சிலாபம் முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேர்த்திக் கடன் நிகழ்ச்சிக்கு தடைவிதித்த மகிந்த ராஜபக்சேவிற்கு பண்ருட்டி தி. வேல்முருகன் கண்டனம்

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

      இலங்கையின் புகழ்மிக்க சிலாபம் முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேர்த்திக் கடன் நிகழ்ச்சிக்கு தடைவிதித்த மகிந்த ராஜபக்சேவிற்கு பண்ருட்டி தி. வேல்முருகன் கண்டனம்   தெரவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை :


ஈழத் தமிழர் வழிபாட்டு உரிமை பறிப்புக்கு கண்டனம்

 
                இலங்கையின் புகழ்மிக்க சிலாபம் முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த ஆடு,கோழி நேர்த்திக் கடன் நிகழ்ச்சியை சிங்கள பேரினவாதி மகிந்த ராஜபக்ச இந்த ஆண்டு தடை செய்திருப்பது தமிழர்களின் வழிபாட்டுரிமையை பறிக்கும் செயல் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் தெரிவிக்கிறது. தமிழீழத்தின் ஒரு பகுதியான சிலாபத்தில் இருக்கும் முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோயில் ஆயிரமாயிரமாண்டுகளாக தமிழர்களால் வழிபட்டு வரக் கூடிய ஆலயம். இந்தக் கோயிலுக்கு சோழ, பாண்டிய மன்னர்கள் சிறப்பு செய்திருக்கின்றனர். ஆண்டுதோறும் ஆவணி மாதம் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடி திருவிழா நடத்துவதும் தங்களது நேர்த்திக் கடனாக ஆடு,கோழிகளை பலியிடுவதும் காலம்காலமாக கடைபிடித்து வரும் மரபு.

               கடந்த ஆண்டு கொலைவெறியன் ராஜபக்சே அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் ரவுடி அமைச்சர் என பெயரெடுத்த சிங்களப் பேரினவாதி மேர்வின் சில்வாவை தூண்டிவிட்டு புத்த தேசத்தில் ஆடு,கோழிகளை பலியிடுவதா? என தமிழகளின் திருவிழாவில் பெரும் வன்முறை அரங்கேற்றப்பட்டது. இந்த ஆண்டும் இதே மேர்வின் சில்வா மூலம் வன்முறையை தூண்டிவிட முயற்சித்தனர். இதன் ஒரு பகுதியாக சில நாட்களுக்கு முன்பு புத்த பிக்குகள் முன்னேஸ்வரம் கோயிலின் முன்பு ஒன்று கூடி பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வன்முறையைத் தூண்டியிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து முன்னேஸ்வரம் கோயிலில் ஆடு,கோழி பலியிடுவதற்கு சிங்கள கொலைவெறியன் மகிந்த ராஜபக்சே தடை விதித்திருக்கிறான். இதனால் ஆயிரமாயிரமாண்டுகளாக தமிழர்கள் கடைபிடித்து வந்த வழிபாட்டுரிமை பறிபோய்விட்டது.

               ஈழத் தமிழர்கள் தங்களது அரசியல் உரிமையை வென்றெடுக்க நடத்திய போராட்டத்தை வல்லாதிக்க சக்திகளுடன் பறித்து அவர்களது வாழ்வுரிமையையே இல்லாது ஒழித்த சிங்கள பேரினவாதம் தமிழ் பேசும் முஸ்லிம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. அவர்களின் வழிபாட்டுத் தலங்களை நிர்மூலமாக்கியது. தற்போது தமிழர்களின் வழிபாட்டு உரிமைகள் மீதும் கைவைத்திருக்கிறது. தமிழர் தேசமெங்கும் புத்த விகாரைகளை திணித்து இலங்கையை புத்தமத நாடாக்கும் முயற்சிகள் ஏற்கெனவே அரங்கேற்றப்பட்டு வரும் நிலையில் தமிழர்களின் கலாச்சார, வழிபாட்டு உரிமையை அடியோடு தடை செய்திருப்பதை இந்திய மத்திய அரசு இப்போதாவது தட்டிக் கேட்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் தங்களது அரசியல், பண்பாட்டு உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ள தமிழீழத் தனியரசு ஒன்றுதான் தீர்வாக இருக்க முடியும் என்பதையே இத்தகைய பேரினவாதிகளின் அட்டூழியங்கள் வெளிப்படுத்துகிறது என்பதையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது. ஈழத் தமிழர்களுக்கான தமிழீழத் தனியரசைப் பெற்றுக் கொடுப்பதன் மூலமே ஈழத் தமிழர் நலனைப் பேண முடியும் என்பதை இனியாவது இந்திய மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.



Read more...

தோழர் செங்கொடியின் முதலாமாண்டு நினைவு தினம் - தி.வேல்முருகன் மலர் வளையம் வைத்து வீர வணக்கம்

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய எம் உறவுகளின் விடுதலையை வலியுறுத்தி உயிராயுதம் ஏந்திய தோழர் செங்கொடியின் நினைவைப்போற்றிடும் வகையில் சகோதரியின் பிறந்த மண்ணாகிய காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் நடத்தப்பட்ட 28/08/2012 அன்று முதலாமாண்டு வீர வணக்க நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிறுவனர் இளம்புயல் தி.வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினார். 









Read more...

தமிழ்த்தேசம் எதிர்நோக்கும் வாழ்வுரிமை சிக்கல்களுக்கு தீர்வு காண பண்ருட்டி தி.வேல்முருகன் ஒருங்கிணைக்கும் ஆலோசனைக் கூட்டம்

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

     தமிழ்த்தேசம் எதிர்நோக்கும் வாழ்வுரிமை சிக்கல்களுக்கு தீர்வு காண பண்ருட்டி தி.வேல்முருகன் ஒருங்கிணைக்கும் ஆலோசனைக் கூட்டம் நடை பெற உள்ளது.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு

எம் தமிழ் உறவுகளே!
 
             உரிய உரிமை இருந்தும் தமிழனுக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகம் தென்தமிழகத்து வாழ்வாதாரமாம் முல்லைப் பெரியாறை தரைமட்டமாக்க கடப்பாரை தூக்கும் கேரளம் வடதமிழகத்து பாலாற்றைப் பாலைவனமாக்க கங்கணம் கட்டும் அடாவடி ஆந்திரம் காக்கை குருவிகளாய் வங்கக் கடலில் தமிழக மீனவர்களை சுட்டுப் படுகொலைசெய்யும் சிங்களம் முள்வேலி வதை முகாம்களைவிட கொடூரங்கள் கோலோச்சும் தமிழகத்து அகதி முகாம்கள் தமிழனை ஏமாற்றி கொல்லைப்புறத்தில் கொடுங்கோல் சிங்களவனுக்கு ஆயுத பயிற்சி கொடுக்கும் இந்திய அரசு ஊழல்பேர்வழிகளால் சுரண்டியெடுக்கப்படும் தமிழகத்து இயற்கை வளங்கள்... இன்னும்...இன்னும்.. தமிழ்த்தேசம் எதிர்நோக்கும் இன்னபிற வாழ்வுரிமை சிக்கல்களுக்கு தீர்வு காண வாருங்கள் தமிழர்களே! மூன்று தமிழருக்காய் வெந்தணலுக்கு தமை ஈந்த தோழர் செங்கொடியின் காஞ்சிபுரம் நினைவரங்கில் தமிழராய் ஒன்று கூடுவோம்

       சாதி மதங்கள் கட்சிகள் இயக்கங்களை கடந்து தமிழராய் ஒன்று கூடி உரிமைப் போரில் வெல்ல வியூகம் வகுப்போம்! உறவுகளே! உரிமைக்கு குரல் கொடுக்க ஒன்று கூடி விவாதிப்போம்! வாருங்கள்!


இடம்: தோழர் செங்கொடி நினைவரங்கம்,
   
               காஞ்சிபுரம்.



நேரம்: செவ்வாய்க்கிழமை (28/08/2012), மாலை 3 மணி

ஒருங்கிணைப்புக்காக தி.வேல்முருகன்

தொடர்பு எண்: 9500093330


Read more...

உதகையில் சிங்கள படை அதிகாரிகளுக்கு மீண்டும் இந்திய அரசு பயிற்சி: தமிழர்களை ஏமாற்றும் இந்திய அரசுக்கு பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம்

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

    உதகையில் சிங்கள படை அதிகாரிகளுக்கு மீண்டும் பயிற்சி- தமிழர்களை ஏமாற்றும் இந்திய அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள  அறிக்கை

         தமிழகத்தின் உதகையில் சிங்கள படை அதிகாரிகள் இருவருக்கு கடந்த மே மாதம் முதல் இந்திய அரசு பயிற்சி கொடுத்து வரும் செய்தி தமிழர்களின் நெஞ்சில் வேலைப் பாய்ச்சுவதாக இருக்கிறது. பல லட்சம் ஈழத் தமிழ் உறவுகளை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த போர்க்குற்றவாளியான கொலைகார ராஜபக்சேவின் சிங்கள ராணுவத்துக்கு தமிழகத்தில் மட்டுமல்ல இந்தி யாவின் எந்த ஒரு மூலையிலும் பயிற்சி கொடுக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசு மற்றும் தமிழக அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்களின் ஒரே நிலைப்பாடு. ஆனால் தமிழகத்தின் உணர்வுகளை சிறிதுகூட மதிக்காமல் கடந்த 4 மாதங்களாக சிங்கள ராணுவ அதிகாரிகள் திசநாயக மகோத்த லாலங்கே, ஹவாவாசம் ஆகியோருக்கு உதகையின் வெலிங்டன் பயிற்சி மையத்தில் கள்ளத்தனமாக இந்திய மத்திய அரசு பயிற்சி கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது.


          பிராந்திய பாதுகாப்பு என்ற போர்வையில் இந்தியாவை சிங்களவன் ஏமாற்றிக் கொண்டு நிதி உதவியையும் ராணுவ உதவியையும் பெற்றுக் கொள்கிறான் என்பதை இந்தியா உணரவில்லையா? அல்லது உணர்ந்தாலும் தமிழனை ஏமாற்றுவதற்காக நடிக்கிறதா? என்ற கேள்விதான் தமிழகத்தின் முன் நிற்கிறது. இலங்கையை முற்று முழுவதாக சீனாவுக்கு தாரை வார்த்துக் கொடுத்து ஏமாற்றுகிறான் சிங்களவன். அண்மையில் கூட இலங்கையின் தலைநகர் கொழும்பில் இந்திய நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை இந்தியாவை மதிக்காமல் சீனாவுக்கு தூக்கிக் கொடுத்தது ராஜபக்சே அரசு. இதேபோல் இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்து கொண்டிருந்த பேருந்துகளை இனி இறக்குமதி செய்யாமல் சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யப் போகிறானாம் சிங்களவன். திருகோணமலை அருகே சம்பூரில் அனல் மின்நிலையம் அமைக்க இந்தியாவுக்கு அனுமதி கொடுத்து இப்போது பாகிஸ்தானை அணுமின் நிலையம் அமைக்க அழைக்கிறான் சிங்களவன். இவ்வளவு ஏன்? இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய தொழிற்சாலைகள் அமைந்திருக்கும் தென்னிந்தியாவுக்கு அருகில் குறிப்பாக தமிழ்நாட்டு கடற்பரப்பான மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழாய்வுக்கு சீனாக்காரனை அழைத்து வருகிறான் சிங்களவன். இதேபோல் கச்சத்தீவில் சிங்களக் கடற்படை முகாம் என்ற பெயரில் சீனா முகாம் அமைத்து இந்தியாவின் கழுத்தை நெரிக்கக் காத்திருக்கிறது.


           இப்படி இந்தியாவின் முகத்தில் சிங்களவன் எத்தனை முறை கரியைப் பூசி சேற்றைப் பூசி ஏமாற்றினாலும் இந்திய மத்திய அரசு தமிழனுக்கு துரோகம் செய்வது, தமிழனை ஏமாற்றுவது என்ற ஒற்றை இலட்சியத்தில்தான் உறுதியாக இருக்கிறது என்பதைத்தான் உதகையில் கொல்லைப்புற வழியே சிங்களவனுக்கு பயிற்சி கொடுக்கும் செயல் அம்பலடுத்துகிறது. இன்னமும் பிராந்திய பாதுகாப்பு என்ற பெயரில் சுண்டைக்காய் சிங்கள நாட்டுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்காமல் இனியாவது தமிழகத்து உணர்வுகளை மத்திய அரசு மதிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.


Read more...

காவிரி நதி நீரை தர மறுக்கும் கர்நாடகாவுக்கு நெய்வேலியில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரம் வழங்கினால் போராட்டம்: பண்ருட்டி தி.வேல்முருகன் பேட்டி











கடலூர்:

கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் 25/08/2012 அன்று  அளித்த பேட்டி :

            தமிழகத்துக்கு காவிரி நதிநீரை கர்நாடக அரசு இதுவரை திறந்து விடவில்லை. இது சம்பந்தமாக தமிழக அரசு பலமுறை கோரிக்கை விடுத்தும் அதனை கர்நாடக அரசு ஏற்கவில்லை. இதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதற்கு கர்நாடக அரசு எங்கள் மாநிலத்துக்கே போதிய தண்ணீர் இல்லை. அதனால் தண்ணீர் திறந்து விட முடியாது என உச்சநீதிமன்றத்தில் காரணம் கூறி உள்ளது. தற்போது தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 13 மணி நேரம் மின்வெட்டு இருந்து வருகிறது. ஆனால் நெய்வேலியிலிருந்து கர்நாடக மாநிலத்துக்கு நாம் மின்சாரம் கொடுத்து வருகிறோம்.


             தமிழகத்துக்கே மின்சாரம் பற்றாக்குறை இருக்கும்போது நாம் ஏன் கர்நாடக மாநிலத்துக்கு மின்சாரம் கொடுக்க வேண்டும்? எனவே நெய்வேலியில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை கர்நாடகாவுக்கு கொடுப்பதை தடுத்து நிறுத்த தமிழக வாழ்வுரிமை கட்சி, ஒத்த கருத்துள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து ஆலோசனை நடத்தி போராட்டம் நடத்த உள்ளோம். மேலும் தமிழக அரசு காவிரிநீர் பெறுவதற்கும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா எடுகின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிக்கும். இதேபோல் காவிரி நதி நீர் தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதே கைவிட்டுவிட்டு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவரது கட்சி தொண்டர்களுக்கு போராட்டம் நடத்தும்படி அறிவிப்பு வெளியிட வேண்டும்.  மேலும் தமிழகத்துக்கு மத்திய அரசு போதுமான நிதி, அரிசி, மண்ணெண்ணெய் , மின்சாரம் போன்றவற்றை வழங்காமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

 

Read more...

கச்சத்தீவை மீட்பதுதான் தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படை தாக்குதலை நிறுத்த ஒரே தீர்வு : பண்ருட்டி தி.வேல்முருகன்

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

      கச்சத்தீவை மீட்பதுதான் தமிழக மீனவர்கள் மீதான  சிங்களக் கடற்படை தாக்குதலை நிறுத்த  ஒரே தீர்வு என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள  அறிக்கை


              தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பதை நாள்தோறும் மேற்கொள்ளும் ரோந்து நடவடிக்கையைப் போல் செய்து வருகிறது சிங்களக் கடற்படை. இந்த ஒரு வாரத்தில் 3 முறை தமிழக மீனவர்களைத் தாக்கி அரிவாளால் வெட்டி விரட்டியடித்துள்ளனர் சிங்களக் காடையர்கள்.


பறிபோன உரிமை


          தமிழக மீனவர்கள் தங்களது பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த கடற்பரப்பில்தான் தற்போதும் மீன்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் 1974-ம் ஆண்டு ஜூன் 28-ந்தேதியன்று கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த நாள் முதல் கடந்த 30 ஆண்டுகாலமாக 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை சுட்டுப் படுகொலை செய்திருக்கிறது.


       கச்சத்தீவு ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை பற்றிய கேள்வி எழுந்தபோது நாடாளுமன்றத்தில் பதிலளித்த அந்நாளைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரன்சிங், தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை கச்சத்தீவு ஒப்பந்தம் மூலம் விட்டுக் கொடுத்துவிடவில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் 1976-ம் ஆண்டு இந்திய வெளியுறவு செயலராக இருந்த கேவல்சிங்குக்கும் இலங்கை வெளியுறவுச் செயலாளர் வி.டி.ஜெயசிங்கேவுக்கும் இடையே கடிதப் பரிமாற்றங்களில் இந்த உரிமை பறிகொடுக்கப்பட்டுவிட்டது.


600க்கும் மேற்பட்டோர் படுகொலை


     கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததால் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்திருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் வாழ்வாதாரம் தேடிப் போகும் மீனவர்கள் உயிரோடு மீண்டும் கரைக்குத் திரும்புவோமா என்ற உத்தரவாதமின்றி நடுக்கடலில் தவியாய் தவிக்கின்றனர். காக்கை குருவிகளை சுடுவது போல தமிழக மீனவர்களை சுட்டுப் படுகொலை செய்து வருகிறது சிங்கள அரசு. தட்டிக் கேட்க வேண்டிய, கண்டிக்க வேண்டிய மத்திய அரசோ வாய்மூடிவு மவுனியாகவே இத்தனை ஆண்டுகாலமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் கூப்பாடு போட்டு கண்டனம் தெரிவித்த போதும்கூட மத்திய அரசு தமிழனின் உயிரை மதிக்கத் தயாராக இல்லை.


        தமிழக மீனவர்கள் கச்சத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்தால் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பேன் என்று சிங்கள கொலைவெறியன் மகிந்த ராஜபக்ச கொக்கரிக்கும்போது அதைக் கூட கண்டிக்க திராணியற்ற அரசாங்கமாகவே இந்திய மத்திய அரசு இருக்கிறது. மகிந்த ராஜபக்சேவே இப்படி கொலைவெறியோடு பேசும்போது அவனது கட்டளைக்கு கீழ்படியும் சிங்கள காடையர்கள் சும்மா இருப்பார்களா?

        இந்தியாவின் பரமவைரியாக கருதப்படுகிற பாகிஸ்தான் நாட்டு மீனவர்கள் இந்திய கடற்பரப்புக்குள் நுழைந்தாலும் இந்திய மீனவர்கள் தவறுதலாக பாகிஸ்தான் கடற்பரப்புக்குள் நுழைந்தாலும்கூட சுட்டுக் கொல்லப்படுவதில்லை. ஏன் சிங்கள மீனவர்கள் எத்தனையோ முறை இந்திய கடற்பரப்பில் நுழைந்தபோதும் சுட்டுக் கொல்லப்பட்டது கிடையாது. அவர்கள் எல்லாம் உரிய நீதிமன்ற விசாரணைகளுக்குப் பிறகு விடுவிக்கப்படுவதுதான் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.


தொடர்ந்து சிறை

       தற்போதும்கூட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போதைப் பொருட்களை கடத்தியதாக ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை 23 முறை வாய்தா வாங்கி இன்னமும் சிறையில்தான் அடைத்து வைத்திருக்கிறது. இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் இது தொடர்பாக உருப்படியான எந்த ஒருநடவடிக்கையுமே மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. தமிழக மீனவர்களை இந்தியக் குடிமக்களாக இந்திய அரசு கருதவில்லை என்பதைத்தானே இது வெளிப்படுத்துகிறது!


சீனர்களுக்கு மீன்பிடி அனுமதி


இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட எந்த ஒரு அன்னிய நாடும் இந்தியாவின் அனுமதியின்றி இலங்கைக்குள் நுழைய முடியாத நிலை இருந்தது. அப்போது இந்தியாவின் கொள்கை முடிவெடுக்கும் அதிகாரம் அரசியல் தலைவர்களிடத்தில் இருந்து வந்தது. ஆனால் ராஜீவ்காந்தி காலத்துக்குப் பிறகு இந்திய வெளிவிவகார அமைச்சகத்தில் தமிழின எதிரிகளாக அமர்ந்திருப்போரே அனைத்து முடிவுகளையும் எடுக்கக் கூடிய நிலையே நீடித்து வருகிறது. இதற்காகவே தமிழக மீனவர்களை சிங்களக் காடையர்கள் சுட்டுப் படுகொலை செய்தாலும் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.


          இப்போது தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழாய்வுப் பணிக்காக சீனாவுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது சிங்கள அரசு. இதேபோல் மன்னார் வளைகுடா உட்பட தமிழர்கள் மீன்பிடிக்கும் கடற்பரப்பில் இலங்கைக்கு கடல்வழியிலோ அல்லது நிலவழியிலோ எந்தத் தொடர்புமே இல்லாத சீனர்களுக்கும் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அண்மையில்கூட திருகோணமலை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட சீன மீனவர்களை ராஜமரியாதையுடன் நடத்தி விடுதலை செய்திருக்கிறது சிங்கள அரசு.


          இலங்கையின் இந்த முடிவால் எதிர்காலத்தில் மன்னார் வளைகுடாவில் முற்று முழுதாகவே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க முடியாத ஒரு நிலை உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டுகிறது. தமிழக மீனவர்கள் தங்களுக்கு மீன்பிடி உரிமை உள்ள கட்ற்பரப்பில் மீன்பிடித்தார்கள் என்பதற்காக சுட்டுக் கொல்லும் அநியாயத்தை மத்திய அரசும் கண்டு கொள்ளாத போது தமிழர்கள் எங்குதான்போய் முறையிடுவது? தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு ஒரே தீர்வு கச்சத்தீவை மீட்பதுதான்! இல்லையேல் தமிழக மீனவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள ஆயுதமேந்துவது! இந்த இரண்டில் ஒன்றுமட்டுமே தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலுக்குத் தீர்வாக இருக்க முடியும் என்பதுதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு.

         தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்தும் சிங்களக் கடற்படை தாக்குதல் நடத்துவது என்பது நீடிக்குமேயானால் தமிழகத்தைவிட்டே இலங்கை தூதரகத்தை அப்புறப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஈடுபடும் என எச்சரிக்கிறோம். மேலும் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தை தமிழ்நாட்டில் இருந்து அடியோடு அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், தமிழக மீனவர் அமைப்புகள், தமிழர் இயக்கங்களை ஒருங்கிணைத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து போராடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



தி.வேல்முருகன்
நிறுவனர்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி




Read more...

வீட்டை அபகரித்ததாக பேராசிரியர் தீரன், காவேரி, சண்முகம் மீது பொய் புகார்: பண்ருட்டி தி.வேல்முருகன் அறிக்கை

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

சென்னை:


தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

           சென்னை சேப்பாக்கம் மசூதி தெருவைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவர் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் தமது வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவருடன் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் என் மீதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மூத்த தலைவர்களான பேராசிரியர் தீரன், காவேரி, சண்முகம் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுக்களைக் கூறியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

         சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட யூனூஸ்கான், பெண்களுக்கு கணினி பயிற்சியை இலவசமாக தமது சொந்த செலவில் வழங்குவதற்காக ஒரு மையம் அமைத்திருப்பதாகவும் அதை திறந்து வைக்குமாறும் எங்களிடம் கேட்டுக் கொண்டார்.  அதேபோல் ஏழைகளுக்கு வேட்டி-சேலை என நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் யூனூஸ்கான் எங்களை அழைத்திருந்தார். ஒரு பொறுப்புள்ள சமூக தலைவர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் அந்த விழாவுக்கு சென்று கலந்து கொண்டோம்.

          இதைத் தவிர்த்து யூனூஸ்கானுக்கும் அவரது வீட்டு உரிமையாளருக்கும் உள்ள பிரச்சினை பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் மிரட்டியதாக சொல்லுகிற முகமது இஸ்மாயில் என்பவரை நாங்கள் யாரும் நேரில் பார்த்ததுகூட கிடையாது.  அப்படிப்பட்ட நிலையில் முகமது இஸ்மாயில் என்பவர் கொடுத்துள்ள புகாரானது எங்களது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Read more...

டெசோ மாநாட்டில் "ஈழம்" என்ற சொல்லை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்ததற்கு பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம்

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012


         ஈழம் என்ற சொல்லை தடை செய்ய சொல்வது இந்திய மத்திய அரசின் உச்சகட்ட துரோகம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன்  தெரிவித்துள்ளார். 

இது குறித்து    தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள  அறிக்கை:


          தி.மு.க ஏற்பாட்டில் நடத்தப்படும் "தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பின்" (டெசோ) மாநாட்டில் "ஈழம்" என்ற சொல்லை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்து டெசோ அமைப்பாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறது. இது திமுகவுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான விவகாரம் மட்டுமே அல்ல. ஒட்டுமொத்த தமிழினத்துக்கு எதிரான இந்திய மத்திய அரசின் உச்சகட்ட வன்மத்தின் துரோகத்தின் அடக்குமுறையின் வெளிப்பாடுதான் - என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

          "ஈழம்" என்ற சொல்லை தடை செய்ய இந்திய மத்திய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? எங்கள் பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து எங்கள் தமிழ் மொழி தோன்றிய காலந்தொட்டே பயன்பாட்டில் இருந்து வரும் சொல்தான் "ஈழம்"! "ஈழநாடு" என்பது கடலில் மூழ்கிப் போய்விட்ட குமரிக் கண்டத்தில் இருந்த நாடுகளில் ஒன்று. தமிழரின் வரலாற்றைச் சொல்லும் அத்தனை இலக்கியங்களிலும் ஈழம் என்ற சொல் இல்லாமல் இருந்ததே இல்லை. முத்தொள்ளாயிரத்தில் சோழரின் ஆட்சிப் பரம்பல் இப்படிக் கூறப்படுகிறது


"கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால்

தத்து நீர்த் தண்ணுஞ்சை தான் மிதியா

பிற்றையும் ஈழம் மிதியா வருமே எம்

கோழியர் கோக்கிள்ளிக் களிறு" என்கிறது அந்தப் பாடல்



         ஈழக் காசு, ஈழக் கழஞ்சு, ஈழச் சேரி என பல்வேறு சொற்றொடர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் வாழ்வியலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப் போனால் "இந்தியா" "இந்திய மத்திய அரசு" என்ற சொல்லெல்லாம் "கண்டுபிடித்து" புழக்கத்தில் நடமாடுவதற்கு முன்பே இந்த மண்ணில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரத்துடனும் தீரத்துடனும் உலா வந்த சொல்தான் "ஈழம்" !

        ஈழம் எனும் நிலப்பரப்பில் பல்லாயிரம் ஆண்டுகளாக தனித்த மொழி, பண்பாடு, ஆட்சி அதிகாரத்துடன் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். ஈழத்து தேசத்தில் தங்களது தலைவிதியை தாங்களே தீர்மானித்துக் கொண்டு ஆட்சி புரிந்தவர்கள் தமிழர்கள். கடந்த 60 ஆண்டுகளாக சிங்களவர்களின் பேரினவாத அகோரத்தில் அகப்பட்டு தங்களது வரலாற்று உரிமைகளை பறிகொடுத்த நிலையில்தான் "தமிழீழ"த் தனியரசு ஒன்றுதான் தீர்வு என்பதை தந்தை செல்வா காலத்திலேயே திட்டவட்டமாக உணர்த்தியவர்கள் ஈழத் தமிழர்கள்.

           தந்தை செல்வா போன்ற பெருந்தலைவர்களின் அகிம்சை போராட்டட்துக்கு பயனில்லாமல் போனதாலேயே " தமிழீழ" தனியரசு என்ற லட்சியத்தை அடைய தலைவர் மேதகு பிரபாகரன் தலைமையில் 30 ஆண்டுகாலத்துக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதமேந்தி போராடினர். ஆனால் இந்திய மத்திய அரசின் துரோகத்தால் இலங்கைத் தீவில் தமிழர்களின் ஒரே பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டுவிட்டன. அங்கு ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டிருந்தாலும் தமிழர் பிரச்சனைக்கு ஒற்றைத் தீர்வு "தனித் தமிழீழம்"தான் என்ற கோரிக்கை ஒன்றும் மெளனிக்கப்பட்டுவிடவில்லை.

          இப்படியான இனத்துரோகமும் தமிழினத்துக்கு எதிரான இந்தியாவின் வெறியும் இன்னமும் அடங்கவில்லை என்பதன் வெளிப்பாடே "ஈழம்" என்ற சொல்லுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை! தமிழீழத்தில் மூன்றரை லட்சம் உறவுகளை கொத்து கொத்தாக படுகொலை செய்த கொலைகாரன் ராஜபக்சேவின் வலதுகரமாக இந்திய மத்திய அரசு செயல்பட்டது என்பதை எப்போதும் உலகத் தமிழர்கள் மன்னித்துவிடப் போவதில்லை.. தமிழர்களின் மனதில் இந்தியாவின் துரோகம் எப்போதும் நீறு பூத்த நெருப்பாகவே இருந்து கொண்டிருக்கிறது... ஈழத் தமிழர் விவகாரத்தில் மட்டும... தமிழ்நாட்டின் நியாயமான எந்த ஒரு உரிமையையும் இந்திய மத்திய அரசு கண்டுகொள்வதில்லை என்ற கடுஞ்சினம் தமிழ்நாட்டுக்கு தொடர்ந்தும் இருந்து வருகிறது.

             தமிழகத்தின் அத்தனை ஆற்று நீர் உரிமைகளையும் கேரளா, கர்நாடகம், ஆந்திர மாநிலங்கள் பறித்துக் கொண்டிருக்கின்றன. காவிரி ஆற்றிலும் பாலாற்றிலும் முல்லைப் பெரியாறு ஆற்றிலும் தமிழ்நாட்டுக்குர் உரிய நீர் உரிமைகளை அப்பட்டமாக இந்த மாநிலங்கள் பறித்துக் கொண்டிருக்கின்றன. இதுபற்றி தமிழ்நாட்டு மக்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்திய போதெல்லாம் மத்திய அரசிடம் தமிழக அரசு முறையிட்ட போதெல்லாம் வாய்மூடி கள்ள மவுனியாக இருக்கிறது மத்திய அரசு...

         காவிரி நதியில் தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகம் தரமறுத்துவிட்டதால் தமிழகத்தின் 11 மாவட்டங்கள் வறட்சியின்பிடியில் சிக்கித் தவிக்கின்றன. இதில் தலையிட்டு உரிய தீர்வு காண அக்கறைக்காட்டாமல் இருக்கிறது மத்திய அரசு...தமிழ்நாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரி தமிழக முதல்வர் டெல்லி சென்று வலியுறுத்திய போதும்கூட அந்தக் கோரிக்கையை கண்டு கொள்ளாமல் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்பட்டு வருகிறது மத்திய அரசு...

            இலங்கையில் அந்த நாட்டுக்கும் கடல் எல்லைக்கும் சம்பந்தமே இல்லாத சீனர்களை மீன்பிடிக்க சிங்கள அரசு அனுமதிக்கிறது. ஆனால் கடற்பரப்பில் மீன்பிடியுள்ள தமிழகத்து தமிழர்கள் மீன்பிடித்தால் மரணம்தான் தண்டனை என்று சிங்களம் கோரத் தாண்டவமாடுகிறது. அப்படிப்பட்ட கொலைகார சிங்கள அரசை தட்டிவைக்க துணிச்சல் இல்லாத நிலையில்தான் இருக்கிறது மத்திய அரசு... இது தொடர்பாக எத்தனை எத்தனை கடிதங்கள் தமிழக அரசாங்கங்களால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும்? எத்தனை எத்தனை போராட்டங்களை நாங்கள் நடத்தியிருக்கிறோம்?
        இதுவரை வாயே திறக்காமல் தமிழர்கள் மீதான கடற்படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்து தமிழினத்தின் எதிரியாகவே வலம் வருகிறது இந்திய மத்திய அரசு! எங்கள் தொப்புள் கொடி உறவுகளை லட்சக் கணக்கில் படுகொலை செய்து சர்வதேசத்தின் முன் போர்க்குற்றவாளியாக இருக்கும் சிங்களக் காடையர்களுக்கு பயிற்சி கொடுக்கக் கூடாது என்று பலமுறை நாங்கள் போராட்டம் நடத்தியும் எங்கள் தமிழ் மண்ணில் சிங்களவனுக்கு இன்னமும் பயிற்சி கொடுத்துக் கொண்டு தமிழகத்தை சீண்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது இந்திய மத்திய அரசு...

             இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க தமிழக சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் கூட அதைப் பறி கண்டு கொள்ளாமல் இலங்கை தலைநகர் கொழும்பில் பலநூறு இந்திய தொழில்நிறுவனங்களைக் கொண்டு போய் இறக்கி கண்காட்சி நடத்துகிறது மத்திய அரசு! தமிழகத்து உரிமைகளை பிற மாநிலங்கள் வேட்டையாடி குழிதோண்டி புதைத்துக் கொண்டிருப்பதை பற்றி அக்கறை செலுத்த மறுத்துக் கொண்டு இருக்கிற மத்திய அரசு.... தமிழ்நாட்டு மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சனையான ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் கொலைகார இனவெறி சிங்களவனைப் போலவே செயல்படுவதை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது...

           தமிழகத்தின் எந்த ஒரு உணர்வையுமே புரிந்து கொள்ளாமல் தொடர்ந்தும் சிங்கள ராஜபக்சே அரசாங்கத்தைப் போல இந்திய மத்திய அரசு செயல்படுவது என்பது தமிழகத்து இளைஞர்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிரான சிந்தனையை கூர்மைப்படுத்தவே செய்யும் - இந்தியாவிலிருந்து இயல்பாகவே தமிழர்களை அன்னியப்படுத்தும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கிறது.  அதுமட்டுமின்றி திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதும் இப்பொழுதும் சரி ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக எந்த ஒரு நிலைப்பாடு எடுத்தாலும் டெல்லியிலிருந்து ப.சிதம்பரத்தை, பிரணாப் முகர்ஜியை ஏ.கே.அந்தோணியை அனுப்பி திமுகவை பணிய வைப்பதையே தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கிறது மத்திய அரசு.

             முள்ளிவாய்க்கால் போரின்போது மத்திய அரசின் அழுத்தத்துக்கு அடிபணியாமல் தமிழகத்து எம்;பிக்கள் 40 பேரும் ராஜினாமா செய்திருந்தால் மூன்றரை லட்சம் உறவுகளை தமிழினம் காவு கொடுத்திருக்க நேரிட்டிருக்காது என்பதை திமுக எண்ணிப் பார்க்க வேண்டும். இப்பொழுதும் காலம் கடந்து போய்விடவில்லை.. ஈழம் என்ற சொல்லையே பயன்படுத்தக் கூடாது என்ற துணிச்சல் மத்திய அரசுக்கு இருக்கும்போது தந்தை பெரியாரின், பேரறிஞர் அண்ணாவின் சுயமரியாதை கொள்கை வழியில் உருவான திராவிட முன்னேற்றகழகம் தமது பழைய போர்க்குணத்தை வெளிப்படுத்தியாக வேண்டிய தருணம் இது....இனியும் மத்திய அரசுக்குப் பணிந்து போவதில் அர்த்தம் இல்லை என்பதே தமிழர்களின் உளமார்ந்த எதிர்பார்ப்பு.

         ஈழம் என்ற சொல்லைக் கூட உச்சரிக்கக் கூடாது என்று கூறும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கான ஆதரவை இப்போதாவது திமுக உதறி எறிய வேண்டும். ஆகஸ்ட் 12-ந் தேதி நடைபெற உள்ள டெசோ மாநாட்டில், ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு தமிழீழமே என்ற தீர்மானத்தை நிறைவேற்றி வஞசக மத்திய அரசுசின் வன்மத்துக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும்.

          தமிழீழத் தனியரசு அமைக்க ஈழத்திலும் புலத்திலும் தமிழகத்திலும் வாழும் தமிழர்களிடம் ஐக்கிய நாடுகள் சபை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழீழத் தனியரசு அமைப்பதற்கான அரசியல் போர்க்களங்களை திராவிட முன்னேற்றக் கழகம் பிரகடனப்படுத்த வேண்டும்.இத்தகைய தீர்மானங்களை நிறைவேற்றுவதால் மத்திய அரசு கொடுக்கும் எந்த ஒரு நெருக்கடியையும் எதிர்கொள்ள திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் லட்சோப லட்சம் தொண்டர்களும் சர்வபரி தியாகத்துக்கும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் எதிர்பார்ப்பாகும்.


 

Read more...

இலங்கையில் நடைபெறும் வர்த்தகக் கண்காட்சியில் தமிழக நிறுவனங்கள் பங்கேற்றதற்கு தி. வேல்முருகன் கண்டனம்

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012


     இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக சட்டமன்றத் தீர்மனத்தை மதிக்காமல் இலங்கையில் நடைபெறும் வர்த்தகக் கண்காட்சியில் தமிழக நிறுவனங்களான டிவிஎஸ், அசோக் லேலண்ட் போன்றவை பங்கேற்றுள்ளமைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

          இலங்கைத் தீவில் பல லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த போர்க்குற்றவாளியான சிங்கள அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் ஒட்டுமொத்த நிலைப்பாடு. இலங்கை அரசு பொருளாதாரத் தடையை வலியுறுத்தி தமிழக சட்டமன்றம் தீர்மானமும் நிறைவேற்றியிருந்தது. ஆனால் இத்தீர்மானத்தை பற்றி கொஞ்சமும் பொருட்படுத்தாமல் கவலைப்படாமல் ரத்தக் கறை படிந்த சிங்கள இனவெறி அரசுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த 100க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களை இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த்சர்மா தலைமையில் இந்திய அரசே இலங்கைக்கு அழைத்துச் சென்றிருப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.

           தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் கூட இந்திய அரசு இப்படி ஒரு அலட்சியமான யதேச்சதிகாரப் போக்குடன் நடந்து கொள்வதை தமிழக அரசும் அனைத்து அரசியல் கட்சிகளும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. மேலும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் தமிழர்களின் உழைப்பை உறிஞ்சி கொள்ளை லாபமடிக்கும் அசோக் லேலண்ட், டி.வி.எஸ். போன்ற நிறுவனங்களும் கொழும்பு வர்த்தக கண்காட்சியில் பங்கேற்றிருப்பது அனைத்து தமிழர்களின் நெஞ்சில் வேலைப் பாய்ச்சுவதாக இருக்கிறது. இது தமிழினத்துக்கும் தமிழகத்துக்கும் செய்யும் வரலாற்றுத் துரோகம் என்றும் நாம் சுட்டிக்காட்டுகிறோம்.

         இத்தகைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் தமிழகத்தில் இயங்கி வரும் அசோக் லேலண்ட், டி.வி.எஸ். ஆகிய நிறுவனங்கள் கொழும்பில் நடைபெறும் வர்த்தகக் கண்காட்சியில் தொடர்ந்தும் பங்கேற்பது என்பதை ஏற்க முடியாது. இந்த நிறுவனங்கள் உடனடியாக தமிழகத்துக்கு திரும்பி வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. இதே கோரிக்கையை வலியுறுத்தி போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பு உள்ளிட்ட தோழமை அமைப்புகள் இன்று 05/08/2012 சென்னையில் டி.வி.எஸ். நிறுவனம் முன்பு நடத்த உள்ள கண்டன ஆர்ப்பாட்டப் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு தெரிவித்து பங்கேற்கிறது.

         அனைத்து தமிழக கட்சிகளின் ஆதரவுடன் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்ற தீர்மானத்தை எதிர்க்கும் வகையில் இலங்கையில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சியில் பங்கேற்று தமிழர்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தியிருக்கும் தமிழக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் அவர்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் சிங்கள இனவெறி அரசுடன் கை கோர்த்துக் கொண்டு செயல்படுமேயானால் அத்தகைய நிறுவனங்கள் தமிழகத்தில் தொடர்ந்தும் செயல்பட முடியாத வகையில் இழுத்து மூட வேண்டிய நிலையை உருவாக்கும் மிகப் பெரிய போராட்டங்களை தோழமை சக்திகளுடன் இணைந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறோம் என்று அதில் வேல்முருகன் கூறியுள்ளார்.


Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP