ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் மறியல்: ராமதாஸ்

புதன், 29 செப்டம்பர், 2010


ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னை மெமோரியல் ஹால் அருகில் செவ்வாய்க்கிழமை கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க.வினர் நடத்திய ஆர்பாட்டம் 

சென்னை:

                 தமிழ்நாட்டில் உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்க வேண்டும். இல்லையெனில் அடுத்த மாதம் மாநிலம் முழுவதும் சாலை மறியல்  போராட்டம் நடத்துவோம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பா.ம.க. சார்பில் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, ராமதாஸ் பேசியது: 

                  தமிழகத்தில் அமலில் உள்ள இடஒதுக்கீட்டு முறையை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியாக வேண்டும். ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த 40-க்கும் மேற்பட்ட சமுதாயத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 11-ல் முதல்வர் கருணாநிதியை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

                   ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால், அடுத்த மாதம் மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்றார் ராமதாஸ். ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே. மூர்த்தி, பொன்னுசாமி, வேல்முருகன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more...

கடலூரில் கல்லூரிகளுக்கு கூடுதல் பஸ் வசதி: பாமக மாணவர் சங்கம் கோரிக்கை

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010


கடலூர்:

              கடலூரில் கல்லூரிகளுக்கு மாணவர்கள் எளிதில் செல்லும் வகையில் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பாமக கிழக்கு மாவட்ட மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்தது. இச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடந்தது. 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

                   கடலூர் கல்லூரிகளுக்கு கிராமப் புறங்களில் இருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் நகரப் பஸ்களை இயக்க வேண்டும். கடலூர்- குறிஞ்சிப்பாடி, கடலூர்- பண்ருட்டி இடையே மகளிருக்கு மட்டும் தனிப் பஸ்களை இயக்க வேண்டும். பலமுறை இக்கோரிக்கை முன்வைத்தும் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து விரைவில் அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

                    கூட்டத்துக்கு மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பா.அருள்பாபு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ராஜ்குமார் நாராயணன் வரவேற்றார். மாநில மாணவர் சங்கச் செயலர் கோபிநாத் முன்னிலை வகித்தார். பாமக மாநில துணைப் பொதுச் செயலர் தி.திருமால்வளவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினார். பாமக மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி, நகரச் செயலர் ஆனந்த் உள்ளிட்ட பலர் பேசினர்.

Read more...

கடலூர் அருகே பாமக கொடிக் கம்பங்கள் சேதம்: ஆட்சியர் தலைமையில் அமைதிப்பேச்சு


கடலூர்:

                 கடலூர் அருகே பாமக கொடிக் கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக, இரு தரப்பினரிடையே மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.

                   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் முன்னிலை வகித்தார். பாமக மாநில இணைப் பொதுச் செயலர் தி.வேல்முருகன் எம்எல்ஏ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் சு.திருமாறன் உள்ளிட்ட இரு கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இனி எந்தப் பிரச்னையும் ஏற்படாது, சட்டம் ஒழுங்குக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் யாராவது நடந்து கொண்டால். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருப்போம் என்றும் இரு தரப்பினரும் தெரிவித்தனர்.

இந்நிலையில் பாமக மாநில துணைப் பொதுச் செயலர் தி.திருமால்வளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பது:

                                     தலித் மக்கள் பலர் பாமகவில் இணைந்து வருகிறார்கள். இதைச் சகிக்க முடியாத சிலர், சாதிய மோதல்களைத் தூண்டுவது குறித்து, காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. பாமக மற்றும் வன்னியர்கள் தாழ்த்தப்ட்ட மக்களுக்கு விரோதிகள் என்று சித்தரிப்பதை பாமக முறியடிக்கும். உள்ள தலித் பொறுப்பாளர்கள் தாக்கப்பட்டு உள்ளனர். கொடிக் கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. கடலூர் மாவட்ட காவல் துறை பாமகவுக்கு எதிராகவும் ஒரு குழுவுக்கு ஆதரவாகவும் வழக்குப் பதிவு செய்து இருப்பது கண்டனத்துக்கு உரியது என்றும் அறிக்கை தெரிவிக்கிறது

Read more...

தீவிரமடைகிறது என்எல்சி ஸ்டிரைக்: பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் ஆதரவு

வியாழன், 23 செப்டம்பர், 2010

நெய்வேலி:
 
                 என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் 5-ம் நாளாக தொடர்கின்ற நிலையில், போராட்டத்துக்கு வலுசேர்க்கும் விதமாக செப்டம்பர் 25-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும், 27-ம் தேதி மனிதசங்கிலிப் போராட்டமும் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
                  என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 19 இரவுப் பணிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் சென்னையில் மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் தோல்வியடைந்தது.இதையடுத்து தொமுச, அதொஊச, பாதொச உள்ளிட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் ஸ்கியூபாலத்தில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
 
                                இப்போராட்டத்தை வாழ்த்திப் பேசிய அதிமுகவைச் சேர்ந்த எம்.பி. செம்மலை, தொழிலாளர்களின் பணிநிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகம் உடனடியாக செவிசாய்த்து ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் கலந்துகொண்டு பேசுகையில், 
 
                    ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக பலமுறை இதே இடத்தில் உண்ணாவிரதம் நடத்தியுள்ளேன். நிர்வாகம் தொடர்ந்து பிடிவாதப் போக்கைக் கடைபிடித்து வருகிறது. நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக நிர்வாகத்துடன் பேச்சு நடத்தி தீர்வுகாண வேண்டும். அதற்கு அனைத்து அரசியல் கட்சியினரும் ஆதரவளிக்கிறோம். எனவே நிர்வாகம் 2 தினங்களுக்குள் தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து, பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். 
 
                 இல்லையெனில் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, நெய்வேலி நகரின் முக்கிய வீதிகளில் மனிதசங்கிலிப் போராட்டத்தை செப்டம்பர் 27-ம் தேதி நடத்துவார்கள் என்றார் வேல்முருகன்.உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நெய்வேலியில் உள்ள தொமுச, பாதொச, அதொஊச, எல்எல்எப் மற்றும் திமுக, அதிமுக கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர். உண்ணாவிரதப் போராடத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், உண்ணாவிரதப் போராட்டம் பேச்சுவார்த்தை விளக்கப் பொதுக்கூட்டம் என அறிவிக்கப்பட்டது. 

                         கூட்டத்தின் இறுதியில் பேசிய பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன், இது உண்ணாவிரதப் போராட்டம்தான் என்றார். ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் மெயின்பஜார் காமராஜ் சிலையருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயலர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.

Read more...

தமிழகத்தில் 150 தொகுதிகளில் பாமகவுக்கு வாக்கு வங்கி: தி.வேல்முருகன் எம்எல்ஏ பேச்சு


சிதம்பரம்:

               மிழகத்தில் 150 தொகுதிகளில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் 30 ஆயிரம் வாக்குகள் பாமகவிடம் உள்ளது என பாமக இணைப் பொதுச் செயலாளர் தி.வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்தார்.

                பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. பாமக மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வேணு.புவனேஸ்வரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் முத்துகுமார் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் தேவதாஸ் படையாண்டவர் உறுப்பினர் சேர்க்கை குறித்து விளக்கவுரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பாமக இணைப் பொதுச் செயலாளர் தி.வேல்முருகன் எம்எல்ஏ பங்கேற்று பேசியது: 

                 இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. கடலூர் மாவட்ட பாமகவை வலிமையாக்க புதிய உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பாமக ஆதரவு இன்றி எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது. தமிழகத்தில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வன்னியர் அதிகமுள்ள 55 தொகுதிகளைத் தேர்வு செய்து கட்சியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

                  தமிழகத்தில்  நான்கரை ஆண்டுகள் அமைதியாக இருந்தவர்கள் தற்போது தேர்தலுக்காக சாதிக் கலவரத்தை தூண்டி ஆதாயம் தேடி வருகின்றனர். குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் பாமகவினரின் கொடிகம்பங்கள் வீழ்த்தப்பட்டு கொடி மற்றும் பேனர்கள் கிழிக்கப்படும் சம்பவம் தொடருகிறது. பாமகவினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. பாமக சமூக நீதிக்காக பாடுபடும் இயக்கம், சாதிய கலவரம் கூடாது என ராமதாஸ் கூறி வருகிறார். ஆனால் கடலூர் மாவட்டத்தில் திட்டமிட்டு ஒரு வன்முறை கும்பல் கலவரத்தில் ஈடுபட்டு வருகிறது. 

                 தமிழகத்தில் திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிடத்தயாரானால் பாமகவும் தனித்து போட்டியிட தயாராக உள்ளது. பாமக கூட்டணி அமைப்பது குறித்து விமர்சனம் செய்கிறார்கள். திமுகவும், அதிமுகவும் மாறி, மாறி கூட்டணி வைத்துக் கொள்ளலாம். ஆனால் பாமக மட்டும் ஏன் மாற்றி கூட்டணி வைக்கக்கூடாது என தி.வேல்முருகன் கூறினார். கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பி.கே.அருள் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

Read more...

வன்னியர் இடஒதுக்கீட்டின் போது மரணமடைந்த தியாகிகளுக்கு டாக்டர் ராமதாஸ் அஞ்சலி

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010


திண்டிவனம்:

              வன்னியர் இடஒதுக்கீட்டின் போது மரணமடைந்த தியாகிகளுக்கு திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸ் நினைவஞ்சலி செலுத்தினார். 1987-ல் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேர் மரணடைந்தனர். 

                   இவர்களின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாமக நிறுவனர் ராமதாசு அனைவரின் உருவ படத்துக்கும் பூ தூவி மெழுகு ஏற்றி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியின் போது முன்னாள் மத்திய அமைச்சர்கள் அன்புமணி ராமதாசு, வேலு, ஏ.கே.மூர்த்தி மற்றும் வன்னியர் சங்கத் தலைவர் குரு, பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி,மாநில் துணைப் பொதுச் செயலர் செந்தமிழ்செல்வன்,மாநில துணைச் செயலர் கருணாநிதி, மாவட்டச் செயலர் ஏழுமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது உயரிழந்த குடும்பங்களுக்கு நலத் திட்ட உதவிகளை ராமதாசு வழங்கினார்.

தேசிங்கு நினைவிடம்: 

                 இட ஒதுக்கீடு போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தேசிங்கு நினைவிடத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.கொள்ளுக்காரன்குட்டையில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் சிறுதொண்டமாதேவியைச் சேர்ந்த தேசிங்கு உயிரிழந்தார். இவரின் நினைவிடத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

                      இதில் முன்னாள் மத்திய அமைச்சர் அரங்கவேலு, மாநிலத் தலைவர் கோ.க.மணி, மாநில இணை பொதுச் செயலர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன், மாநில துணை பொதுச் செயலர் தி.திருமால்வளவன், வன்னிய சங்கத் தலைவர் குரு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP