நெய்வேலி சட்டமன்றத் தொகுதி வாக்குசாவடியில் அதிமுகவினர் விதிமீறல் : பா.ம.க.வேட்பாளர் வேல்முருகன் உண்ணாவிரதம்
சனி, 23 ஏப்ரல், 2011
பா.ம.க. எம்.எல்.ஏ.வேல்முருகன் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டி
கடந்த 15-ம் தேதி தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்துப் புகார் மனு ஒன்றைக் கொடுத்த பா.ம.க. எம்.எல்.ஏ-வான வேல்முருகன், திடுதிப்பென்று ஒரு சால்வையை விரித்து அங்கேயே உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்! நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நெய்வேலி தொகுதியில் பா.ம.க சார்பில் வேல்முருகனும், அ.தி.மு.க சார்பில் சிவசுப்ரமணியனும் மோத... கடந்த 16-ம் தேதி இரண்டு பூத்களில் மட்டும் மறு வாக்குப் பதிவு நடந்தது. ஆனால், அதற்கு முந்தைய தினம்தான் வேல்முருகனின் இந்தத் திடீர்ப் போராட்டம். காவல் துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த வேல்முருகனிடம் பேசினோம்.
''கடந்த 13-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தபோது, சமட்டிக்குப்பம் என்ற கிராமத்தில் ஏ.கே.சுப்ரமணியன், ஏ.கே பூவராகமூர்த்தி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் பூத் எண் 55, 56-ல் நுழைந்தனர். காவல் துறையினர் முன்னிலையிலேயே, அங்கே இருந்த தேர்தல் அதிகாரிகளை அடித்துத் துரத்திவிட்டு, வாக்குப் பதிவு இயந்திரத்தை அடித்து சேதப்படுத்தினர். இந்தக் கொலை வெறித் தாக்குதலில் ஒரு சிலரை மட்டும் கைது செய்துவிட்டு, முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை காவல் துறை. 'அந்த பூத்களில் மறு வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முன்பு, தாக்குதலுக்குக் காரணமான ஏ.கே.சுப்ரமணியனைக் கைது செய்ய வேண்டும்.
அவர் கடலூர் கோர்ட்டில் புரிந்த வன்முறை சம்பவத்துக்காக, ஏற்கெனவே ஆயுள் தண்டனைக் கைதியாக இருந்தவர். அவரைக் கைது செய்தால்தான், தேர்தல் அமைதியாக நடக்கும்’ என்று தேர்தல் அதிகாரிகளிடம் முன்கூட்டியே புகார் கொடுத்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. அதைவிடக் கொடுமை, என்.எல்.சி நிர்வாகமும்கூட எனக்கு எதிராகத்தான் வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்த்தது. ஒப்பந்தத் தொழிலாளர்கள், அப்ரன்ட்டிஸ் பணியாளர்கள், நிலம் கொடுத்தவர்கள் என பாதிக்கப்பட்ட மக்களுக்காக, என்.எல்.சி. நிர்வாகத்துக்கு எதிராகக் கடும் போராட்டங்கள் பல நடத்தி உரிமை பெற்றுக் கொடுத்தவன் நான். எனவே, என் மீது இருந்த இந்தக் கடுப்பின் காரணமாகத்தான் அந்த நிர்வாகம் மறைமுகமாக பலகோடிகளை வாரி இறைத்து, தி.மு.க-வினரை எல்லாம் எனக்கு எதிராகத் திருப்பிவிட்டது.
அதோடு, தமிழகத்தில் எங்கும் இல்லாத அதிசயமாக, எனது தொகுதியில் என்.எல்.சி-யில் பணியாற்றும் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையை (சி.ஐ.எஸ்.எஃப்.) தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர். எஸ்.பி-யிடம் கேட்டால் 'அவங்களை தேர்தல் ஆணையம்தான் நியமிச்சிருக்கு’ன்னு சொல்றார். தேர்தல் ஆணையத்திடம் கேட்டால், 'எங்களுக்குத் தெரியாது. எஸ்.பி-தான், தொழில் பாதுகாப்புப் படையைக் கூப்பிட்டு இருப்பார்’னு சொல்றாங்க. இந்தப் படையினர் செய்த அராஜகம் கொஞ்சம் நஞ்சம் அல்ல... பா.ம.க-வுக்கு அதிக செல்வாக்கு உள்ள தொகுதியில் வாக்களிக்க வரும் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், வேண்டுமென்றே லத்தி சார்ஜ் செய்வது, பொதுமக்களின் வாகனங்களைத் தாக்குவது என ஏகப்பட்ட இம்சைகள் செய்தனர்.
தேர்தல் நாளன்று நான் வழக்கமாகப் பயன்படுத்தும் காரைப் பயன்படுத்தாமல், வேறு ஒரு காரைப் பயன்படுத்தினேன். அதனால்தான் உயிர் பிழைத்தேன்! ஏனென்றால், அன்று மதியம் என்னுடைய காரில் எனது சகோதரர் மதிய உணவு எடுத்துக்கொண்டு நான் இருந்த இடத்துக்கு வந்தபோது, அ.தி.மு.க. ரவுடிகள் சிலர் நான் அந்தக் காரில் இருப்பதாக நினைத்துக்கொண்டு, கண்ணாடியை அடித்து உடைத்தனர். எனது சகோதரருக்கும் பலத்த காயம். கோரணப்பட்டு, பாவைக்குளம், கொஞ்சிக்குப்பம், சத்திரம் போன்ற பகுதிகளில் உள்ள மக்களிடம், 'மாம்பழத்துக்கு வாக்களித்தால், உங்களைக் கொலை செய்வோம்’ என 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள், திரண்டு வந்து மிரட்டி இருக்கிறார்கள். இதுபோன்ற பல வன்முறைச் சம்பவங்கள் திட்டமிட்டுக் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இதற்கு உரிய ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. ஆனால், நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள், யாருக்கோ பயந்துகொண்டு இந்த விஷயத்தில் பாராமுகம் காட்டுகிறார்கள். பா.ம.க-வினர் மீது பொய் வழக்குகள் போடுவதில் மட்டும் அவர்களின் கடமை உணர்வு பொங்கி வழிகிறது! அதனால்தான் வேறு வழியே இல்லாமல், தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்துப் புகார் கொடுத்தேன். அதே சூட்டோடு உண்ணாவிரதப் போராட்டத்திலும் குதித்தேன். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்று சீறலாக முடித்தார்.
இது குறித்துத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியது
''நெய்வேலி தொகுதியில் சில பூத்களில் வன்முறை நடந்தது உண்மை. அதனால், அங்கு மறுவாக்குப் பதிவு நடந்தபோது, பலத்த பாதுகாப்புடன் அதை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தேன். அதன்படி, அமைதியான முறையில் மறு வாக்குப் பதிவு நடந்தது. பா.ம.க. வேட்பாளர் கொடுத்துள்ள புகார் குறித்து நானே நேரடியாக விசாரித்து வருகிறேன். வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி, கண்டிப்பாக நடவடிக்கை பாயும். மற்றபடி, அங்கே அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டார்கள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், அவர்கள் எல்லோரும் அப்போது எங்கள் கண்காணிப்பு வளையத்தில்தான் இருந்தனர்!'' என்றார் உறுதியாக. பரபரப்புக் கிளப்ப வேல்முருகனுக்கு சொல்லியா தர வேண்டும்?