கடலூர் சிப்காட் ஆர்கிமா தொழிற்சாலை தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஐந்து லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் : பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை
வெள்ளி, 23 நவம்பர், 2012
திருப்பூர் சாயக் கழிவுகளை குழாய் மூலம் கடலூர் அருகே கடலில் கலக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் நடத்தப்படும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் கூறினார்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் கடலூரில் நேற்று (22/11/2012 ) அளித்த பேட்டி :
கடலூர் மாவட்டம், சிப்காட்டில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் அரசு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சித் துறையிடம் அனுமதிபெறாமல், சட்டத்திற்குப் புறம்பாக, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் ரசாயன பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றன. இதனால் சுற்றுப்பகுதியில் உள்ளவர்களுக்கு கண் எரிச்சல், வயிற்றுப்போக்கு, புற்று நோய், இருதய நோய், நுரையீரல் நோய், கருச்சிதைவு, மலட்டுத் தன்மை போன்றவை ஏற்படுகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் சட்டசபை உறுதிமொழி கமிட்டியின் தலைவராக இருந்தபோது, சிப்காட் தொழிற்சலைகளை ஆய்வு செய்தேன். பல தொழிற்சாலைகள் அனுமதியின்றி ரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்ததை கண்டறிந்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை மூடுமாறு சிபாரிசு செய்தேன். சிப்காட் ரசாயன தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து கடலில் விட வேண்டும். ஆனால், பொது சுத்திகரிப்பு நிலையம் இயங்காததால் சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீரை நேரடியாக கடலில் கலக்கின்றனர். இதனால் சுற்றுப்பகுதியில் உள்ள மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கிறது.
ஏற்கனவே சிப்காட் தொழிற்சாலைகளில் நடந்த விபத்துகளில் பலர் பலியாகியுள்ளனர். பலர் உடலுறுப்பை இழந்துள்ளனர். சிப்காட் பகுதி மக்கள் வாழ்வதற்குத் தகுதியான இடம் இல்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வளவு மோசமான நிலையில் உள்ள தொழிற்சாலைகளை எப்படி அரசு அனுமதிக்கிறது என்பது வியப்பாக உள்ளது. ஒரு உயர்நிலைக் குழு அமைத்து, பொது மக்களிடம் கருத்து கேட்டு, மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் சாயக்கழிவுகளை குழாய் மூலம் கடலூர் அருகே கடலில் கலக்கும் திட்டம் கடந்த தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இதனால் இப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அப்போதே எதிர்த்தேன். தற்போது அத் திட்டத்தை அரசு செயல்படுத்தினால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடுமையாக எதிர்ப்பதுடன், மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
கடலூர் சிப்காட் ஆர்கிமா பெராக்சைட்ஸ் கெமிக்கல் தொழிற்சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, 2 முதல் 5 லட்சம் ரூபாய் வரை நிர்வாகம் சார்பில் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். விபத்து நடந்த தொழிற்சாலையில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றச் சென்ற மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டனத்திற்குரியது. இவ்வாறு வேல்முருகன் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக