கிருஷ்ணகிரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மொழிப்போராளிகளுக்கான வீரவணக்க நாள் மாபெரும் பொதுக்கூட்டம் - பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்

திங்கள், 26 ஜனவரி, 2015


தமிழக வாழ்வுரிமைக் கட்சி 4ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மொழிப்போராளிகளுக்கான வீரவணக்க நாள் மாபெரும் பொதுக்கூட்டம் 25.01.2015 அன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1) தமிழ்நாட்டில் கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து சிறைக் கொட்டடிகளிலேயே மாவீரர்கள் நடராசன்-தாளமுத்து ஆகியோர் 1937-38களில் இன்னுயிர் ஈந்து மாபெரும் தியாகப் பெருவரலாற்றைத் தொடங்கி வைத்தனர். பின்னர் 1965-ல் விருகம்பாக்கம் அரங்கநாதன், மயிலாடுதுறை சாரங்கபாணி, கீரனூர் மூத்து, விராலிமலை சண்முகம், கீழப்பாவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், பீளமேடு தண்டபாணி, அய்யம்பாளையம் வீரப்பன் என எண்ணற்ற போராளிகள் நஞ்சுண்டும் தேக்குமர தேகங்களை தீகங்குகள் தின்னக் கொடுத்தும் சிதம்பரம் அண்ணா பல்கலைக் கழகத்தில் ராசேந்திரன் உள்ளிட்ட மாணவர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கும் தங்களை ஈந்து ஆகுதியாக்கி மொழிகாத்த மாவீரர்களாக மண்ணிலே விதைக்கப்பட்டனர். தமிழ் மொழி காக்க தங்களையே தற்கொடையாக்கிய இந்த தமிழ் மொழிகாப்பு களப் போராளிகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இம்மாபெரும் பொதுக்கூட்டம் செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.

2) தமிழ்நாட்டில் மீண்டும் இந்தி மொழியைத் திணித்து மற்றொரு தமிழ்மொழி காப்பு போருக்கான அனைத்துவித சூழ்நிலைகளையும் மத்தியிலேயே ஆளுகிற இந்தியப் பேரரசு நம் மீது திணித்துக் கொண்டிருக்கிறது. இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளையும் இந்துத்துவ பண்பாட்டு திணிப்பையும் எதிர்க்கும் போர்க்களத்தில் சர்வபரிதியாகங்களுக்கும் தயாராக மொழிகாத்த மாவீரர்கள் வழியில் நின்று தீரமுடன் போராடி வெல்வோம் என்று இந்த மொழிப்போராளிகள் வீரவணக்க நாளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இப்பொதுக்கூட்டம் உறுதி ஏற்கிறது.

3) காவிரி, முல்லைப் பெரியாறு, ஈழத் தமிழர் விவகாரங்களில் உறுதியான தமிழினத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகிறது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு. ஆகையால் ஸ்ரீரங்கம் சட்டமன்ற இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் திருமதி வளர்மதியை ஆதரிப்பது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி முடிவெடுத்துள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் இளம்புயல் திரு. வேல்முருகன் அவர்கள் தலைமையில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திருமதி வளர்மதியை வெற்றி பெறச் செய்வது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

4) காவிரியின் குறுக்கே மேகதாது மற்றும் ராசிமணல் பகுதியில் 3 அணைகளை கட்ட கர்நாடக அரசு பகீரத முயற்சி செய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் 22 லட்சம் ஏக்கர் விளைநிலம் பாதிக்கப்படும். தஞ்சை, திருவாரூர், நாகை உள்பட 20 மாவட்டங்கள், சென்னை உள்பட 7 மாநகராட்சிகள் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும்; 5 கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகின்ற காவிரி நீரை தடுத்து நிறுத்த கர்நாடக அரசு அணைகளை கட்ட முயற்சி செய்வதை மத்திய அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்; அத்துடன் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழுவை உடனே மத்திய அரசு அமைக்க வேண்டும்.

5) தமிழ்நாட்டு கடல் தொழிலாளர்களான மீனவர்களை சிங்களப் பேரினவாத கடற்படை தொடர்ந்தும் கைது செய்வதும் அவர்களது படகுகளை பறிமுதல் செய்வது; நடுக்கடலில் தாக்கி விரட்டியடிப்பது என்ற அட்டூழிய நடவடிக்கை தொடர்கிறது. இலங்கை சிறையில் வாடுகிற தமிழ்நாட்டு மீனவர்களையும் அவர்களது வாழ்வாதாரமான படகுகளையும் மீட்டுத் தருவதற்கு மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் இத்தகைய அட்டூழியம் இனியும் தொடராக்கூடாது என்று இலங்கை அரசை கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு கச்சத்தீவை மீட்பது மட்டுமே என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக ஆதரிப்பதுடன் இதுதொடர்பான தமிழ்நாடு அரசின் அனைத்துவித நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருப்போம் என்றும் இப்பொதுக்கூட்டம் தீர்மானிக்கிறது.

6) இலங்கைத் தீவின் அரச தலைவர் தேர்தலில் கொடுங்கோலன் இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சே வீழ்த்தப்பட்டுவிட்டான் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றுதான்.. இருப்பினும் புதிய அரச தலைவராகி இருக்கும் மைத்ரிபால சிறிசேனவும் 13வது அரசியல் சாசனத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது, ஒற்றையாட்சிக்குட்பட்ட முறையில் தீர்வு என்று பழைய பல்லவியைப் பாடி வருகிறார். இலங்கையின் அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேன வெல்வதற்கு காரணமே ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் வாக்குகள் மட்டுமே என்பதை உணர்ந்து அவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையத்தின் முன்னிலையில் தமிழீழ மக்களின் அரசியல் விருப்பங்களை அறிவதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும் என்றும் இம்மாபெரும் பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

7) தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களை புளோரைடு பாதிப்பில் இருந்து பாதுக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை அனைத்து கிராமங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று தமிழக அரசை இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

8) நெற்களஞ்சியமாம் காவிரி பாசனப் பகுதிகளை பாலைவனமாக்கும் சதித் திட்டத்துடன் நிறைவேற்றப்படுகிற நாசகார மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை மத்திய அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

9) இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டின் போடி பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டுவதை இக்கூட்டம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இத்திட்டத்தை நிறைவேற்றினால் சுற்றுச் சூழல் சீர்கெடும்; மிகவும் வலுவாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் முல்லைப் பெரியாறு அணைக்கு பேராபத்தாகவும் முடியும் என்பதால் இந்த மக்கள் விரோத திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

10) கூடங்குளத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட 1,2வது அணு உலைகளே உருப்படியாக செயல்படாமல் தமிழ்நாட்டு மக்களை சோதனைக் கூடத்துக்கு எலிகளைப் போல் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகளை நிறுவ மத்திய அரசு முயற்சிப்பது மக்கள் விரோதச் செயலாகும். மத்திய அரசின் இந்த துரோகத்துக்கு எதிரான கூடங்குளம் போராட்டக் குழுவுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்தும் தோளோடு தோள் நின்று போராட்டங்களை அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கவும் இந்தக் கூட்டம் உறுதி ஏற்கிறது.

11) கிருஷ்ணகிரி மாவட்ட விவசாய மக்களின் நலன் கருதி உருவாக்கப்பட்டு கிடப்பில் கிடக்கும் படேதனாவ் ஏரி கால்வாய் திட்டத்தை செயல்படுத்தியும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி தண்ணீர் கொண்டுவரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை இப்பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

12) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முறைகேடாக செயல்பட்டு வரும் கிரானைக் குவாரிகள் குறித்து உரிய ஆய்வு நடத்தி சட்டவிரோதமாக இயற்கை வளத்தைக் கொள்ளையடிப்போர் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.

13) தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ2 ஆயிரம் எனவும் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ3,500 என விலை நிர்ணயம் செய்து வழங்கிவிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை இப்பொதுக்கூட்டம் அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.

14) தமிழ்நாட்டில் பல ஆண்டுகாலமாக அகதிகள் முகாம்களில் இருந்து வரும் ஈழத் தமிழர்கள் இலங்கைக்கு வர வேண்டும் என்று அந்நாட்டு அரசு அழைப்பு விடுக்கிறது. இந்திய அரசும் இது குறித்து ஆலோசிப்பதாக கூறி வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகளில் தமிழீழத் தாய் மண்ணுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தவர்களை மட்டுமே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதைவிடுத்த்து தமிழ்நாட்டில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகளை வலுக்காட்டாயமாக தமிழீழத்துக்கு அனுப்பக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. அத்துடன் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களை அடைத்து வைத்திருக்கும் சிறைச்சாலைகளான சிறப்பு அகதிகள் முகாம்களை இழுத்து மூடி அம்முகாம்களில் அடைக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் இப்பொதுக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.

15) கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கணிக்கோட்டை பகுதியில் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட ஏழை மாணவர்கள் உயர் கல்வியைப் பெறும் வகையில் இங்கே அரசு கலைக் கல்லூரியை அமைத்துத் தர வேண்டும் என்ற நீண்டநாளைய கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

16) கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் நுழைவதும் விளைநிலங்களை நாசப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது. வனப்பகுதியை விட்டு வெளியே வரும் யானைகள் விவசாயிகளை மிதித்து உயிரைப் பறிப்பதும் தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. இப்படி யானைகளாள் உயிரிழப்பை சந்திக்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய நட்ட ஈட்டை தமிழக அரசு வழங்குவதுடன் ஊருக்குள்ளும் விளைநிலங்களையும் யானைகள் சேதப்படுத்தாதவாறு உரிய நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த மாபெரும் பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
























0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP