தமிழகத்தின் 7 மாவட்ட வாழ்வாதாரத்தை அடியோடு நாசமாக்கும் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை நிறைவேற்ற மும்முரம் காட்டும் மத்திய அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கடும் கண்டனம்!

வெள்ளி, 30 ஜனவரி, 2015


தமிழகமே எதிர்க்கும் விளைநிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை எப்படியும் நிறைவேற்ற மும்முரம் காட்டும் மத்திய அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் திரு.தி.வேல்முருகன் கடும் கண்டனம்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் இன்று (30.01.2015) விடுத்துள்ள அறிக்கை:

மத்திய அரசின் கெயில் நிறுவனமானது கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு இயற்கை எரிவாயு குழாய்களை கொண்டு செல்வதற்காக தமிழ்நாட்டின் கோவை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்களில் விவசாய நிலங்களை கபளீகரம் செய்ய முயற்சித்தது. இதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி உட்பட அனைத்து விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தன.

இதனைத் தொடர்ந்து கெயில் எரிவாயு குழாய் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் விளைநிலங்கள் வழியாக கெயில் எரிவாயு குழாய்கள் எடுத்துச் செல்ல சென்னை உயர்நீதிமன்றம் அளித்த அனுமதியை எதிர்த்து கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றமும் கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கு இடைக்கால தடை விதித்து தமிழக மக்களுக்கு சற்றே ஆறுதலைத் தந்தது.

ஆனாலும் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் வேட்டையாடி வஞ்சிப்பது மட்டுமே தங்களது கொள்கையாகக் கொண்டிருக்கிற இந்தியப் பேரரசு தொடர்ந்தும் எப்பாடுபட்டாவது இந்த கெயில் திட்டத்தை தமிழர் தலையில் திணித்து 7 மாவட்ட விவசாயிகளின் வயிற்றில் அடித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது.

இதனடிப்படையில்தான் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையிலும் கூட கெயில் எரிவாயு குழாய்களைப் பதிக்கும் வகையில் சில இடங்களில் மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கோரி பசுமைத் தீர்ப்பாயத்துக்குப் போனது இந்திய அரசு. ஆனாலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாலும் இடைக்கால தடை விதிக்கப்பட்டிருப்பதாலும் இது தொடர்பான மற்ற மனுக்களுடன் சேர்த்து இம்மனுவை விசாரிக்கும் என்று உத்தரவு பிறப்பித்தது.

ஆனாலும் தமிழரை வேட்டையாடியே தீருவது என்ற வெறித்தனத்துடன் இந்தியப் பேரரசு தற்போது உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்திய அரசின் சார்பில் ரஞ்ஜித் குமார் என்பவர் உச்சநீதிமன்றத்திலே நேற்று மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். அம் மனுவில் கெயில் எரிவாயு குழாய்களைப் பதிப்பதற்காக மரங்களை வெட்ட அனுமதி கோரிய மத்திய அரசின் மனுவை முக்கிய மனுவுடன் சேர்த்து விசாரிக்காமல் தனியாக பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடவேண்டும் என்று அவசரம் காட்டியுள்ளார்.

இதுதான் தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு அங்கமாக பார்க்கிற இந்தியப் பேரரசின் லட்சணமா? இதுதான் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று மங்களம் பாடிய மோடி அரசின் யோக்கியதையா? ஒரு ஒட்டுமொத்த மாநிலமே எதிர்க்கிறது... 8 கோடி தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதிர்க்கிறது என்பதைப் பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படாமல் கூடங்குளம் அணு உலை, மீத்தேன் எரிவாயு, நியூட்ரினோ போன்ற நாசகார திட்டங்கள் வழியில் கெயில் எரிவாயு குழாய் திட்டத்தையும் தமிழ்நாட்டில் மண்ணில் நிறைவேற்றிட இந்தியப் பேரரசு முயற்சிப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.

இத்தகைய நிலைப்பாடுகளால் நடவடிக்கைகளால் இந்தியாவின் ஒருமைப்பாட்டை மதிக்கிற தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களில் எதிர்மறையான சிந்தனைகளை இந்தியப் பேரரசு விதைத்துக் கொண்டிருக்கிறது.. இதனால் ஏற்படப் போகிற எதிர்கால விளைவுகளுக்கு தமிழ்நாடு ஒரு போதும் பொறுப்பில்லை என்றும் கடுமையாக எச்சரிகிறேன்.

தமிழகத்தின் 7 மாவட்ட வாழ்வாதாரத்தை அடியோடு நாசமாக்கும் இந்த கெயில் எரிவாயு குழாய் திட்டத்தை என்ன விலை கொடுத்தேனும் தடுத்து நிறுத்துவோம்! இதற்காக ஜாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து தமிழராய் ஓரணியில் ஒன்று திரண்டு போராடி இந்திய அரசு திணிக்க முயற்சிக்கும் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை விரட்டியடிப்போம் என்று அனைத்து ஜனநாயக, தமிழ்த் தேசிய சக்திகளையும் கேட்டுக் கொள்கிறேன்.

Read more...

ஈழத்தமிழர்களின் உயிரை காக்க இந்திய அரசை வலியுறுத்தி சாஸ்திரி பவனில் தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் 6ம் ஆண்டு நினைவு தினம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் ஈகச்சுடரேற்றி வீரவணக்கம்

வியாழன், 29 ஜனவரி, 2015

தமிழீழத் தமிழினம் காக்க தன்னுயிர் ஈந்த வீரத் தமிழன் மாவீரன் முத்துக்குமாருக்கு சென்னை கொளத்தூரில் உள்ள மாவீரன் முத்துக்குமார் நினைவிடத்தில் இன்று (29-1-2015) ஈகச்சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் அய்யா நல்லகண்ணு, தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் த. வெள்ளையன், புரட்சித் தமிழன் நடிகர் சத்யராஜ், பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள், இயக்குநர் கவுதமன், கரும்புலி முத்துக்குமாரின் குடும்பத்தினர் உட்பட நூற்றுக்கணக்கானோர் வீரவணக்கம் செலுத்தினர்.









Read more...

66-வது குடியரசு தின விழாவில் தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கண்டனம்

திங்கள், 26 ஜனவரி, 2015

குடியரசு தின விழாவில் தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் இன்று 26.01.2015  வெளியிட்டுள்ள அறிக்கை:

  இந்தியப் பேரரசின் 66-வது குடியரசு தின கொண்டாட்டங்கள் டெல்லியில் இன்று நடைபெற்றன. அமெரிக்க பேரரசின் அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டதால் உலகமே இந்த விழாவை உற்று நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் "வேற்றுமையில் ஒற்றுமை" பாராட்டும் நாடு இந்தியா என்பதை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு மாநிலங்களின் கலாசாரங்களை சிறப்புகளை வெளிப்படுத்துகிற அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது வழக்கம். தமிழ்நாட்டு அரசின் அலங்கார ஊர்திக்கு கடந்த ஆண்டு 2வது பரிசும் கூட கிடைத்திருந்தது.

ஆனால் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் மொத்தமே 16 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட 13 மாநிலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

உலகமே கண்டுகளிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வானது பாதிக்கும் மேலான மாநிலங்களின் பங்கேற்பின்றி நிகழ்ந்திருப்பது இந்திய கூட்டாட்சித் தன்மைக்கு எதிரானது. இந்தியப் பேரரசின் இப்போக்கு கண்டனத்துக்கு உரியதாகும்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை அனுமதி மறுக்கப்பட்ட மாநிலங்களில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறோம்.. வஞ்சிக்கப்பட்டுள்ளோம் என்ற பிரிவினை எண்ணத்தைத்தான் விதைக்கும். அதுவும் மத்திய அரசு அனுமதி மறுத்துள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, பீகார், ஒடிஷா என பல மாநிலங்கள் பாரதிய ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

அப்படியானால் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள்தான் இந்த நாட்டின் ஒரு அங்கமா? என்ற கேள்வியையும் மத்திய அரசின் நடவடிக்கையால் எழுந்துள்ளது. அனைத்து மாநிலங்களுமே இந்தியக் கூட்டாட்சியின் ஒரு அங்கம் என்ற எண்ணத்துடன்தான் மத்திய அரசு செயல்பட வேண்டுமே தவிர இத்தகைய மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இத்தகைய போக்குகளைக் கைவிட்டு மாநிலங்களை ஒரு அங்கமாக அம்மாநில உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு செயல்பட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

கிருஷ்ணகிரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மொழிப்போராளிகளுக்கான வீரவணக்க நாள் மாபெரும் பொதுக்கூட்டம் - பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்


தமிழக வாழ்வுரிமைக் கட்சி 4ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மொழிப்போராளிகளுக்கான வீரவணக்க நாள் மாபெரும் பொதுக்கூட்டம் 25.01.2015 அன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1) தமிழ்நாட்டில் கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து சிறைக் கொட்டடிகளிலேயே மாவீரர்கள் நடராசன்-தாளமுத்து ஆகியோர் 1937-38களில் இன்னுயிர் ஈந்து மாபெரும் தியாகப் பெருவரலாற்றைத் தொடங்கி வைத்தனர். பின்னர் 1965-ல் விருகம்பாக்கம் அரங்கநாதன், மயிலாடுதுறை சாரங்கபாணி, கீரனூர் மூத்து, விராலிமலை சண்முகம், கீழப்பாவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், பீளமேடு தண்டபாணி, அய்யம்பாளையம் வீரப்பன் என எண்ணற்ற போராளிகள் நஞ்சுண்டும் தேக்குமர தேகங்களை தீகங்குகள் தின்னக் கொடுத்தும் சிதம்பரம் அண்ணா பல்கலைக் கழகத்தில் ராசேந்திரன் உள்ளிட்ட மாணவர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கும் தங்களை ஈந்து ஆகுதியாக்கி மொழிகாத்த மாவீரர்களாக மண்ணிலே விதைக்கப்பட்டனர். தமிழ் மொழி காக்க தங்களையே தற்கொடையாக்கிய இந்த தமிழ் மொழிகாப்பு களப் போராளிகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இம்மாபெரும் பொதுக்கூட்டம் செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.

2) தமிழ்நாட்டில் மீண்டும் இந்தி மொழியைத் திணித்து மற்றொரு தமிழ்மொழி காப்பு போருக்கான அனைத்துவித சூழ்நிலைகளையும் மத்தியிலேயே ஆளுகிற இந்தியப் பேரரசு நம் மீது திணித்துக் கொண்டிருக்கிறது. இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளையும் இந்துத்துவ பண்பாட்டு திணிப்பையும் எதிர்க்கும் போர்க்களத்தில் சர்வபரிதியாகங்களுக்கும் தயாராக மொழிகாத்த மாவீரர்கள் வழியில் நின்று தீரமுடன் போராடி வெல்வோம் என்று இந்த மொழிப்போராளிகள் வீரவணக்க நாளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இப்பொதுக்கூட்டம் உறுதி ஏற்கிறது.

3) காவிரி, முல்லைப் பெரியாறு, ஈழத் தமிழர் விவகாரங்களில் உறுதியான தமிழினத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகிறது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு. ஆகையால் ஸ்ரீரங்கம் சட்டமன்ற இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் திருமதி வளர்மதியை ஆதரிப்பது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி முடிவெடுத்துள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் இளம்புயல் திரு. வேல்முருகன் அவர்கள் தலைமையில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திருமதி வளர்மதியை வெற்றி பெறச் செய்வது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

4) காவிரியின் குறுக்கே மேகதாது மற்றும் ராசிமணல் பகுதியில் 3 அணைகளை கட்ட கர்நாடக அரசு பகீரத முயற்சி செய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் 22 லட்சம் ஏக்கர் விளைநிலம் பாதிக்கப்படும். தஞ்சை, திருவாரூர், நாகை உள்பட 20 மாவட்டங்கள், சென்னை உள்பட 7 மாநகராட்சிகள் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும்; 5 கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகின்ற காவிரி நீரை தடுத்து நிறுத்த கர்நாடக அரசு அணைகளை கட்ட முயற்சி செய்வதை மத்திய அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்; அத்துடன் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழுவை உடனே மத்திய அரசு அமைக்க வேண்டும்.

5) தமிழ்நாட்டு கடல் தொழிலாளர்களான மீனவர்களை சிங்களப் பேரினவாத கடற்படை தொடர்ந்தும் கைது செய்வதும் அவர்களது படகுகளை பறிமுதல் செய்வது; நடுக்கடலில் தாக்கி விரட்டியடிப்பது என்ற அட்டூழிய நடவடிக்கை தொடர்கிறது. இலங்கை சிறையில் வாடுகிற தமிழ்நாட்டு மீனவர்களையும் அவர்களது வாழ்வாதாரமான படகுகளையும் மீட்டுத் தருவதற்கு மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் இத்தகைய அட்டூழியம் இனியும் தொடராக்கூடாது என்று இலங்கை அரசை கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு கச்சத்தீவை மீட்பது மட்டுமே என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக ஆதரிப்பதுடன் இதுதொடர்பான தமிழ்நாடு அரசின் அனைத்துவித நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருப்போம் என்றும் இப்பொதுக்கூட்டம் தீர்மானிக்கிறது.

6) இலங்கைத் தீவின் அரச தலைவர் தேர்தலில் கொடுங்கோலன் இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சே வீழ்த்தப்பட்டுவிட்டான் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றுதான்.. இருப்பினும் புதிய அரச தலைவராகி இருக்கும் மைத்ரிபால சிறிசேனவும் 13வது அரசியல் சாசனத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது, ஒற்றையாட்சிக்குட்பட்ட முறையில் தீர்வு என்று பழைய பல்லவியைப் பாடி வருகிறார். இலங்கையின் அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேன வெல்வதற்கு காரணமே ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் வாக்குகள் மட்டுமே என்பதை உணர்ந்து அவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையத்தின் முன்னிலையில் தமிழீழ மக்களின் அரசியல் விருப்பங்களை அறிவதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும் என்றும் இம்மாபெரும் பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

7) தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களை புளோரைடு பாதிப்பில் இருந்து பாதுக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை அனைத்து கிராமங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று தமிழக அரசை இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

8) நெற்களஞ்சியமாம் காவிரி பாசனப் பகுதிகளை பாலைவனமாக்கும் சதித் திட்டத்துடன் நிறைவேற்றப்படுகிற நாசகார மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை மத்திய அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

9) இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டின் போடி பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டுவதை இக்கூட்டம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இத்திட்டத்தை நிறைவேற்றினால் சுற்றுச் சூழல் சீர்கெடும்; மிகவும் வலுவாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் முல்லைப் பெரியாறு அணைக்கு பேராபத்தாகவும் முடியும் என்பதால் இந்த மக்கள் விரோத திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

10) கூடங்குளத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட 1,2வது அணு உலைகளே உருப்படியாக செயல்படாமல் தமிழ்நாட்டு மக்களை சோதனைக் கூடத்துக்கு எலிகளைப் போல் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகளை நிறுவ மத்திய அரசு முயற்சிப்பது மக்கள் விரோதச் செயலாகும். மத்திய அரசின் இந்த துரோகத்துக்கு எதிரான கூடங்குளம் போராட்டக் குழுவுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்தும் தோளோடு தோள் நின்று போராட்டங்களை அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கவும் இந்தக் கூட்டம் உறுதி ஏற்கிறது.

11) கிருஷ்ணகிரி மாவட்ட விவசாய மக்களின் நலன் கருதி உருவாக்கப்பட்டு கிடப்பில் கிடக்கும் படேதனாவ் ஏரி கால்வாய் திட்டத்தை செயல்படுத்தியும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி தண்ணீர் கொண்டுவரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை இப்பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

12) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முறைகேடாக செயல்பட்டு வரும் கிரானைக் குவாரிகள் குறித்து உரிய ஆய்வு நடத்தி சட்டவிரோதமாக இயற்கை வளத்தைக் கொள்ளையடிப்போர் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.

13) தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ2 ஆயிரம் எனவும் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ3,500 என விலை நிர்ணயம் செய்து வழங்கிவிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை இப்பொதுக்கூட்டம் அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.

14) தமிழ்நாட்டில் பல ஆண்டுகாலமாக அகதிகள் முகாம்களில் இருந்து வரும் ஈழத் தமிழர்கள் இலங்கைக்கு வர வேண்டும் என்று அந்நாட்டு அரசு அழைப்பு விடுக்கிறது. இந்திய அரசும் இது குறித்து ஆலோசிப்பதாக கூறி வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகளில் தமிழீழத் தாய் மண்ணுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தவர்களை மட்டுமே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதைவிடுத்த்து தமிழ்நாட்டில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகளை வலுக்காட்டாயமாக தமிழீழத்துக்கு அனுப்பக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. அத்துடன் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களை அடைத்து வைத்திருக்கும் சிறைச்சாலைகளான சிறப்பு அகதிகள் முகாம்களை இழுத்து மூடி அம்முகாம்களில் அடைக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் இப்பொதுக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.

15) கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கணிக்கோட்டை பகுதியில் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட ஏழை மாணவர்கள் உயர் கல்வியைப் பெறும் வகையில் இங்கே அரசு கலைக் கல்லூரியை அமைத்துத் தர வேண்டும் என்ற நீண்டநாளைய கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

16) கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் நுழைவதும் விளைநிலங்களை நாசப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது. வனப்பகுதியை விட்டு வெளியே வரும் யானைகள் விவசாயிகளை மிதித்து உயிரைப் பறிப்பதும் தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. இப்படி யானைகளாள் உயிரிழப்பை சந்திக்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய நட்ட ஈட்டை தமிழக அரசு வழங்குவதுடன் ஊருக்குள்ளும் விளைநிலங்களையும் யானைகள் சேதப்படுத்தாதவாறு உரிய நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த மாபெரும் பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
























Read more...

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வேட்பாளார் திருமதி.சீ.வளர்மதி அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு - தி.வேல்முருகன் அறிவிப்பு

புதன், 21 ஜனவரி, 2015

 


தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் இன்று 21.01.2015 விடுத்துள்ள அறிக்கை :

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு!

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 13-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திருமதி வளர்மதி அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு அளிக்கும்.

தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்தது முதல் இதுவரை தமிழர் நலன், தமிழக வாழ்வுரிமைகள் மீட்பில் வெற்றி கண்டுள்ளது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான திட்டவட்டமான தெளிவான நிலைப்பாட்டை பின்பற்றி வருகிறது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தது; பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அணை கட்டுவதைத் தடுத்தது; முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதி பெற்றது;

காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு; கச்சத்தீவை மீட்பதற்கான சட்டப் போராட்டம்; தமிழக மீனவர்கள் விடுதலைக்கான தொடர்ச்சியான போராட்டங்கள்; மேற்கு மாவட்ட விவசாய விளைநிலங்களைப் பாழாக்கும் கெயில் எரிவாயு குழாய் திட்டத்தை முடக்கியது ஆகிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உயிர்மூச்சான கொள்கைகளை நிறைவேற்றியது அ.தி.மு.க. அரசுதான்.

அதேபோல் தமிழீழ இனப்படுகொலையை நிகழ்த்திய கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக தண்டிக்க வேண்டும்; தமிழீழ மக்களின் அரசியல் விருப்பங்களை அறிய ஐ.நா. அவையத்தின் முன்னிலையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்; தமிழினப் படுகொலையை நிகழ்த்திய இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றி அதைத் தொடர்ந்தும் கடைபிடித்து வருகிறது அ.தி.மு.க. அரசு.

அத்துடன் தமிழ்நாட்டுக்குள் விளையாட்டு போட்டிகள் என்ற பெயரில் சிங்களர் எவரும் நுழைய முடியாத கடுமையான நிலைப்பாட்டை அ.தி.மு.க அரசு மேற்கொண்டு வருகிறது. இலங்கைக்கு சென்ற தமிழ்நாட்டு கபடி வீரரர்களைத் திருப்பி அழைத்ததுடன் அப்படி அனுப்பி வைத்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்ததும் அ.தி.மு.க. அரசுதான்.

இப்படி தமிழகம் இழந்த வாழ்வுரிமைகளை மீட்டெடுப்பதில்- ஈழத் தமிழருக்கு ஆதரவான உறுதியான நிலைப்பாட்டை மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசாங்கம் மேற்கொண்டிருப்பதால் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திருமதி வளர்மதி அவர்களை பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றி திருமதி வளர்மதி அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்போடு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

இந்தியாவில் இருந்து ஈழத் தமிழ் அகதிகளை கட்டாயமாக இலங்கைக்கு அனுப்ப கூடாது மத்திய அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வேண்டுகோள்

செவ்வாய், 20 ஜனவரி, 2015

இந்தியாவில் இருந்து ஈழத் தமிழ் அகதிகளை கட்டாயமாக இலங்கைக்கு அனுப்ப கூடாது மத்திய அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள்! 
 
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள்  இன்று 20.01.2015 விடுத்துள்ள அறிக்கை :

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை டெல்லியில் சந்தித்த இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர, இந்தியாவில் இருந்து ஈழத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது குறித்து விவாதித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சிங்களப் பேரினவாதத்தின் இனப்படுகொலை வெறியாட்டத்தில் இருந்து தப்பிக்கவே தமிழ்நாட்டுக்கு ஈழத் தமிழர்கள் வாழ்விடங்களையும் உறவுகளையும் விட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதுமென்று அடைக்கலம் தேடி வந்தனர். இந்த மண்ணில் எந்த ஒரு அடிப்படை உரிமைகள் ஏதும் இல்லாத கொட்டடி முகாம்களிலே பெரும் துயரை பல்லாண்டுகாலம் அனுபவித்தும் வருகின்றனர்.

அத்துடன் சிறப்பு அகதிகள் முகாம் என்ற பெயரில் சிறைச்சாலைகளிலும் பலர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் ஒரு அங்கமான தமிழ்நாட்டின் 8 கோடி மக்களின் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழ் அகதிகள் மீது இந்நாள் வரை எந்த ஒரு கரிசனத்தையும் இந்தியப் பேரரசு காட்டியது இல்லை. அவர்களுக்கான உதவியை மாநில அரசுதான் செய்து வருகிறது.

ஆனால் திபெத் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு தஞ்சம் கோரி வந்த திபெத் அகதிகளோ, இந்தியாவுக்குள் தாங்கள் வாழும் பகுதியை ஒரு தனிநாடு போல் அமைத்து வாழ்வதற்கு அத்தனை வசதிகளையும் உரிமைகளையும் இந்தியப் பேரரசு செய்து கொடுக்கிறது. எத்தனையோ முறை தமிழ்நாடு இதனை சுட்டிக்காட்டியும் இந்தியப் பேரரசு கண்டுகொண்டதே இல்லை.

இந்த நிலையில் திடீரென இலங்கைக்கு ஈழத் தமிழ் அகதிகளை அனுப்புவது குறித்து இலங்கை அமைச்சருடன் இந்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியிருப்பது பல்வேறு அச்சங்களை எழுப்பியுள்ளது.

இந்தியாவில் முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் தாங்களாகவே முன்வந்து தமிழீழத் தேசத்துக்கு திரும்பிச் செல்கிறோம் என்று விண்ணப்பித்திருந்தால் மட்டுமே அவர்கள் தாய் மண்ணுக்கு திரும்புவதற்கு இந்திய அரசு உதவ வேண்டும். இலங்கையில்தான் நிலைமை சரியாகிவிட்டதே என்று பொய்யான காரணத்தை கூறி ஈழத் தமிழ் அகதிகள் அனைவரையும் கட்டாயமாக இலங்கைக்கு திருப்பி அனுப்புகிற நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கிறோம்.

தமிழீழத் தேசத்தில் இன்னமும் சிங்களப் பேரினவாத படைகள் குவிக்கப்பட்டுத்தான் இருக்கின்றன. தமிழீழத் தேசத்தில் எங்கள் சகோதரிகளை சிங்கள ராணுவ காடையர்கள் சொல்லொண்ணா துயரத்துக்குள்ளாக்கி வருகிற கொடூரம் நடந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் அதிபர்களும் பிரதமர்களும் மாறிவிட்டதாலேயே பேரினவாத ஒடுக்குமுறை ஒழிந்துபோய்விடவில்லை.

புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன, தேர்தலின் போதே தமிழீழத் தேசத்தில் இருந்து சிங்களப் படைகளை விலக்கமாட்டோம் என்று அறிவித்த நபர் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம். ஆகையால் ஈழத் தமிழ் அகதிகளை ஒருபோதும் வலுக்கட்டாயமாக இந்திய மண்ணில் இருந்து இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கையை இந்தியப் பேரரசு மேற்கொள்ளவே கூடாது. இதனை இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசும் மாண்புமிகு முதல்வர் அவர்களும் வலியுறுத்த வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
 
பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

தேனி மாவட்டத்தில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிராக, தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் மிகப்பெரிய போராட்டம் - பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவிப்பு

திங்கள், 19 ஜனவரி, 2015

தேனி மாவட்டத்தில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிராக, தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் மிகப்பெரிய போராட்டம் - பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவிப்பு

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் திண்டுக்கல்லில் இன்று 19.01.2015 செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளவில்லை. அதே நேரத்தில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தடையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது.ஜல்லிக்கட்டு போட்டிகளை மேற்கத்திய கலாச்சாரம் என கூறியதன் மூலம் தமிழர்களை அவமதித்துள்ள மத்திய அமைச்சர் மேனகா காந்தி, மன்னிப்பு கேட்க வேண்டும். உயிர்களின் மீது அவருக்கு உண்மையான அக்கறை இருக்குமெனில், 2009ஆம் ஆண்டு இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது, ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை.

தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் அதிமுகவுக்கு, ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலிலும் ஆதரவாக செயல்படுவோம். மதம் மற்றும் ஜாதி அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தி, பாரதிய ஜனதா கட்சியால் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. வெளிநாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், தேனி மாவட்டத்தின் மண் வளம், சுற்றுச்சூழல் மற்றும் கணிம வளம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிராக, 150க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளுடன் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.

ஒரு டன் கரும்புக்கு கொள்முதல் விலையாக ரூ.3500 வழங்க வேண்டும். தனியார் கரும்பு ஆலைகள் ஒன்றிணைந்து சின்டிகேட் அமைத்து, கரும்புக்கான விலையை நிர்ணயம் செய்யும் நிலை உள்ளது. இதனை தடுக்கும் வகையில், அனைத்து ஆலைகளையும், அரசு உடைமையாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Read more...

நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தின் முதலாவது சுரங்க விரிவாக்கத்துக்காக பொதுமக்கள் நிலங்களை கட்டாயமாக கையகப்படுத்துவதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கண்டனம்

திங்கள், 12 ஜனவரி, 2015



 
என்.எல்.சி. நிறுவன விரிவாக்கத்துக்காக பொதுமக்கள் நிலங்களை கட்டாயமாக கையகப்படுத்துவதற்கு  தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள அறிக்கை: 
 
என்.எல்.சி. நிறுவன விரிவாக்கத்துக்காக பொதுமக்கள் நிலங்களை கட்டாயமாக கையகப்படுத்துவதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

நெய்வேலி அனல் மின் நிலையத்தின் முதலாவது சுரங்க விரிவாக்கத்துக்காக சுற்று வட்டார கிராம மக்களின் நிலங்களை கட்டாயமாக கையகப்படுத்தும் முயற்சியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடுமையாக கண்டிக்கிறது.

முதலாவது சுரங்க விரிவாக்கத்துக்காக அம்மேரி, வடக்கு வெள்ளூர், தென்குத்து, வடக்குத்து ஆகிய பகுதிகளில் நில ஆர்ஜிதத்துக்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முறையான அறிவிப்பு இல்லாமல் கருத்து கேட்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்க இந்தக் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது.

1956ஆம் ஆண்டு முதல் நெய்வேலி நிறுவனத்துக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு முறையான பட்டா வழங்கப்படவும் இல்லை. மாற்று குடியிருப்பில் உள்ளவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்தும் கொடுக்கப்படவில்லை.

நிலத்தை கையகப்படுத்திக் கொள்வதில் மட்டுமே குறியாக இருக்கிறது என்.எல்.சி. நிறுவனம். பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்காமல், ஊதிய உயர்வு இல்லாமல் கொத்தடிமைகளைப் போலத்தான் என்.எல்.சி. நிறுவனம் நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டு மண்ணில் தமிழரது நிலத்தை கபளீகரம் செய்து தமிழரது உழைப்பில் பெரும் லாபம் சம்பாதிப்பதற்க்கு என்.எல்.சி. நிறுவனம் தமிழர்களை கிள்ளுக்கீரையாகத்தான் நடத்தி வருகிறது. தமிழர்களின் உழைப்பில் பெருத்த லாபம் சம்பாதிக்கும் என்.எல்.சி. நிறுவனம் ராஜஸ்தான் உட்பட வட இந்திய மாநிலங்களில் கிளை நிறுவனங்களை அமைக்கிறது.

தமிழ்நாட்டு மண்ணின் வளமான பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுத்து தனியாருக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் ஈட்டுகிற என்.எல்.சி. நிறுவனம் நிலம் கொடுத்த, உழைக்கிற தமிழர்களின் கோரிக்கையை உதாசீனம் செய்தே வருகிறது.

தமிழ்நாட்டு மக்களின் நிலத்தை கட்டாயமாக அபகரிக்க முயற்சிக்கும் என்.எல்.சி. நிர்வாகம் 1956 முதல் இதுவரை நிலம் கொடுத்தோருக்கு நிலப் பட்டா, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை செய்து தர வேண்டும். இதை நிறைவேற்றாதவரை நெய்வேலி சுற்றுவட்டாரத்தில் ஒரு அடி நிலத்தைக் கூட கையகப்படுத்தவிடமாட்டோம்.

என்.எல்.சி.க்கு நிலம் கொடுப்போரின் குடும்பத்தினருக்கு கையகப்படுத்தப்பட்ட அளவுக்கு சமாமன இடம் தர வேண்டும்; அந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர பணியாளராக வேலை வழங்க வேண்டும்; ஒதுக்கீடு செய்யப்படும் மாற்றுக் குடியிருப்பில் உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.. இவற்றை நிறைவேற்ற முன்வராதவரை மண்ணின் மக்களிடம் இருந்து ஒரு அடி நிலத்தைக் கூட என்.எல்.சி. எடுத்துவிட முடியாது.

இதனால் நெய்வேலி சுற்றுவட்டார மக்களின் அடிப்படை கோரிக்கைகளை என்.எல்.சி. நிறுவனம் ஏற்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற என்.எல்.சி. நிறுவனத்துக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
 
பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

இலங்கை அதிபர் தேர்தலில் தேர்தலில் வீழ்த்தப்பட்டான், தமிழினப் படுகொலை குறித்து விசாரணை நடத்தி, தமிழருக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன முன்வர தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

வெள்ளி, 9 ஜனவரி, 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் இன்று 09.01.2015  வெளியிட்டுள்ள அறிக்கை: 
இலங்கை அரச தலைவர் தேர்தலில் வீழ்த்தப்பட்டான் இனப்படுகொலையாளன் ராஜபக்சே!

ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்றுத் தரும் வரை போராடுவோம்!  தமிழர் வாக்குகளால் வென்ற மைத்ரிபால சிறிசேனா பொதுவாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்!

இலங்கையின் அரச தலைவர் தேர்தலில் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் சொந்தங்களைப் படுகொலை செய்த 21-ம் நூற்றாண்டின் மிகப் பயங்கர கொடுங்கோலன் இனப்படுகொலையாளன் ராஜபக்சே வீழ்த்தப்பட்டுவிட்டான்.

ராஜபக்சேவின் இன ஒடுக்குமுறைக்கு எதிராக அமைதி வழியில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் தங்களது வாக்குகளை செலுத்தி சர்வதேச சமூகத்துக்கு தமிழர் தரப்பின் நிலைப்பாடு இதுவே என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் புதிய அரச தலைவராக மைத்ரிபால சிறிசேன பொறுப்பேற்க இருக்கிறார். அரச தலைவர் தேர்தலில் வென்றுவிட்டாலும் ராஜபக்சேவுக்கும் மைத்ரிபாலவுக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லைதான். இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.. ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தான்..

இருப்பினும் ஈழத் தமிழர் வாக்குகளால் மட்டுமே இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் மைத்ரிபால சிறிசேன, ராஜபக்சே வழியில் செல்லாமல் தமிழரின் நியாயமான அரசியல் விருப்பங்களை மதித்து நடக்க வேண்டும்.

ஈழத் தமிழினத்துக்கான சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து அவர்கள் விரும்புகிற அரசியல் தீர்வை அடைவதற்காக ஐக்கிய நாடுகள் அவை மூலமாக பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மைத்ரிபால சிறிசேன மேற்கொள்வதுதான் தமக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு அவர் செய்யப் போகிற முதன்மையான நன்றிக் கடனாக இருக்கும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழினம் ஒன்று திரண்டு தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளதை உணர்ந்தும் மதித்தும் தமிழர் தாயகப் பிரதேசத்தில் ஆக்கிரமித்து நிற்கும் ராணுவத்தினரை விலக்க வேண்டும்; தமிழீழத் தலைவர்களான பேபி சுப்பிரமணியம், பாலகுமாரன், யோகி மற்றும் பல்லாயிரக்கணக்கான தமிழர் நிலை என்ன என்பது குறித்து புதிய இலங்கை அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன பகிரங்கப்படுத்த வேண்டும்.

தமிழினப் படுகொலை குறித்து விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் அவையத்தின் மனித உரிமைகள் ஆணைக் குழுவை அனுமதித்து தமக்கு வாக்களித்த தமிழருக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு மைத்ரிபால சிறிசேன முன்வர வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் இலங்கை அரச தலைவர் தேர்தலில் படுதோல்வி அடைந்துவிட்டான் ராஜபக்சே என்பதோடு நமது பணி முடிந்துவிடவில்லை. இத்தனை கொடூரங்களை அரங்கேற்றிய ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தி போர்க்குற்றங்களுக்கான உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தரும் வரை உலகத் தமிழ்ச் சமூகத்தின் பணி ஓய்ந்துவிடாது. இதுவரை அரச தலைவர் என்ற நாற்காலியில் அமர்ந்து கொண்டு சர்வதேச சமூகத்துக்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்த ராஜபக்சேவுக்கு போர்க்குற்றங்களுக்கான தண்டனை பெற்றுத் தருவதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் உலகத் தமிழ்ச் சமூகம் ஒருங்கிணைந்து விரைவுபடுத்துவோம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

கரும்புக்கான கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ.3,500ஆக உயர்த்தி வழங்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வேண்டுகோள்

வியாழன், 8 ஜனவரி, 2015


தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன்  இன்று 08.01.2015 வெளியிட்டுள்ள அறிக்கை:

கரும்புக்கான கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ.3,500ஆக உயர்த்தி வழங்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள்!


2014-15ஆம் ஆண்டு கரும்புக்கான கொள்முதல் விலையாக ரூ2,650 வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார். ஆனால் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ3,500 வழங்க வேண்டும் என்பதுதான் கரும்பு விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை.

உத்தரபிரதேச மாநிலத்தில் டன் ஒன்றுக்கு ரூ.3,200, பஞ்சாபில் ரூ.3,020, அரியானாவில் ரூ.3,100 என வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கடந்த 2013-14 ஆம் ஆண்டும் ஒரு டன் கரும்பின் கொள்முதல் விலை ரூ2,650 என்றுதான் தமிழக அரசு நிர்ணயித்தது.

தற்போது நடப்பாண்டுக்கும் அதே ரூ2,650 தான் தமிழக அரசு நிர்ணயித்திருப்பது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. கடந்த ஆண்டு கூட கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ 2,650-ல் ரூ300ஐக் குறைத்து கரும்பு டன்னுக்கு ரூ.2,350தான் தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்கின. சுமார் ரூ500 கோடி அளவுக்கு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை பாக்கி இருக்கிறது.

இந்த தனியார் சர்க்கரை ஆலைகளை அரசுடைமையாக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்நிலையில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ3,500 என உயர்த்தி வழங்கினால்தான் கரும்பு விவசாயிகளின் சுமை ஓரளவு குறைய வாய்ப்புள்ளது. இதனை தமிழக அரசு கனிவோடு பரிசீலித்து கரும்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ3,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்; கரும்பு வெட்டுக் கூலி மற்றும் போக்குவரத்து மானியங்களையும் சர்க்கரை ஆலைகளே ஏற்பதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்

மேலும் கரும்பு அனுப்பிய 15 நாட்களுக்குள் முழுப் பணத்தையும் தர வேண்டும் என்ற தமிழக அரசின் ஆணையை சர்க்கரை ஆலைகள் பின்பற்ற கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கடும் கண்டனம்

செவ்வாய், 6 ஜனவரி, 2015

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு  தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று 06.01.2015 வெளியிட்டுள்ள அறிக்கை:
 
தமிழக மக்களின் எதிர்ப்பை புறந்தள்ளி போடி அருகே நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதா? மத்திய அரசுக்கு கடும் கண்டனம்!

தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் பொட்டிபுரம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தமிழகத்தில் தொடர்ந்து கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் எதிர்ப்பைப் புறந்தள்ளி மத்திய அரசு இத்திட்டத்தை முன்னெடுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நியூட்ரினோ ஆய்வகத்துக்காக சுரங்கங்கள் தோண்டும் போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி பாறைகள் வெட்டப்படும். இதற்காக பல்லாயிரக்கணக்கான டன் வெடி மருந்துகள் பயன்படுத்தப்படும் போது ஒட்டுமொத்தமாக அந்த பகுதியே மாசடைந்து நாசமாகும் நிலை உருவாகும்.

இந்த நியூட்ரினோ ஆய்வுக் கூடம் என்பது முழுமையாக ஒரு ஏமாற்று வேலைதான். அணுக் கழிவுகளை கொட்டுவதற்காகத்தான் ஆய்வுக் கூடம் என்ற பெயரில் ஏற்பாடு நடப்பதாக தமிழக மக்களுக்கு அச்சம் இருக்கிறது. இது குறித்து எந்த ஒரு விளக்கத்தையும் மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.

அத்துடன் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படும் போது அந்த மலைப் பிரதேசம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு அப்பகுதி மக்கள் 'அகதிகளாக' வெளியேற்றப்படும் நிலை ஏற்படும். தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்து அகதிகளாக அல்லல்பட நேரிடும்.

முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டதற்கு வேட்டு வைக்கும் வகையில் புதிய அணை கட்ட கேரளாவுக்கு ஒப்புதல் கொடுத்து முல்லைப் பெரியாறு பாசன மாவட்ட விவசாயிகள் வயிற்றில் அடித்தது போதாதென்று மத்திய அரசு இப்போது "நியூட்ரினோ" திட்டத்தையும் அதே மக்கள் மீது திணிக்கிறது.

ஏற்கெனவே கூடங்குளம் அணு உலையால் தென் தமிழகமும், மீத்தேன் எரிவாயு திட்டத்தால் காவிரி பாசன மாவட்டங்களும் பாலைவனமாகும் அபாயம் இருக்கிறது. இன்றும் கூட மீத்தேன் எரிவாயு திட்டத்தைக் கைவிடக் கோரி மாணவர் சமுதாயம் அந்த மண்ணில் போராடிக் கொண்டிருக்கிறது.

கேரளாவின் வஞ்சகத்தால் ஆற்று நீர் உரிமை அபகரிப்பால் கோவை உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிப்பிக்கும் திட்டத்தால் மேற்கு மாவட்ட விவசாய விளைநிலங்கள் பறிபோகும் அச்சமும் அகன்றபாடில்லை.

வட தமிழகத்தில் நெய்வேலி அனல் மின் நிலையத்துக்கு நிலம் கொடுத்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் 30 ஆண்டுகாலமாக ஒப்பந்த தொழிலாளர்களாகத்தான் இருக்கின்றனர். அவர்களுக்கான நீதி இன்னமும் கிடைத்தபாடில்லை. பாலாற்றில் தமிழகத்துக்கான உரிமையை ஆந்திரா அபகரித்துக் கொண்டிருக்கிறது.

கல்பாக்கம் அணு உலையால் நூற்றுக்கணக்கான மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களின் பிடியில் சிக்கி நடைபிணங்களாக வாழும் அவல நிலை தொடருகிறது. கடலூர் சிப்காட் நச்சு ஆலைகளால் தெற்காசியாவிலேயே மனிதர்கள் வாழத் தகுதியற்ற பிரதேசமாக ஐ.நா. மற்றும் சுற்றுச் சூழல் அமைப்புகளால் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.

இத்தனைக்கும் மேலாக தமிழர்களின் நிலத்தை கபளீகரம் செய்து அமைக்கப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இயங்குகிற பன்னாட்டு நிறுவனங்களான நோக்கியா, பாக்ஸ்கான் போன்றவை கொள்ளை லாபம் அடித்த கையோடு தொழிற்சாலைகளை மூடிவிட்டு பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறது. இந்த வரிசையில் டி.சி.எஸ்., விப்ரோ போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது.

இப்படி கூடங்குளம், மீத்தேன் திட்டம், பன்னாட்டு நிறுவனங்களின் சர்வாதிகாரம் என பல முனைகளில் இருந்தும் தமிழக மக்கள் மீதான ஒடுக்குமுறை என்பது பெரும் ஆழிப்பேரலையாக உருவெடுத்திருக்கிறது. இதனால் தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்களது வாழ்வுரிமையைக் காப்பாற்றவும் மீட்டெடுக்கவும் ஒரு பெரும் புரட்சியை நோக்கித் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் எங்களது வாழ்க்கையோடு விளையாட நியூட்ரினோவையும் எங்கள் மண்ணில் மத்திய அரசு திணிப்பதை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது.. இதற்கான எதிர்ப்புகளை இப்போது பொருட்டாக மதிக்காமல் இருக்கும் மத்திய அரசு எதிர்காலத்தில் மிகக் கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.

தமிழ்நாட்டை பாழ்படுத்தும் நியூட்ரினோ, கூடங்குளம், மீத்தேன் உள்ளிட்ட அனைத்து நாசகார திட்டங்களையும் மத்திய அரசு உடனே கைவிட வேண்டும். இதற்கான போராட்டங்களில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஜாதி, மத கட்சி எல்லைகளைக் கடந்து ஓரணியில் ஒன்று திரண்டு தமிழர்களாய் இணைந்து போராடி இந்தியப் பேரரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தந்தை தெய்வத் திரு தங்க.திருநாவுக்கரசு அவர்கள் திரு உருவப் படத் திறப்பு நிகழ்ச்சி

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் அவர்களது தந்தையார் தெய்வத் திரு தங்க. திருநாவுக்கரசு அவர்கள் திரு உருவப் படத் திறப்பு நிகழ்ச்சி ( இடம்: கடலூர் மாவட்டம் புலியூர் காட்டுசாகை; நாள்:4-1-2015 )



Read more...

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தர்கா மீதான இந்துத்துவா கும்பல் தாக்குதலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கடும் கண்டனம்

சனி, 3 ஜனவரி, 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று 03.01.2015 வெளியிட்டுள்ள அறிக்கை:
 
முத்துப்பேட்டை தர்கா மீதான இந்துத்துவா கும்பல் தாக்குதலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் கண்டனம்!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் புகழ்பெற்ற தர்கா பகுதியில் டிசம்பர் 31-ந் தேதியன்று நள்ளிரவில் இந்துத்துவா கும்பல் இஸ்லாமியர்கள் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் வெறியாட்டம் போட்ட அந்த கும்பல் இஸ்லாமியர்கள் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துடன் இஸ்லாமியர் வழிபாட்டுத் தலமான தர்காவின் சுற்றுச் சுவர் மற்றும் மின்விளக்குகளைத் தகர்த்துள்ளனர்.

இந்துத்துவா கும்பலின் இந்த அட்டூழிய வன்முறைக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முத்துப்பேட்டையில் அனைத்து சமூகத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இதனை சீர்குலைக்கும் வகையில் இந்துத்துவா கும்பல் வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது. இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டோர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாது நபி திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வாழ்த்து செய்தி

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று 03.01.2015 வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:
 
மிலாது நபி திருநாள் வாழ்த்து!

அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாது நபி திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அண்ணல் நபிகள் போதித்த உயரிய தத்துவங்கள் அனைவரது நெஞ்சங்களிலும் பதிந்திட வேண்டும். இந்த இனிய நன்னாளில் இஸ்லாமிய பெருமக்கள் வெளிப்படுத்துகிற பெருமகிழ்ச்சி என்றென்றும் நிலைத்ததாக நீடிக்க வேண்டும்.

தற்போதைய இந்திய அரசியல் சூழலானது இஸ்லாமிய சமூகத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இதனை அனைத்து ஜனநாயக சக்திகளுடன் இணைந்து நபிகள் நாயகம் போதித்த சமாதான நல்லிணக்க வழியில் நின்று எதிர்கொள்வோம்.

இந்த இனிய மிலாது நபி திருநாளில் அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் எனது வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

ரயில் கட்டண உயர்த்த பரிந்துரை அளிக்கும் டி.கே. மிட்டல் குழு பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தல்

வியாழன், 1 ஜனவரி, 2015


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று 01.01.2015 வெளியிட்ட அறிக்கை:

மீண்டும் ரயில் கட்டண உயர்வா? மிட்டல் குழு பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்!!


2015ஆம் ஆண்டு பிறந்த முதல் நாளே நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 'ரயில் கட்டணங்களை' மத்திய அரசு உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரயில்வே துறைக்கான வருமானங்களை அதிகரிப்பதற்காக ரயில்வே அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட டி.கே. மிட்டல் குழு தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்துள்ளது.

இந்த மிட்டல் குழு தமது பரிந்துரையில், 2 மாதத்துக்கு ஒரு முறை புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணங்களை உயர்த்திக்கொள்ளலாம்; - சாலைப் போக்குவரத்து கட்டணங்களுக்கு இணையாக சுமார் 60% கட்டணங்களை அதிகரிப்பதன் மூலம் ரயில்வே துறைக்கு வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ரயில்வே பட்ஜெட்டில் ரயில் கட்டணங்களை கடுமையாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பது உறுதியாகி இருக்கிறது. மத்தியில் பாரதிய ஜனதாவின் மோடி அரசு அமைந்த உடனேயே வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், "ரயில் பயணிகள் கட்டணம் 14.2 விழுக்காடும் சரக்கு ரயில் கட்டணம் 6.5 விழுக்காடும் உயர்த்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் ரயில் கட்டணத்தை உயர்த்தியாக வேண்டும் என்பதில் மத்திய அரசு கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த 6 மாத காலத்தில் எரிபொருள் விலை மிகக் கடுமையாகவே குறைந்துள்ளது. இதனால் ரயில் கட்டணங்களை கணிசமாக குறைக்கத்தான் வேண்டுமே தவிர சாமானிய மக்களை நசுக்கும் வகையிலான கட்டண உயர்வு நடவடிக்கையை மேற்கொள்வது கண்டனத்துக்குரியது.

மக்களுக்கு ஏற்றத்தையும் மாற்றத்தையும் கொண்டுவருவோம் என்ற முழக்கத்துடன் ஆட்சியைக் கைப்பற்றிய பாரதிய ஜனதாவின் மத்திய அரசு, சாமானிய மக்களை பற்றி கிஞ்சிற்றும் கவலை கொள்ளாமல் மீண்டும் மீண்டும் சுமையைத் திணித்துக் கொண்டிருக்கிறது.

மிக மிக அதிகமான பேருந்து கட்டணங்களால் நிலைகுலைந்து போகும் சாமானிய ஏழை மக்கள், கூலித் தொழிலாளர்கள் மாணவர்கள், ரயில்களை நம்பித்தான் பயணங்களைத்தான் மேற்கொண்டு வருகின்றனர். இப்போது இந்த ரயில் பயணங்களும் கூட எட்டாக்கனியாகும் எனில் யாருக்காக இந்த மத்திய அரசு?

ஆகையால் ரயில் கட்டணங்களை மீண்டும் மீண்டும் உயர்த்தி அடித்தட்டு மக்கள் மீது சுமையை ஏற்றாமல் உயர்த்தப்பட்ட ரயில் கட்டணங்களை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP