இலங்கையில் நடைபெறும் வர்த்தகக் கண்காட்சியில் தமிழக நிறுவனங்கள் பங்கேற்றதற்கு தி. வேல்முருகன் கண்டனம்
ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக சட்டமன்றத் தீர்மனத்தை மதிக்காமல் இலங்கையில் நடைபெறும் வர்த்தகக் கண்காட்சியில் தமிழக நிறுவனங்களான டிவிஎஸ், அசோக் லேலண்ட் போன்றவை பங்கேற்றுள்ளமைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கைத் தீவில் பல லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த போர்க்குற்றவாளியான சிங்கள அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் ஒட்டுமொத்த நிலைப்பாடு. இலங்கை அரசு பொருளாதாரத் தடையை வலியுறுத்தி தமிழக சட்டமன்றம் தீர்மானமும் நிறைவேற்றியிருந்தது. ஆனால் இத்தீர்மானத்தை பற்றி கொஞ்சமும் பொருட்படுத்தாமல் கவலைப்படாமல் ரத்தக் கறை படிந்த சிங்கள இனவெறி அரசுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த 100க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களை இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த்சர்மா தலைமையில் இந்திய அரசே இலங்கைக்கு அழைத்துச் சென்றிருப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் கூட இந்திய அரசு இப்படி ஒரு அலட்சியமான யதேச்சதிகாரப் போக்குடன் நடந்து கொள்வதை தமிழக அரசும் அனைத்து அரசியல் கட்சிகளும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. மேலும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் தமிழர்களின் உழைப்பை உறிஞ்சி கொள்ளை லாபமடிக்கும் அசோக் லேலண்ட், டி.வி.எஸ். போன்ற நிறுவனங்களும் கொழும்பு வர்த்தக கண்காட்சியில் பங்கேற்றிருப்பது அனைத்து தமிழர்களின் நெஞ்சில் வேலைப் பாய்ச்சுவதாக இருக்கிறது. இது தமிழினத்துக்கும் தமிழகத்துக்கும் செய்யும் வரலாற்றுத் துரோகம் என்றும் நாம் சுட்டிக்காட்டுகிறோம்.
இத்தகைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் தமிழகத்தில் இயங்கி வரும் அசோக் லேலண்ட், டி.வி.எஸ். ஆகிய நிறுவனங்கள் கொழும்பில் நடைபெறும் வர்த்தகக் கண்காட்சியில் தொடர்ந்தும் பங்கேற்பது என்பதை ஏற்க முடியாது. இந்த நிறுவனங்கள் உடனடியாக தமிழகத்துக்கு திரும்பி வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. இதே கோரிக்கையை வலியுறுத்தி போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பு உள்ளிட்ட தோழமை அமைப்புகள் இன்று 05/08/2012 சென்னையில் டி.வி.எஸ். நிறுவனம் முன்பு நடத்த உள்ள கண்டன ஆர்ப்பாட்டப் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு தெரிவித்து பங்கேற்கிறது.
அனைத்து தமிழக கட்சிகளின் ஆதரவுடன் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்ற தீர்மானத்தை எதிர்க்கும் வகையில் இலங்கையில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சியில் பங்கேற்று தமிழர்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தியிருக்கும் தமிழக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் அவர்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் சிங்கள இனவெறி அரசுடன் கை கோர்த்துக் கொண்டு செயல்படுமேயானால் அத்தகைய நிறுவனங்கள் தமிழகத்தில் தொடர்ந்தும் செயல்பட முடியாத வகையில் இழுத்து மூட வேண்டிய நிலையை உருவாக்கும் மிகப் பெரிய போராட்டங்களை தோழமை சக்திகளுடன் இணைந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறோம் என்று அதில் வேல்முருகன் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக