பாமக ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் 4 நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்
வெள்ளி, 11 ஜூன், 2010
உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வது குறித்து விளக்குகிறார் பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன்.
நெய்வேலி:
என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி பாட்டாளி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கடந்த 4 தினங்களாக நடந்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை மாலையுடன் முடிவுக்கு வந்தது.
என்எல்சி நிறுவனத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி நிரந்தரத்திற்கான பதவி மூப்புப் பட்டியலை வெளியிடவேண்டும். ஊதிய உயர்வு வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி பாட்டாளி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் நெய்வேலி ஸ்கியூ பாலத்தில் திங்கள்கிழமை முதல் சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தோரில் 8 பேர் மயங்கியதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து புதன்கிழமை உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்த பண்ருட்டி எம்எல்ஏ தி,வேல்முருகன் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கைகளை என்எல்சி நிர்வாகம் நிறைவேற்றும் வரை தானும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உண்ணாவிரதத்தில் பங்கேற்றார்.
இதையடுத்து என்எல்சி நிர்வாகம் பாமக தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில் பேச்சு நடத்தியது. இப்பேச்சில், உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை முடிந்து மீண்டும் திறந்த பின் நீதிமன்றத்தை அணுகி ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டு, அதன் பின்னர் படிப்படியாக ஒப்பந்தத் தொழிலாளர்களை இன்கோசர்வ் பிரிவில் இணைப்பது, மேலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கைத் தொடர்பாக, நிறுவனத்தின் நிரந்தரத் தொழிலாளர்களின் ஊதியமாற்று ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின்னர் 15 தினங்களுக்குள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதை பாமக தொழிற்சங்க நிóர்வாகிகள் ஏற்றுக்கொண்டதையடுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
மேலும் நிர்வாகம் உறுதியளித்தப் படி நடந்துகொள்ளவில்லை எனில் மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றார். இதையடுத்து 4 நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது.ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒரு பிரிவினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலும், என்எல்சி அனல்மின் நிலையங்களில் வியாழக்கிழமை 2300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக