தமிழகத்தில் ஈழத் தமிழர் ஆதரவு மேடையானாலும், அரசியல் மேடையானாலும்... தனது கனல் பேச்சால் அனல் பறக்கவைப்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளரும், நெய்வேலி தொகுதியின் பா.ம.க வேட்பாளருமான வேல்முருகன்!
''எதிரெதிர் இயக்கங்கள் என்று சொல்லப்படுகிற பா.ம.க-வும் சிறுத்தைகளும் ஒரே அணியில் தேர்தலை சந்திப்பது எந்த மாதிரியான விளைவை ஏற்படுத்தும்?''
''தமிழகத்தில் வன்னியர்களும், ஆதிதிராவிடர்களும் பூர்வீகக் குடிகள். ஆரம்ப காலங்களில் எங்களிடையே சிறு பிரச்னைகள், பூசல்கள், சலசலப்புகள் இருந்தது உண்மைதான். ஆனால், 'அவற்றை எல்லாம் மறந்து இரு கட்சியினரும் ஒன்றாக இணைந்து தமிழர்களுக்காக அரசியல்ரீதியாகப் பாடுபட வேண்டும்’ என்பதுதான் மருத்துவர் அய்யாவுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தோழர் திருமாவளவனுக்கும் ஆசை.
அதைத்தான் ஒவ்வொரு கீழ்மட்டத் தொண்டனும் இது வரை எதிர்பார்த்தான். தேர்தல் களத்தில் வெவ்வேறு அணியில் தேர்தலை சந்திக்கவேண்டிய சூழல் ஏற்பட்டபோதும், தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு, 'தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ என்கிற ஓர் அமைப்பை உருவாக்கி, இரு இயக்கங்களும் இணைந்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஈழத் தமிழர் பிரச்னைகளுக்காகக் களத்தில் போராடி வந்தோம். இப்போதுதான் டாக்டர் கலைஞரின் தலைமையிலான கூட்டணியில் இரு இயக்கங்களும் ஓர் அணியில் இருந்து, தேர்தல் களத்தை சந்திக்கக்கூடிய வாய்ப்பு வந்தது. அய்யாவும், தோழர் திருமாவும் இணைந்து தொடர்ந்து பல பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்து வந்துள்ளதால், இந்தத் தேர்தலில் எந்தப் பிரச்னையும் இல்லை.''
''வட மாவட்டங்களில் தங்கள் கட்சிக்குத்தான் செல்வாக்கு அதிகம் என்று விஜயகாந்த் சொல்கிறாரே?''
''கடந்த காலங்களில் வட மாவட்டங்களில், விடுதலைச் சிறுத்தைகளில் இருந்தும் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்தும் இளைஞர்கள் விஜயகாந்த் பக்கம் சென்றார்கள் என்பது உண்மை. விடுதலைச் சிறுத்தைகள் கொடி பறக்காத இடத்தில்கூட விஜயகாந்த் கொடி பறந்தது. அதேபோல பாட்டாளி மக்கள் கட்சி அமைப்புகள் இல்லாத இடத்தில்கூட விஜயகாந்த் ரசிகர்கள் இருந்தார்கள். இளைஞர்களின் சினிமா மோகம்தான் அதற்குக் காரணம். ஆனால், தொடர்ச்சியான பிரசாரம் நடத்தி, இளைஞர்களை ஒருங்கிணைத்து உள்ளோம். கடந்த காலங்களில் சிறுபான்மையினர் மட்டுமே தமிழகத்தை ஆண்டு வந்தனர். அதற்கு விதிவிலக்கானவர்கள், பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் இருவரும்தான். இவர்களைத் தவிர, தமிழர்கள் அல்லாதவர்களும், விவசாயத்தைப்பற்றித் தெரியாதவர்களும், இந்த மண்ணின் வரலாறு அறியாதவர்களும்தான் நம்மை ஆண்டனர். இப்போது, அந்த வரிசையில் வருகிறவர்தான் விஜயகாந்த். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாட்டாளி மக்கள் கட்சி ஃபீனிக்ஸ் பறவையைப்போல் புத்துணர்ச்சியோடு எழுந்துள்ளது. அதோடு, வெவ்வேறு அணிகளில் இருந்த சிறுத்தைகளும் நாங்களும் ஓர் அணியில் இருப்பதால், தே.மு.தி.க போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் அதை வீழ்த்துவோம். வட மாவட்டங்களில் விஜயகாந்த்துக்கு மறக்க முடியாத பாடம் புகட்டுவோம்!''
''ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக, பா.ம.க-வும் சிறுத்தைகளும் பல போராட்டங்கள் செய்துள்ளன. ஆனால், அதற்கு நேரெதிர் கொள்கையில் இருக்கும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து இருப்பது சரியா?''
''தேர்தல் என்பது வரும், போகும். அது வேறு! ஆனால், ஈழத் தமிழர் ஆதரவு எங்கள் ரத்தத்தில் கலந்தது. என்றைக்கும் நிலைத்து இருக்கும். 'மேதகு பிரபாகரன் என் இதயத்தில் வாழ்கிறார்’ என்பதை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில், நான் சட்டமன்றத்திலேயே பதிவு செய்து இருக்கிறேன். தனி ஈழம் அமைவது என்பது, இந்தியாவுக்கே பாதுகாப்பான ஒன்று. அப்போதுதான் அண்டை நாடுகள் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை சமாளிக்க முடியும். எனவே, மத்திய அரசு தனி ஈழம் அமைவதற்கு உதவ வேண்டும். அல்லது குறைந்தபட்சம், தனி ஈழம் அமைய இடைஞ்சலாவது தராமல் இருக்க வேண்டும். தேர்தலுக்காகவும், கூட்டணிக்காகவும் எங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை!''
''கடந்த மூன்று முறையும் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர், இப்போது நெய்வேலி தொகுதிக்கு வந்தது ஏன்?''
''மறு சீரமைப்பில் என் தொகுதியில் பெரிய அளவு மாற்றம் இல்லை. பண்ருட்டி நகரத்தை மாற்றிவிட்டு, அதற்கு பதிலாக 50 ஆயிரம் வாக்குகள் கொண்ட நெய்வேலி நகரத்தைப் புதிதாக இணத்துள்ளார்கள், அவ்வளவுதான். மற்றபடி, 90 சதவிகிதம் மக்கள் எனக்கு அறிமுகமான, தொடர்ந்து வாக்களித்துவந்த பழைய வாக்காளர்களே! புதிதாக வந்த நெய்வேலியிலும்கூட நான், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்காக பல போராட்டங்களை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை வெற்றிபெறச் செய்து உள்ளேன். அவர்களும் அறிமுகம் ஆனவர்கள்தான். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 13,000 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்காக 40 நாட்கள் அனைத்துக் கட்சியினரோடும் சேர்ந்து போராடி இருக்கிறேன். எனவே, இந்த மக்களைப் பொறுத்த வரை, நான் ஒரு செல்லப் பிள்ளை. இவர்களுக்கும் நான் பாதுகாவலன். என் வெற்றி நிச்சயம்!''