என்னை பற்றிய குற்றசாட்டை நிரூபிக்க தயாரா : பண்ருட்டி தி.வேல்முருகன் கேள்வி

வெள்ளி, 4 நவம்பர், 2011

சென்னை: 

          நான் ஒருமையில் பேசியதாகவும், அதற்கு சிடி இருப்பதாகவும் கூறுகிறார்களே அதை அவர்கள் நிரூபிக்கட்டும். என்னிடமும் சிடி இருக்கிறது, அதை வெளியிட்டு ராமதாஸையும் மற்றவர்களையும் நான் அம்பலப்படுத்துவேன் என்று ஆவேசமாக கூறியுள்ளார் பாமகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ வேல்முருகன்.

நேற்று சென்னை வந்த வேல்முருகன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி

             ராமதாஸையும், வடிவேல் ராவணனையும் ஒருமையில் பேசியதாகக் குற்றஞ்சாட்டி என்னைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர். அக்டோபர் 30-ம் தேதி நடைபெற்ற செயற்குழுவிலும் இதற்கான விளக்கத்தை சொல்லியிருக்கிறேன். ஆவேசத்தில் "இவன் ஆண்டான்' என்று சொல்வது போலத்தான் ராமதாûஸத் தெரிவித்தேன். வடிவேல் ராவணனை இப்போதும் நான் மதிக்கிறேன். அவரை ஒன்றும் நான் சொல்லவில்லை. செல்லூர் குமார் என்பவர் தொடர்பாகத்தான் பேசினேன். இதை அவர்கள் ஏற்கவில்லை. நிர்வாகக் குழு கூட்டம் நடந்தபோது,

தனியறையில் வைத்து...

          தனியறையில் வைத்து, மொத்தம் 24 பேர் என்னை மிரட்டினார்கள். அங்கு எனக்கு நேர்ந்த கொடுமையைச் சொன்னால் தமிழகம் முழுக்கவே சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும். (இதைச் சொன்னபோது கண்ணீர் விட்டு அழுதார் வேல்முருகன்). என் குடும்பத்தாரைப் பற்றி கேவலமாகச் பேசினார்கள். இப்போதும் தொடர்ந்து உனக்கு விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டுகிறார்கள் என்றார். பணம் சேர்த்துவிட்டதாகக் கூறுகின்றனர். என்னுடைய மனைவி நகைகளை வைத்துதான் கட்சிப் பணிகளை ஆற்றியிருக்கிறேன். அவற்றைக்கூட மீட்க முடியாத நிலையில்தான் இப்போதும் இருக்கிறேன்.

          டிஜிபியிடம் இது தொடர்பாக புகார் தெரிவித்துள்ளேன். நான் எந்த நேரம் தொலைபேசியில் அழைத்தாலும் எடுங்கள் என்று கூறியுள்ளேன். என்னை கட்சியில் இருந்து நீக்கிய பிறகும் அதற்கு முன்பும் தொடர்ந்து தொலைபேசியில் மிரட்டி வருகின்றனர். இவர்கள் அனைவரும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லி மிரட்டுகின்றனர்.

           ராமதாஸை தகாத வார்த்தைகளால் நான் பேசியதாக சிடி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதைப் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிடட்டும். நானும் எனக்கு நேர்ந்தவற்றை சிடியாக வைத்துள்ளேன். அவற்றையும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிடுகிறேன். பாமக தொடங்கிய காலம் தொட்டு கட்சியில் இருந்து வருகிறேன். கட்சியின் அனைத்து ரகசியங்களும் எனக்குத் தெரியும். என்னை நிர்பந்தப்படுத்தினால் அவற்றை வெளியிடுவேன் என்பதை எச்சரிக்கையாகவே கூறிக்கொள்கிறேன்.

           பாமகவின் பொதுக்குழு உறுப்பினராக உள்ளேன். என்னை நீக்குவதற்கு பொதுக்குழு உறுப்பினர்களின் வாக்கெடுப்பு மூலமே முடிவு செய்ய முடியும். அதனால் பொதுக்குழு உறுப்பினர்களைச் சந்தித்து நியாயம் கேட்கப் போகிறேன். 1980-க்குப் பிறகு பாமகவில் இருந்து நீக்கப்பட்டவர்களையும் சந்தித்துப் பேசுவேன். இதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். அதேசமயம் எக்காரணத்தைக் கொண்டும் பாமகவில் இருக்க மாட்டோம். பாமகவைக் கைப்பற்றி நாங்கள்தான் உண்மையான பாமக என்பதை நிரூபிப்போம்.

          இனிமேல் ராமதாஸே கூப்பிட்டு எத்தனை பெரிய பதவியைக் கொடுத்தாலும் அதை நாங்கள் ஏற்க மாட்டோம். நாங்கள்தான் உண்மையான பாமக என்பதை நிரூபிப்போம். அவர்களிடமிருந்து பாமகவை கைப்பற்றுவோம் என்றார் வேல்முருகன். வேல்முருகனுடன், பாமகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் காவேரி, நெடுஞ்செழியன், சண்முகம், காமராஜ் ஆகியோரும் உடன் இருந்தனர்.

முன்னாள் தலைவர்களை சந்திக்க திட்டம்

            அடுத்த கட்டமாக பாமகவிலிருந்து நீக்கப்பட்ட கட்சியின் முன்னாள் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்களை நேரில் சந்தித்து தங்கள் பக்கம் இழுக்க திட்டமிட்டுள்ளார் வேல்முருகன்.இவர்கள் அனைவரையும் இணைத்த பின்னர் பாமகவுக்கு எதிராக முழு நீளப் போரில் அவர் குதிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP