ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வேட்பாளார் திருமதி.சீ.வளர்மதி அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு - தி.வேல்முருகன் அறிவிப்பு

புதன், 21 ஜனவரி, 2015

 


தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் இன்று 21.01.2015 விடுத்துள்ள அறிக்கை :

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு!

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 13-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திருமதி வளர்மதி அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு அளிக்கும்.

தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்தது முதல் இதுவரை தமிழர் நலன், தமிழக வாழ்வுரிமைகள் மீட்பில் வெற்றி கண்டுள்ளது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான திட்டவட்டமான தெளிவான நிலைப்பாட்டை பின்பற்றி வருகிறது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தது; பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அணை கட்டுவதைத் தடுத்தது; முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதி பெற்றது;

காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு; கச்சத்தீவை மீட்பதற்கான சட்டப் போராட்டம்; தமிழக மீனவர்கள் விடுதலைக்கான தொடர்ச்சியான போராட்டங்கள்; மேற்கு மாவட்ட விவசாய விளைநிலங்களைப் பாழாக்கும் கெயில் எரிவாயு குழாய் திட்டத்தை முடக்கியது ஆகிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உயிர்மூச்சான கொள்கைகளை நிறைவேற்றியது அ.தி.மு.க. அரசுதான்.

அதேபோல் தமிழீழ இனப்படுகொலையை நிகழ்த்திய கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக தண்டிக்க வேண்டும்; தமிழீழ மக்களின் அரசியல் விருப்பங்களை அறிய ஐ.நா. அவையத்தின் முன்னிலையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்; தமிழினப் படுகொலையை நிகழ்த்திய இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றி அதைத் தொடர்ந்தும் கடைபிடித்து வருகிறது அ.தி.மு.க. அரசு.

அத்துடன் தமிழ்நாட்டுக்குள் விளையாட்டு போட்டிகள் என்ற பெயரில் சிங்களர் எவரும் நுழைய முடியாத கடுமையான நிலைப்பாட்டை அ.தி.மு.க அரசு மேற்கொண்டு வருகிறது. இலங்கைக்கு சென்ற தமிழ்நாட்டு கபடி வீரரர்களைத் திருப்பி அழைத்ததுடன் அப்படி அனுப்பி வைத்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்ததும் அ.தி.மு.க. அரசுதான்.

இப்படி தமிழகம் இழந்த வாழ்வுரிமைகளை மீட்டெடுப்பதில்- ஈழத் தமிழருக்கு ஆதரவான உறுதியான நிலைப்பாட்டை மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசாங்கம் மேற்கொண்டிருப்பதால் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திருமதி வளர்மதி அவர்களை பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றி திருமதி வளர்மதி அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்போடு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP