வீரபாண்டி ஆறுமுகம் மறைவிற்கு பண்ருட்டி தி. வேல்முருகன் இரங்கல்
சனி, 24 நவம்பர், 2012
வீரபாண்டி ஆறுமுகம் மறைவிற்கு பண்ருட்டி தி.வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சரும் சேலம் மாவட்ட திமுக செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகம் அவர்கள் நேற்று (23/11/2012) மறைந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பேரறிஞர் அண்ணா காலம் முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தம்மை ஒப்படைத்துக் கொண்டு திமுகவின் முதன்மையான தூண்களில் ஒருவராக திகழ்ந்தவர் வீரபாண்டியார். பூலாவரி பஞ்சாயத்து தலைவர் முதல் மாநிலத்தின் அமைச்சராக வரை தம் வாழ்நாளின் பெரும்பகுதியை ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வுக்காகவே ஒப்படைத்துக் கொண்டவர் வீரபாண்டி ஆறுமுகம்.
சேலத்தில் இரும்பாலை, மருத்துவக் கல்லூரி, ரயில்வே கோட்டம் போன்ற அமைக்க போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்ற அவர், உள்ளாட்சித் துறை அமைச்சராக, வேளாண் துறை அமைச்சராக பதவி வகித்த காலங்களில் தமிழக மக்களின் நலனுக்காகவும் பாடுபட்டவர். கட்சிப் பொறுப்பு, அமைச்சர் பொறுப்பு என அனைத்திலும் திறம்பட செயலாற்றிய வீரபாண்டியார் எனும் போர்ப்படை தளபதியை இழந்து தவிக்கும் திமுகவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக