கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் இறந்த 4 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி: பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்பு
புதன், 11 செப்டம்பர், 2013
கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் இறந்த 4 பேருக்கு
அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி 10/09/2013 அன்று கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை
போராட்ட பந்தலில் நடந்தது. நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களின்
கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவ மக்களும், போராட்டக்
குழுவினரும் கலந்து கொண்டனர்.
இதையொட்டி காலை 10 மணி அளவில் 4 பேர்
உருவப் படங்களுக்கும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. மவுன
ஊர்வலமும் நடைபெற்றது. இடிந்தகரை, கூடங்குளம், விஜயாபதி கிராமங்களில்
கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பின்னர் நடந்த கூட்டத்துக்கு
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். நாம் தமிழர்
இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான், அவருடைய மனைவி கயல்விழி, தமிழக வாழ்வுரிமைக்
கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன்,
தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி மணி அரசன், திராவிடர் விடுதலை கழகம் மணி,
கம்யூனிஸ்டு மக்கள் விடுதலை கட்சி மீ.த.பாண்டியன், பூவுலகின் நண்பர்கள்
அமைப்பு சுந்தர்தாசன், தமிழ் தேசிய இயக்கம் பரந்தாமன், ம.தி.மு.க. கொள்கை
பரப்பு செயலாளர் அழகுசுந்தரம், மே 17 இயக்கம் திருமுருகன், மனிதநேய மக்கள்
கட்சி தலைவர் ஜவாருல்லா எம்.எல்.ஏ., தமிழ்தேச மக்கள் கட்சி தமிழ்நேயன்,
தமிழக முன்னேற்ற கழகம் அதியமான், போராட்டக்குழு நிர்வாகிகள் புஷ்பராயன்,
முகிலன், கெபிஸ்டன், மில்டன், மைபா ஜேசுராஜ், பாதிரியார் ஜெயக்குமார் உள்பட
பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. கூடங்குளம்
போராட்டத்தை 2 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் மக்களை பாராட்டுவது,
2. போராட்டத்தில் ஈடுபட்டதற்காக உயிரிழந்த 4 பேருக்கு அஞ்சலி செலுத்துவது,
3. கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று கூறி மக்களை திசை
திருப்புகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது.
4. கூடங்குளம்
அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூடக் கோருவது,
5. போராட்டம் நடத்திய மக்கள்
மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்துவது,
6. கூடங்குளம் அணு உலை
எதிர்ப்பு போராட்ட ஆதரவு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தமிழக தலைமைச் செயலாளர்,
உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரை வருகிற 17–ந் தேதி சந்தித்து
மனு கொடுப்பது,
7. காந்தி ஜெயந்தி அன்று மாவட்ட தலைநகரங்களில் கூடங்குளம்
அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்றும், வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்
என்றும் வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டம் நடத்துவது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக