இலங்கையில் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை ஐக்கிய நாடுகள் படையை தமிழர் தாயகப் பிரதேசங்களில் நிறுத்த தி.வேல்முருகன் கோரிக்கை
திங்கள், 10 டிசம்பர், 2012
இலங்கையில் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும்வரை ஐக்கிய நாடுகள் படையை தமிழர் தாயகப் பிரதேசங்களில் நிறுத்த வேண்டும் - தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
யாழில் தொடரும் அடக்குமுறை! ஐ.நா. படையை நிறுத்துக!
இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான சிங்களப் பேரினவாத அரசின் கொடுந்தாக்குதல்களும் சட்டவிரோத கைது நடவடிக்கைகளும் தொடர் கதையாகி வருகின்றன. கடந்த நவம்பர் 27-ந் தேதியன்று மாவீரர் நாளை கடைபிடித்தார்கள் என்ற ஒரே குற்றச்சாட்டுக்காக மாணவர்களை வேட்டையாடி வருகிறது சிங்களப் பேரினவாத அரசு. வவுனியாவில் நேற்று கூட 2 மாணவர்களை நள்ளிரவில் கைது செய்து இருக்கிறது இதுவரை மொத்தம் 10 மாணவர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறது. மாணவர்களை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் 17 அப்பாவித் தமிழர்களை பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் திடீரென கைது செய்திருக்கிறது சிங்களப் பேரினவாத அரசு.
கைது செய்யப்படுகிறவர்களின் கதி என்ன? அவர்கள் எந்த நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தபப்ட்டனர்? எந்த சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற விவரத்த்தைக் கூட இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேவின் அரசாங்கம் தெரிவிக்க மறுத்து வருகிறது. தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் கொடுமையை கேட்டறிய வந்த ஐ.நா. பிரதிநிதிகள் குழுவினரிடம் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணும்வரை தமிழர் பிரதேசத்தில் ஐ.நா. படையை நிறுத்த வேண்டும் என்று தமிழர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரோ இதுவரை வாய்மூடி மெளனியாக இருந்து வருகிறார்.
இலங்கையில் மாணவர்கள் மீதும் அப்பாவித் தமிழர்கள் மீதும் சிங்களத்தின் தொடரும் கோரக்கொடுமையை மத்திய அரசு தட்டிக் கேட்க வேண்டும்! ஈழத் தமிழர்கள் கோருவது போல் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும்வரை ஐக்கிய நாடுகள் படையை தமிழர் தாயகப் பிரதேசங்களில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஈழத் தமிழர்களின் இந்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக சாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து தமிழர் சக்திகள் ஓரணியில் ஒன்று திரளவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உரிமையோடு அழைக்கிறது!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக