சிலாபம் முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேர்த்திக் கடன் நிகழ்ச்சிக்கு தடைவிதித்த மகிந்த ராஜபக்சேவிற்கு பண்ருட்டி தி. வேல்முருகன் கண்டனம்
வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012
இலங்கையின் புகழ்மிக்க சிலாபம் முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேர்த்திக் கடன் நிகழ்ச்சிக்கு தடைவிதித்த மகிந்த ராஜபக்சேவிற்கு பண்ருட்டி தி. வேல்முருகன் கண்டனம் தெரவித்துள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை :
ஈழத் தமிழர் வழிபாட்டு உரிமை பறிப்புக்கு கண்டனம்
இலங்கையின் புகழ்மிக்க சிலாபம் முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த ஆடு,கோழி நேர்த்திக் கடன் நிகழ்ச்சியை சிங்கள பேரினவாதி மகிந்த ராஜபக்ச இந்த ஆண்டு தடை செய்திருப்பது தமிழர்களின் வழிபாட்டுரிமையை பறிக்கும் செயல் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் தெரிவிக்கிறது. தமிழீழத்தின் ஒரு பகுதியான சிலாபத்தில் இருக்கும் முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோயில் ஆயிரமாயிரமாண்டுகளாக தமிழர்களால் வழிபட்டு வரக் கூடிய ஆலயம். இந்தக் கோயிலுக்கு சோழ, பாண்டிய மன்னர்கள் சிறப்பு செய்திருக்கின்றனர். ஆண்டுதோறும் ஆவணி மாதம் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடி திருவிழா நடத்துவதும் தங்களது நேர்த்திக் கடனாக ஆடு,கோழிகளை பலியிடுவதும் காலம்காலமாக கடைபிடித்து வரும் மரபு.
கடந்த ஆண்டு கொலைவெறியன் ராஜபக்சே அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் ரவுடி அமைச்சர் என பெயரெடுத்த சிங்களப் பேரினவாதி மேர்வின் சில்வாவை தூண்டிவிட்டு புத்த தேசத்தில் ஆடு,கோழிகளை பலியிடுவதா? என தமிழகளின் திருவிழாவில் பெரும் வன்முறை அரங்கேற்றப்பட்டது. இந்த ஆண்டும் இதே மேர்வின் சில்வா மூலம் வன்முறையை தூண்டிவிட முயற்சித்தனர். இதன் ஒரு பகுதியாக சில நாட்களுக்கு முன்பு புத்த பிக்குகள் முன்னேஸ்வரம் கோயிலின் முன்பு ஒன்று கூடி பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வன்முறையைத் தூண்டியிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து முன்னேஸ்வரம் கோயிலில் ஆடு,கோழி பலியிடுவதற்கு சிங்கள கொலைவெறியன் மகிந்த ராஜபக்சே தடை விதித்திருக்கிறான். இதனால் ஆயிரமாயிரமாண்டுகளாக தமிழர்கள் கடைபிடித்து வந்த வழிபாட்டுரிமை பறிபோய்விட்டது.
ஈழத் தமிழர்கள் தங்களது அரசியல் உரிமையை வென்றெடுக்க நடத்திய போராட்டத்தை வல்லாதிக்க சக்திகளுடன் பறித்து அவர்களது வாழ்வுரிமையையே இல்லாது ஒழித்த சிங்கள பேரினவாதம் தமிழ் பேசும் முஸ்லிம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. அவர்களின் வழிபாட்டுத் தலங்களை நிர்மூலமாக்கியது. தற்போது தமிழர்களின் வழிபாட்டு உரிமைகள் மீதும் கைவைத்திருக்கிறது. தமிழர் தேசமெங்கும் புத்த விகாரைகளை திணித்து இலங்கையை புத்தமத நாடாக்கும் முயற்சிகள் ஏற்கெனவே அரங்கேற்றப்பட்டு வரும் நிலையில் தமிழர்களின் கலாச்சார, வழிபாட்டு உரிமையை அடியோடு தடை செய்திருப்பதை இந்திய மத்திய அரசு இப்போதாவது தட்டிக் கேட்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் தங்களது அரசியல், பண்பாட்டு உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ள தமிழீழத் தனியரசு ஒன்றுதான் தீர்வாக இருக்க முடியும் என்பதையே இத்தகைய பேரினவாதிகளின் அட்டூழியங்கள் வெளிப்படுத்துகிறது என்பதையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது. ஈழத் தமிழர்களுக்கான தமிழீழத் தனியரசைப் பெற்றுக் கொடுப்பதன் மூலமே ஈழத் தமிழர் நலனைப் பேண முடியும் என்பதை இனியாவது இந்திய மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக