செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி ஈழத் தமிழர்கள் சிறப்பு தடுப்பு முகாம்களை இழுத்து மூட பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

வெள்ளி, 30 நவம்பர், 2012


    செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி ஈழத் தமிழர்கள் சிறப்பு தடுப்பு முகாம்களை இழுத்து மூட பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை

          தமிழகத்தின் செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி ஆகிய சிறப்பு தடுப்பு முகாம்களில் விசாரணை ஏதுமின்றி விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஈழத் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தங்களை விடுதலை செய்யக் கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்பது தொடர் கதையாக நடந்துவருகிறது.

           போர் நடைபெற்ற இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் கூட விடுவிக்கப்பட்டுவிட்டனர். ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்ககக் கூடும் என்று சந்தேகத்தின் பேரில் தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் இன்னமும் செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி போன்ற தடுப்பு முகாம்களில் வாடிவருகின்றனர்.

         ஈழத்து முள்வேலி முகாம்களைப் பற்றியும் தமிழகத்து திறந்த வெளி முகாம்களைப் பற்றியும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அக்கறை செலுத்துகிற அதே நேரத்தில் தமிழகத்தில் தடுப்பு முகாம் எனும் சிறைச் சாலைகளில் எந்தவித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களது நிலைமையையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறது.

           எனவே, பூவிருந்தவல்லி மற்றும் செங்கல்பட்டு தடுப்பு முகாம்களை இழுத்து மூடி அங்கு அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களை இதர அகதி முகாம்களுக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறோம்.



Read more...

உயிர் உலை ஆவண பட வெளியீட்டு நிகழ்ச்சி - பண்ருட்டி தி. வேல்முருகன் குறுந்தகடு பெற்றுக்கொண்டார்





சென்னை லயோலா கல்லூரியில் நடந்த விழாவில் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் தோழர்.லோகேஷ் இயக்கிய "உயிர் உலை" ஆவண பட குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி 29/11/2012 அன்று நடந்தது.  இந்நிகழ்ச்சியில் குறும்பட குறுவட்டை மதிமுக பொதுச் செயலாளர் திரு.வைகோ வெளியிட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன்  குறுந்தட்டை பெற்றுக்கொண்டார். மேலும் பூவுலகு சுந்தரராஜன், இயக்குநர் திரு.புகழேந்தி தங்கராசு, மே 17 இயக்கம் திரு.திருமுருகன் காந்தி, சேவ் தமிழ் ஜார்ஜ் , ஊடகவியலாளர் மணி ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

Read more...

கர்நாடகத்துக்கு செல்லும் நெய்வேலி மின்சாரத்தைத் தடுத்து நிறுத்தி தமிழர் உரிமையை வென்றெடுக்க அணி திரள பண்ருட்டி தி.வேல்முருகன் அறைகூவல்

கர்நாடகத்துக்கு செல்லும் நெய்வேலி மின்சாரத்தைத் தடுத்து நிறுத்தி தமிழர் உரிமையை வென்றெடுக்க அணி திரள பண்ருட்டி வேல்முருகன் அறைகூவல் விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை

         கர்நாடகம் கைவிரிக்கஉச்சநீதிமன்றமும் இழுத்தடிக்க இனியும் பொறுமை ஏன்? ஓரணியில் திரள்வோம் தமிழர்களே!

        காவிரி நதிநீர் கோரி தமிழக முதல்வர் பெங்களூர் சென்று நடத்திய பேச்சுவார்த்தையை அலட்சியம் செய்து சொட்டு நீரையும்கூட தரமறுத்திருக்கிறது கர்நாடகம். உச்சநீதிமன்றமோ இன்று கூட விசாரணையை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தின் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளிலோ சம்பா பயிர் கருகிப் போய் விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டி வருகிறது. காவிரி நதிநீரில் தமிழகத்துக்கு உரிய நியாயமான பங்கினைப் பெற்றுத்தர மத்திய அரசு தவறிவிட்டது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கூட அதை செயல்படுத்த மறுக்கிறது கர்நாடக அரசு. அந்த கர்நாடக மாநில அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் மறுப்பதுடன் மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தமிழகத்துக்கு உத்தரவிடுவது எந்தவகையில்தான் நியாயமோ? இதுதான் இந்திய ஒருமைப்பாடா?

            இப்படித்தான் வழக்கு விசாரணை என்று நடந்து கொண்டிருக்க குறுவை சாகுபடி பொய்த்துப் போனது.. தற்போது சம்பா பயிரையும் சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள்.. தமிழக விவசாயிகளோ குடும்பம் குடும்பாக தற்கொலை செய்து கொள்ளப் போகும் ஒரு பேரவலம் காவிரி டெல்டா பிரதேசத்தில் நடந்தேறத்தான் போகிறது. தமிழகத்துக்கு உரிமைக்காக நியாயமான வழிகளில் போராடி வரும் தமிழக அரசு, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஒருமித்த ஒரு முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

           இதேபோல் இனியும் கர்நாடகத்திடம் நீதி கிடைக்காது என்பதால் தமிழகத்து நெய்வேலி மின்சாரம் கர்நாடகத்துக்கு செல்வதைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே தீர்வாக அமையும்! சாதி, மத, கட்சி, எல்லைகளைக் கடந்து தமிழர்களாய் ஒன்று திரண்டு கர்நாடகத்துக்கு செல்லும் நெய்வேலி மின்சாரத்தைத் தடுத்து நிறுத்தி தமிழர் உரிமையை வென்றெடுக்க அணி திரள தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறைகூவல் விடுக்கிறது!

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாவீரர் நினைவு தினம் பண்ருட்டி தி.வேல்முருகன் ஈகச்சுடரை ஏற்றினார்

புதன், 28 நவம்பர், 2012

புதுவை, அரியாங்குப்பத்தில்  27/11/2012 அன்று ஒழுங்கு செய்யப்பட்டு சிறப்பாக நடந்தேறிய மாவீரர் தின நிகழ்வில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நிறுவனர் இளம்புயல் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களும் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் அதன் தலைவர் திரு.கொளத்தூர் மணி அவர்களும் கலந்து கொண்டு ஈகச்சுடரை ஏற்றி வைத்து ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியது குறித்து விளக்கும் புகைப்படங்கள். 











Read more...

வீரபாண்டி ஆறுமுகம் மறைவிற்கு பண்ருட்டி தி. வேல்முருகன் இரங்கல்

சனி, 24 நவம்பர், 2012

    
              


           வீரபாண்டி ஆறுமுகம் மறைவிற்கு பண்ருட்டி தி.வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி

   திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சரும் சேலம் மாவட்ட திமுக செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகம் அவர்கள் நேற்று (23/11/2012) மறைந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    பேரறிஞர் அண்ணா காலம் முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தம்மை ஒப்படைத்துக் கொண்டு திமுகவின் முதன்மையான தூண்களில் ஒருவராக திகழ்ந்தவர் வீரபாண்டியார். பூலாவரி பஞ்சாயத்து தலைவர் முதல் மாநிலத்தின் அமைச்சராக வரை தம் வாழ்நாளின் பெரும்பகுதியை ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வுக்காகவே ஒப்படைத்துக் கொண்டவர் வீரபாண்டி ஆறுமுகம்.

           சேலத்தில் இரும்பாலை, மருத்துவக் கல்லூரி, ரயில்வே கோட்டம் போன்ற அமைக்க போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்ற அவர், உள்ளாட்சித் துறை அமைச்சராக, வேளாண் துறை அமைச்சராக பதவி வகித்த காலங்களில் தமிழக மக்களின் நலனுக்காகவும் பாடுபட்டவர். கட்சிப் பொறுப்பு, அமைச்சர் பொறுப்பு என அனைத்திலும் திறம்பட செயலாற்றிய வீரபாண்டியார் எனும் போர்ப்படை தளபதியை இழந்து தவிக்கும் திமுகவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


Read more...

கடலூர் சிப்காட் ஆர்கிமா தொழிற்சாலை தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஐந்து லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் : பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

வெள்ளி, 23 நவம்பர், 2012

    



                

                 திருப்பூர் சாயக் கழிவுகளை குழாய் மூலம் கடலூர் அருகே கடலில் கலக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் நடத்தப்படும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் கூறினார்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன்   கடலூரில் நேற்று (22/11/2012 ) அளித்த பேட்டி :

   கடலூர் மாவட்டம், சிப்காட்டில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் அரசு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சித் துறையிடம் அனுமதிபெறாமல், சட்டத்திற்குப் புறம்பாக, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் ரசாயன பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றன. இதனால் சுற்றுப்பகுதியில் உள்ளவர்களுக்கு கண் எரிச்சல், வயிற்றுப்போக்கு, புற்று நோய், இருதய நோய், நுரையீரல் நோய், கருச்சிதைவு, மலட்டுத் தன்மை போன்றவை ஏற்படுகிறது.

            நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் சட்டசபை உறுதிமொழி கமிட்டியின் தலைவராக இருந்தபோது, சிப்காட் தொழிற்சலைகளை ஆய்வு செய்தேன். பல தொழிற்சாலைகள் அனுமதியின்றி ரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்ததை கண்டறிந்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை மூடுமாறு சிபாரிசு செய்தேன். சிப்காட் ரசாயன தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து கடலில் விட வேண்டும். ஆனால், பொது சுத்திகரிப்பு நிலையம் இயங்காததால் சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீரை நேரடியாக கடலில் கலக்கின்றனர். இதனால் சுற்றுப்பகுதியில் உள்ள மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கிறது.

             ஏற்கனவே சிப்காட் தொழிற்சாலைகளில் நடந்த விபத்துகளில் பலர் பலியாகியுள்ளனர். பலர் உடலுறுப்பை இழந்துள்ளனர். சிப்காட் பகுதி மக்கள் வாழ்வதற்குத் தகுதியான இடம் இல்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வளவு மோசமான நிலையில் உள்ள தொழிற்சாலைகளை எப்படி அரசு அனுமதிக்கிறது என்பது வியப்பாக உள்ளது. ஒரு உயர்நிலைக் குழு அமைத்து, பொது மக்களிடம் கருத்து கேட்டு, மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                  திருப்பூர் சாயக்கழிவுகளை குழாய் மூலம் கடலூர் அருகே கடலில் கலக்கும் திட்டம் கடந்த தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இதனால் இப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அப்போதே எதிர்த்தேன். தற்போது அத் திட்டத்தை அரசு செயல்படுத்தினால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடுமையாக எதிர்ப்பதுடன், மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

          கடலூர் சிப்காட் ஆர்கிமா பெராக்சைட்ஸ் கெமிக்கல் தொழிற்சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, 2 முதல் 5 லட்சம் ரூபாய் வரை நிர்வாகம் சார்பில் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். விபத்து நடந்த தொழிற்சாலையில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றச் சென்ற மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டனத்திற்குரியது. இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

Read more...

கடலூர் சிப்காட்டில் இயங்கும் மனித சுற்றுச்சூழலை பாதிப்படைய செய்யும் ரசாயன தொழிற்சாலைகளை மூட வேண்டும்: பண்ருட்டி தி.வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள செய்தி குறிப்பு :

 கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். ரசாயனக் கசிவால் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு, மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, அருகில் ஊர்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். எனவே கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் இயங்கும் மனித சுற்றுச்சூழலை பாதிப்படைய செய்யும் ரசாயன தொழிற்சாலைகளை கணக்கெடுத்து அவைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுசெயலாளர் கண்ணன் இல்லத் திருமண விழா

செவ்வாய், 20 நவம்பர், 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொது செயலாளர் கண்ணன் இல்லத் திருமண விழாவில்  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கலந்துகொள்கிறார்.




 

Read more...

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் ரீகன் என்ற பரிதி சுட்டுக் கொலை - பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம்

சனி, 10 நவம்பர், 2012




தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்  ரீகன் என்ற பரிதி சுட்டுக் கொலை -  பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் பிரான்சு நாட்டு தமிழர் ஒருக்கிணைப்புக் குழுத் தலைவருமான ரீகன் என்ற பரிதியை சிங்களப் புலனாய்வுப் பிரிவினர் பாரீஸ் நகரில் சுட்டுக் கொன்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதிகளை வெளிநாட்டில் ஏற்கெனவே சிங்களப் புலனாய்வு பிரிவினர் சுட்டுக் கொலை செய்திருக்கின்றனர். தற்போது பரிதியையும் சிங்களப் பேரினவாதிகள் படுகொலை செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.


தன் வாழ்நாள் முழுவதும் தமிழீழ விடுதலைக்காகப் பாடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதியான பரிதிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமது வீரவணக்கத்தை செலுத்துகிறது. தளபதி பரிதியின் குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

Read more...

காவிரி நதி நீர் பகிர்வில் உச்ச நீதி மன்றத் தீர்ப்பை மதிக்காத கர்நாடகத்திற்க்கு நெய்வேலி மின்சாரம் தர கூடாது - பண்ருட்டி தி.வேல்முருகன்

சனி, 3 நவம்பர், 2012

அக்டோபர் 20, 2012 அன்று நெய்வேலியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்ற நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகைப் போராட்டம் குறித்து இந்தியா டுடேவில் வெளியான கட்டுரை



Read more...

கொட்டும் மழையில் நடந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகைப் போராட்டம்

வெள்ளி, 2 நவம்பர், 2012



அக்டோபர் 20, 2012 அன்று நெய்வேலியில்  தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்ற நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகைப் போராட்டம் குறித்து ஜூனியர் விகடனில் வெளியான கட்டுரை



Read more...

நெய்வேலியில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் மின்சார டவர்களை கைப்பற்றுவோம் - பண்ருட்டி தி.வேல்முருகன்

வியாழன், 1 நவம்பர், 2012

அக்டோபர் 20, 2012 அன்று நெய்வேலியில்  தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்ற நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகைப் போராட்டம் குறித்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளியான கட்டுரை





Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP