கடலூரில் புதன்கிழமை நடைபெற்ற பா.ம.க. தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் எம்.எல்.ஏ. தி.வேல்முருகன் (முன் வரிசையில் இடமிருந்து 3-வது).
கடலூர்:
தனிக்கட்சி தொடங்குவதா, தனி இயக்கமா என்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும் என பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் தெரிவித்தார்.
கடலூரில் முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் புதன்கிழமை கூறியது
பொதுக்குழு உறுப்பினர்கள் 3 ஆயிரம் பேரால் நான் தேர்ந்து எடுக்கப்பட்டு இணைப் பொதுச் செயலாளரானேன். கட்சியின் 24 பேர் கொண்ட உயர்மட்டக்குழு என்னை நீக்க அதிகாரம் இல்லை. பொதுக்குழுவைக் கூட்டித்தான் முடிவு எடுக்க வேண்டும். உயர்மட்டக் குழுவில் 14 பேர்தான் உண்மையான உறுப்பினர்கள். 10 பேர் போலியானவர்கள். நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன். கட்சியில் இருந்து நீக்கப் பட்டவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசுவேன். அவர்களின் கருத்தை அறிந்த பின்னரே தனிக்கட்சியா, தனி இயக்கமா என்பதை முடிவு செய்வேன்.
நான் நீக்கம் செய்யப்பட்டற்கு கட்சித் தலைமை விளக்கம் அளிக்க வேண்டும். கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் எனது தரப்பு வாதத்தை எடுத்துக்கூற வாய்ப்பு அளிக்கப்படவில்லை. என் பின்னால் நிற்கும் இளைஞர் பட்டாளத்தை, தொண்டர்களை எந்த அரசியல் கட்சியிடமும் அடகு வைக்க மாட்டேன் என்றார் வேல்முருகன்.
முன்னதாக வேல்முருகன் உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், கடலூர் டவுன் ஹாலில் நடைபெற்றது. கடலூர் நேதாஜி சாலையில் உள்ள பா.ம.க. அலுவலகத்துக்கு வந்த வேல்முருகன், வழக்கம்போல் அலுவலகத்தில் உள்ள அறைக்குச் சென்றார். பின்னர் அதிர்வேட்டுகள் முழங்க டவுன் ஹாலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
பின்னர் கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் பேசுகையில்,
பல்வேறு கட்சிகளிடம் இருந்தும் எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் அவற்றை எல்லாம் நான் ஏற்கவில்லை. டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவருக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன். இருப்பினும் தீய எண்ணம் கொண்ட சிலர் என்னைப் பற்றி தவறான தகவல்களை கட்சித் தலைமைக்கு தெரிவித்து வருகிறார்கள். கட்சிக்காக கடுமையாக உழைத்த பலர், பல காலக் கட்டங்களில் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். கட்சியின் வளர்ச்சிக்காக நான் தெரிவித்த பல்வேறு ஆலோசனையையும், சுட்டிக் காட்டிய தவறுகளையும் எனக்கு எதிராகச் சிலர் திருப்பி விட்டனர் என்றார்.
Read more...