நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே தர வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற பண்ருட்டி தி. வேல்முருகன் கோரிக்கை
வெள்ளி, 19 அக்டோபர், 2012
மேட்டூர் :
கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நெய்வேலி என்எல்சி அலுவலகம் முன் 20/10/2012 அன்று முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதி தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் கர்நாடக அரசை கண்டித்து பொதுக்கூட்டம் மேச்சேரியில் 18/10/2012 அன்று நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் ஜெயமோகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வீராசாமி வரவேற்றார். கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன், மாநிலத்தலைவர் தீரன், பொதுச்செயலாளர் காவேரி, அமைப்புச் செயலாளர் காமராஜ், இணை பொதுச் செயலாளர் சண்முகம் ஆகியோர் பேசினர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் பேசுகையில்,
‘‘தற்போது காவிரி நீரில் தமிழகத்திற்கு உள்ள பங்கினை கர்நாடக அரசு தர மறுக்கிறது. மத்திய அரசு இதனை தட்டிக் கேட்கவில்லை. தமிழகத்திற்கு நீரை தர மறுக்கும் கர்நாடகத்திற்கு தமிழகத்தில் இருந்து ஒரு விநாடி கூட மின்சாரம் வழங்கக்கூடாது. மின்சாரம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து 20ம் தேதி ஒரு லட்சம் பேரை திரட்டி நெய்வேலி என்எல்சி முன் போராட்டம் நடத்த உள்ளோம்,’ என்றார்.
பின்னர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் அளித்த பேட்டி
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கர்நாடக அரசுக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார். 9 ஆயிரம் கன அடி தண்ணீரை கொடுக்க முடியாது என்று கர்நாடக அமைச்சர்களுடன் சேர்ந்து, இவரும் பிரதமரிடம் கூறுகிறார். இது இந்திய ஒருமைப்பாட்டுக்கே பங்கம் விளைவிக்கும் செயல். இது போன்று நடந்து கொண்ட எஸ்.எம்.கிருஷ்ணாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தமிழக விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உள்ளபோது கர்நாடக அரசு பிடிவாதமாக இருப்பதால் கர்நாடக அரசை கலைத்து விட்டு இந்திய ராணுவத்தை வைத்து பிரதமர் உத்தரவுப்படி தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும். தமிழக முதல்வர் கூறியபடி நாள் ஒன்றுக்கு 2 டிஎம்சி தண்ணீராவது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்காத கர்நாடகத்துக்கு நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே தர வேண்டும் என தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் உற்பத்தியாகும் தனியார் மற்றும் மத்திய தொகுப்பு மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக