நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தி.வேல்முருகன் அறிமுகம் செய்யும் கூட்டம்

புதன், 23 மார்ச், 2011

நெய்வேலி:

      தொழிலாளர்களிடையே இவர் நிரந்தரத் தொழிலாளி, இன்னொருவர் ஒப்பந்தத் தொழிலாளி என பேதம் பார்த்து பணியாற்றவில்லை. அனைவரின் கோரிக்கைக்காகவும் நான் குரல் கொடுத்து போராடியிருக்கிறேன் என நெய்வேலியில் திங்கள்கிழமை நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வேல்முருகன் பேசினார்.  

              நெய்வேலித் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தி.வேல்முருகனை அறிமுகம் செய்யும் கூட்டம் நெய்வேலியில் உள்ள அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் குடியிருப்பில் திங்கள்கிழமை நடந்தது. இக்கூட்டத்திற்கு திமுக நகரச் செயலர் புகழேந்தி தலைமைவகித்தார். 

               அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேல்முருகனை அறிமுகம் செய்து வைத்து, அவருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என நெய்வேலி நகர திமுகவினருக்கு உத்தரவிட்டார்.  


இதைத்தொடர்ந்து நெய்வேலித் தொகுதி பாமக வேட்பாளர் தி.வேல்முருகன் பேசுகையில்,

                 ""நான் அடிப்படையில் திமுகவில் இருந்து பின்னர் பாமகவில் வளர்ந்து வந்தவன். எனது தொகுதிக்குட்பட்ட மக்களுக்காக நான் குரல் கொடுப்பதில் என்றைக்கும் தயங்கியது கிடையாது. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணம் உள்ளவன்.  திமுக தலைமைக்கும், பாமக தலைமைக்கும் இடையே ஒரு அணிலாக இருந்து தூது சென்று கூட்டணி அமைய காரணமாக இருந்துள்ளேன்.  

                என்னைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் தவறான அபிப்பிராயம் இருந்தால் அதை நேரிடையாக கேளுங்கள் நான் உங்களுக்கு பதில் கூற கடமைப்பட்டுள்ளேன்.  நான் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதிலும், இங்குள்ள ஜவகர் பள்ளி ஆசிரியர்கள் பிரச்னை, அப்ரண்டீஸ் இளைஞர்கள் பிரச்னை, வட்டம் 21-30 மக்களின் வாழ்வாதார பிரச்னை, ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்னை என அனைத்து பிரச்னைகளுக்கும் சட்டமன்றத்தில் குரல் கொடுத்து மாநில அரசின் கவனத்தை ஈர்த்துள்ளேன்.  

                நிரந்தரத் தொழிலாளர்களின் போனஸ், ஊக்கத்தொகை பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்ததோடு, இங்குள்ள தொழிற்சங்க நிர்வாகிகளோடு ஒன்றாக அமர்ந்து பிரச்னை முடியும் வரை அவர்களுக்காக போராடியிருக்கிறேன்.  எனது தொகுதி வாசிகளின் பிரச்சனைகள் தீர 24 மணிநேரமும் உழைக்க நான் காத்திருக்கிறேன்'' என்றார் வேல்முருகன்.,  

                   கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மூமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நெய்வேலியில் வசிக்கும் பண்ருட்டி திமுக வேட்பாளர் சபா.ராஜேந்திரனும் வேல்முருகனுக்கு ஆதரவு அளிக்கவேண்டுமென திமுகவினரை கேட்டுக்கொண்டார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP