நெய்வேலி அனல் மின் நிலையத்தை 20/10/2012 அன்று முற்றுகையிடும் போராட்டம் - பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவிப்பு

ஞாயிறு, 14 அக்டோபர், 2012







 





கடலூர்:


தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கடலூரில் சனிக்கிழமை 13/10/2012 அன்று அளித்த பேட்டி :

உச்சநீதி மன்றமும், காவிரி நதிநீர் ஆணையமும் உத்தரவிட்ட பிறகும், தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும், கர்நாடகத்துக்கு நெய்வேலியில் உற்பத்தியாகி செல்லும் மின்சாரத்தை தடுக்கும் வகையில் வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) தமிழக வாழ்வுரிமை கட்சி ஒரு லட்சம் தமிழர்களை அணி திரட்டி நெய்வேலி அனல்மின் நிலையத்தையும், கர்நாடகத்துக்கு மின்சாரம் செல்லும் டவர்களையும் முற்றுகையிடும் மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த போராட்டத்தில் தமிழர்கள் அனைவரும் சாதி, மதம், கட்சி வேறுபாடுகளை கடந்து தமிழர்களின் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் உரிமையை நிலைநாட்டும் வகையிலும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். காவிரிநதிநீர் தொடர்பாக மத்திய அரசு கூட்டிய கூட்டத்திலும் எந்தவித முன்னேற்றமும் இல்லையென்ற செய்தியும் வந்துள்ளது. எனவே மத்தியில் உள்ள காங்கிரஸ் இதுபோன்ற கண்துடைப்பு நாடகங்களை நடத்தாமல் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் தினசரி 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டதை செயல்படுத்த கர்நாடகத்துக்கு ராணுவத்தை அனுப்பி மத்திய அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளை கொண்டு தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது கர்நாடக அரசை சஸ்பெண்டு செய்து விட்டு உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறை படுத்த கவர்னர் மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 12 நாட்களாக தமிழக பதிவு எண் கொண்ட கார்கள், வாகனங்கள் ஒன்று கூட கர்நாடகத்துக்குள் செல்ல முடியவில்லை. ஆனால் இவ்வளவு கொடுமைகளை செய்து கொண்டு இருக்கிற கர்நாடகத்தை மத்தியஅரசு வேடிக்கை பார்ப்பது கண்டனத்துக்குரியது.

           இதே நிலை தொடர்ந்தால், கர்நாடகா பதிவு எண் பேரூந்துகள், வாகனங்கள் தமிழகத்தின் எல்லைகளில் சிறைபிடிக்கும் போராட்டத்தை நடத்துவோம். தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு ஏற்பட்ட இருக்கிற மின்வெட்டை சரிசெய்கிற வகையில், தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, தமிழகத்தில் உற்பத்தியாகிற ஒட்டு மொத்த மின்சாரத்தையும் தமிழ்நாட்டின் தேவைகளுக்கு தரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

           பேட்டியின் போது மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி, நகர செயலாளர்கள் ஆனந்த், ராஜமூர்த்தி, மாநில மாணவரணி துணை செயலாளர் அருள்பாபு, நிர்வாகிகள் அமலநாதன், அமராவதி, சுப்பு, பஞ்சாயுதம் உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP