வீட்டை அபகரித்ததாக பேராசிரியர் தீரன், காவேரி, சண்முகம் மீது பொய் புகார்: பண்ருட்டி தி.வேல்முருகன் அறிக்கை
செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012
சென்னை:
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை சேப்பாக்கம் மசூதி தெருவைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவர் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் தமது வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவருடன் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் என் மீதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மூத்த தலைவர்களான பேராசிரியர் தீரன், காவேரி, சண்முகம் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுக்களைக் கூறியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட யூனூஸ்கான், பெண்களுக்கு கணினி பயிற்சியை இலவசமாக தமது சொந்த செலவில் வழங்குவதற்காக ஒரு மையம் அமைத்திருப்பதாகவும் அதை திறந்து வைக்குமாறும் எங்களிடம் கேட்டுக் கொண்டார். அதேபோல் ஏழைகளுக்கு வேட்டி-சேலை என நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் யூனூஸ்கான் எங்களை அழைத்திருந்தார். ஒரு பொறுப்புள்ள சமூக தலைவர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் அந்த விழாவுக்கு சென்று கலந்து கொண்டோம்.
இதைத் தவிர்த்து யூனூஸ்கானுக்கும் அவரது வீட்டு உரிமையாளருக்கும் உள்ள பிரச்சினை பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் மிரட்டியதாக சொல்லுகிற முகமது இஸ்மாயில் என்பவரை நாங்கள் யாரும் நேரில் பார்த்ததுகூட கிடையாது. அப்படிப்பட்ட நிலையில் முகமது இஸ்மாயில் என்பவர் கொடுத்துள்ள புகாரானது எங்களது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக