தமிழகத்தில் 150 தொகுதிகளில் பாமகவுக்கு வாக்கு வங்கி: தி.வேல்முருகன் எம்எல்ஏ பேச்சு
வியாழன், 23 செப்டம்பர், 2010
சிதம்பரம்:
தமிழகத்தில் 150 தொகுதிகளில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் 30 ஆயிரம் வாக்குகள் பாமகவிடம் உள்ளது என பாமக இணைப் பொதுச் செயலாளர் தி.வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. பாமக மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வேணு.புவனேஸ்வரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் முத்துகுமார் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் தேவதாஸ் படையாண்டவர் உறுப்பினர் சேர்க்கை குறித்து விளக்கவுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பாமக இணைப் பொதுச் செயலாளர் தி.வேல்முருகன் எம்எல்ஏ பங்கேற்று பேசியது:
இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. கடலூர் மாவட்ட பாமகவை வலிமையாக்க புதிய உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பாமக ஆதரவு இன்றி எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது. தமிழகத்தில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வன்னியர் அதிகமுள்ள 55 தொகுதிகளைத் தேர்வு செய்து கட்சியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் நான்கரை ஆண்டுகள் அமைதியாக இருந்தவர்கள் தற்போது தேர்தலுக்காக சாதிக் கலவரத்தை தூண்டி ஆதாயம் தேடி வருகின்றனர். குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் பாமகவினரின் கொடிகம்பங்கள் வீழ்த்தப்பட்டு கொடி மற்றும் பேனர்கள் கிழிக்கப்படும் சம்பவம் தொடருகிறது. பாமகவினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. பாமக சமூக நீதிக்காக பாடுபடும் இயக்கம், சாதிய கலவரம் கூடாது என ராமதாஸ் கூறி வருகிறார். ஆனால் கடலூர் மாவட்டத்தில் திட்டமிட்டு ஒரு வன்முறை கும்பல் கலவரத்தில் ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிடத்தயாரானால் பாமகவும் தனித்து போட்டியிட தயாராக உள்ளது. பாமக கூட்டணி அமைப்பது குறித்து விமர்சனம் செய்கிறார்கள். திமுகவும், அதிமுகவும் மாறி, மாறி கூட்டணி வைத்துக் கொள்ளலாம். ஆனால் பாமக மட்டும் ஏன் மாற்றி கூட்டணி வைக்கக்கூடாது என தி.வேல்முருகன் கூறினார். கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பி.கே.அருள் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக