இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ராணுவப் பயிற்சி வழங்க தி. வேல்முருகன் கண்டனம்

செவ்வாய், 5 ஜூன், 2012

சென்னை: 

இலங்கைக்கு இந்தியா ராணுவப் பயிற்சி வழங்கக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவும் அமெரிக்காவும் உயர் ராணுவப் பயிற்சி வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளன என்று இலங்கை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகி உள்ள செய்தி வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சுவதாகவே உள்ளது.

இலங்கையின் பூர்வகுடிகளான எங்கள் தொப்புள் கொடி உறவுகளான தமிழ் மக்களை லட்சக்கணக்கில் ஈவிரக்கமின்றி படுகொலை செய்து சர்வதேசத்தின் முன் போர்க்குற்றவாளியாக நிறுத்தப்பட்டுள்ளார் ராஜபக்சே.

தமிழ் மக்களுக்கு எதிராக சர்வதேச நாடுகள் தடை விதித்திருக்கக் கூடிய கொத்து குண்டுகளை இலங்கை ராணுவம் வீசியதாக ஐக்கிய நாடுகள் சபையின் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரே குற்றம்சாட்ட்டியுள்ளனர். போர் முடிந்தது.. மறுசீரமைப்பு நடைபெறுகிறது என்று சொல்லிக் கொண்டே இன்னமும் முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட முல்லைத் தீவுப் பகுதிகளில் ஒன்றரை லட்சம் தமிழர்களை முகாம்களிலே அடைத்து வைத்து நாள்தோறும் சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது இலங்கை ராணுவம். எம் தமிழ்ச் சகோதரிகளை விசாரணை என்ற பெயரில் வேட்டையாடி அவர்களது எதிர்காலத்தையே நாசம் செய்து வருகிற படைதான் இலங்கை ராணுவம். இத்தகைய ரத்தக்கறை படிந்த சிங்கள ராணுவத்துக்கு இந்திய ராணுவம் பயிற்சி கொடுப்பது என்பதை ஏற்கமுடியாது.

தமது விடுதலைக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி லட்சக்கணக்கான தமிழர்களை கொலை செய்த சிங்கள அரசு இப்போது இஸ்லாம் பயங்கரவாதம் என்ற முகமூடியைப் போட்டுக் கொண்டு தமிழ் முஸ்லிம்களை வேட்டையாடப் புறப்பட்டிருக்கிறது.

இலங்கையில் நடைபெற்று வரும் இஸ்லாமிய மதப்பள்ளிகளை கணக்கெடுப்பது, மசூதிகளைக் கணக்கெடுப்பது என்று ஏற்கெனவே தமிழ் முஸ்லிம்களை வேட்டையாடத் தொடங்கியிருக்கும் ராஜபக்சே அரசு இப்போது அல் குவைதா, தலிபான்கள் நடமாட்டம் என்ற பெயரில் மீண்டும் ஒரு இனப்படுகொலைக்கு தயாராகிவிட்டது.

மூன்றாண்டுகளுக்கு முன்பு இலங்கையின் வடக்கில் முள்ளிவாய்க்காலில் எத்தகைய கோரத்தை சிங்கள ராணுவமும் சர்வதேச நாடுகளும் செய்தனவோ அதே போன்ற இனப்படுகொலையை இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் கிழக்கிலும் நிகழ்த்தப் போகிறது என்பதற்கான முன் தயாரிப்புகளே இத்தகைய ராணுவப் பயிற்சிகள் என அச்சப்படுகிறோம். அல்குவைதா, தலிபான்கள் நடமாட்டம் என்ற பெயரில் இலங்கையின் கிழக்குப் பகுதியில் தமிழ் முஸ்லிம்கள் மீது சிங்கள ராஜபக்சே நடத்தப் போகும் இனப்படுகொலைக்கான இந்த ராணுவ பயிற்சியை இந்திய அரசு வழங்கக் கூடாது என்பதை அனைத்து தமிழ்த் தேசிய சக்திகளும் ஒன்றிணைந்து வலியுறுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP