சிப் பாடல்கள் மேடையில் இசைக்கப்பட்டது. பறை இசை முழங்க, இளைஞர் பட்டாளம் வீறு கொண்டு எழுந்ததை அங்கு காண முடிந்தது. சாரை சாரையாக மக்கள் கடலூர், பண்ருட்டி பகுதியில் இருந்து ஊர்திகளில் குவிந்த வண்ணம் இருந்தனர். கூட்டம் நடைபெறுகையில் மேலும் பல கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திற்கு வந்த வண்ணமே இருந்தனர். எங்கு திரும்பினும் மக்கள் வெள்ளம் காணப்பட்டது. இளைஞர்கள் பல்லாயிரம் பேர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டனர். பண்ருட்டி வேல்முருகன் இவ்வளவு பெரிய போராட்டத்தை முன்னெடுத்த காரணத்தால், மற்ற கட்சிகளும் தங்கள் பலத்தை காட்டி இது போன்ற மக்கள் திரள் போராட்டத்தை முன்னெடுத்தால் ஆட்சியாளர்கள் அடிபணிவார்கள் என்பதில் ஐயமில்லை.

கோரிக்கைகள் வருமாறு:


*சர்வதேச போர் குற்றவாளி ராஜபக்சே தலைமையில் இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தியும்

* செங்கல்பட்டு பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடவேண்டியும்,தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக்கோரியும்

*இலங்கை ராணுவத்தால் தினமும் திட்டமிட்டு தமிழக மீனவர்களை கைது செய்வதை மத்திய அரசு தடுத்திட கோரியும். இலங்கை சிறையில் வாடும் அப்பாவி தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும்

*இந்திய அரசு இலங்கைக்கு எந்தவிதமான ராணுவ உதவிகளையும் செய்யக்கூடாது எனவும், போர்க்கப்பல்கள் வழங்கக்கூடாது எனவும், இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்ககூடாது என வலியுறுத்தியும்

* இந்தியாவில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்துவது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP