10 இளைஞர்கள் புலிகளாக மாறுகிறார்களோ அன்றுதான் தமிழ் ஈழ விடுதலை சாத்தியம் - பண்ருட்டி தி.வேல்முருகன்
ஞாயிறு, 2 டிசம்பர், 2012
விகடன் கட்டுரை
மாவீரர் தினமான நவம்பர் 27-ம் தேதி, சேலத்திலும் புதுச்சேரியிலும் எழுச்சியை நடத்தி இருக்கிறார்கள், திராவிடர் விடுதலைக் கழகத்தினர்! தனி ஈழம் வேண்டி தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட கரும் புலிகள், வான் புலிகள், கடற் புலிகள் மற்றும் மூத்த தளபதிகள் என 120 பேரின் அரிய புகைப்படங்கள், புதுச்சேரி, திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அரியாங்குப்பம் மில்லர் அரங்க வளாகத்தில், வைக்கப்பட்டு இருந்தன. வீர மரணம் அடைந்த புலிகளுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோர், தியாக தீபத்தை ஏற்றி வீர வணக்கம் செலுத்தினர்.
முதலில் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன்,
''உலகில் வாழும் தமிழர்களின் முகவரியான நம் தேசியத் தலைவரின் கனவையும் இலட்சியத்தையும் சிங்களப் பேரினவாத அரசு அழித்ததை, இளைய தலைமுறையினர் மறந்துவிடக் கூடாது. இது ஒரு சம்பிரதாய நிகழ்வோ, சடங்கோ அல்ல. 10 மைல் தொலைவில் நடந்த இனப் படுகொலையைத் தடுப்பதற்கு ஆறரைக் கோடி தமிழர்களும் தவறி விட்டோம். இன அழிப்புகளை, இனப் படுகொலைகளை, கற்பழிப்புகளை, கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், வீடுகள், மீன்பிடி வலைகள் என்று அந்த மக்களின் வாழ்வாதாரத்தையே அழித்து வரும் சிங்களவாதிகளின் அட்டூழியங்களை இந்த நாட்களில் இளைய தலைமுறைக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். என்றைக்கு இந்த 10 கோடி தமிழர்களில் இருந்து 10 இளைஞர்கள் புலிகளாக மாறுகிறார்களோ அன்றுதான் தமிழ் ஈழ விடுதலை சாத்தியம்'' என்று பொங்கினார்.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி,
''தமிழர்களுக்கு மட்டுமே சொந்த நாடாக இருந்த இலங்கைத் தீவில் வந்தேறியவர்கள் சிங்களவர்கள். தமிழர் தயவால் வாழ்ந்தவர்கள். அவர்கள் தமிழர்களை அடிமைப்படுத்திய வரலாறு, நீண்ட நெடியது. உலகில் பல விடுதலை இயக்கங்கள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் கெரில்லா போர் முறையைத்தான் நடத்தினர். ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கமானது, மரபுவழிப் போர் நடத்தும் அளவுக்குத் தனி இராணுவத்தையே வைத்து இருந்தனர். அது, தமிழனுக்கான தனிப் பெருமை. 1989-ல் நடந்த போரில் போராளி சங்கர் வீரமரணம் அடைந்த நாளையே, 'மாவீரர் நாள்’ என்று அறிவித்தார் பிரபாகரன்.
இந்த நாளில் நான் பெருமையாகக் கருதுவது, முதல் மாவீரர் நாளின்போது தலைவர் என்னை அழைத்து இருந்ததைத்தான். அது, இந்திய அமைதிப் படை இருந்த காலம். தலைவரைச் சுட்டுக்கொன்று விட்டனர் என்று பரவி இருந்த வதந்திக்கு, நான் அவரைச் சந்தித்து வெளியிட்ட படமே முற்றுப்புள்ளி வைத்தது. இப்போதும் தலைவர் இருக்கிறார் என்பதைச் சொல்ல ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என்று ஏங்குகிறேன். தமிழ் ஈழத்துக்கு ஆதரவாகப் பேச, தமிழ்நாடு ஒன்றுதான் இருக்கிறது. நாம் எழுச்சியும் எதிர்ப்பும் எழுப்பாத காரணத்தால்தான் இன அழிப்பு நடந்தது. ராஜபக்ச மற்றும் அவர்களுக்குத் துணையாக நின்ற இந்தியா, பாகிஸ்தான், சீனா மட்டும் இன அழிப்புக்குக் காரணம் இல்லை.
அமைதியாக நின்ற தமிழ்நாடும் தான் காரணம். அடுத்த தலைமுறையாவது, ஈழத்தில் ஆதரவுக் குரல் எதிர் பார்க்கும்போது, நிச்சயம் தன் குரலை உயர்த்தும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்'' என்று முழங்கினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக