பா.ம.க. இடம் பெறும் அணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம்பெறாது - பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவிப்பு
செவ்வாய், 24 செப்டம்பர், 2013
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.பண்ருட்டி வேல்முருகன் 23/09/2013 அன்று சேலத்தில் அளித்த பேட்டி:
இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தி இலங்கை தமிழர்களின் உரிமைகளை வழங்க வேண்டும். தமிழ் ஈழ உணர்வாளர்களை மதிக்கும் வகையில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமரோ அவரது பிரதிநிதியோ பங்கேற்க கூடாது. மீறி பங்கேற்றால் அக்டோபர் மாதம் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்றவை அதிகரித்து வருகிறது. கடுமையான சட்டம் மூலம் முதல்வர போர்க்கால நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். ஆடிட்டர் ரமேஷ் கொலையில் இது வரை உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
ஏற்காடு தொகுதியில் கட்சி அமைப்பு பணிகள் நடந்து வருகிறது. தேர்தல் அறிவித்த பின்பு எங்கள் முடிவுகள் அறிவிக்கப்படும். ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ. மரணம் அடைந்து விட்டால் அவருக்கு பதிலாக அதே கட்சியை சேர்ந்த ஒரு வரை எம்.எல்.ஏ.வாக நியமிக்கலாம். அல்லது அதற்கு அடுத்த ஓட்டு வாங்கியவரை எம்.எல்.ஏ.வாக நியமிக்கலாம் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
பா.ம.க. தலைவர் ராமதாஸ் தனித்து போட்டியிடுவோம் என்றார். இதையாவது அவர் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தேர்தலில் பா.ம.க. இடம் பெறும் அணியில் ஒரு போதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம்பெறாது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில பொது செயலாளர் காவேரி, மாநில அமைப்பு செயலாளர் காமராஜ், மாநில துணை பொது செயலாளர்கள் எஸ்.கே. சக்திவேலன், ஜெயமோகன், சத்தியமூர்த்தி மற்றும் ஆறுமுகம், ஜெயலட்சுமி பாலு, அழகேசன், பாலு, கராத்தே வெங்கடேசன், சபரிஷ், ராகுல், ராஜ்குமார், ரகு, சரவணமூர்த்தி, முனிரத்தினம், மலர் ராமலிங்கம், சரவணன், கணேசன், ஏ.பி.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக