பாமக தலைவராக ஜி.கே. மணி மீண்டும் தேர்வு
சனி, 10 ஜூலை, 2010
பாமக தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.கே. மணிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவிக்கிறார் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ். உடன் அன்புமணி ராமதாஸ்
சென்னை:
பாமக தலைவராக ஜி.கே. மணி மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.சென்னையில் வெள்ளிக்கிழமை பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஜி.கே. மணி தலைவராகவும், பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும், பொருளாளராக அக்பர் அலி சையத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அமைப்புச் செயலாளராக இருந்த பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகன் இணைப் பொதுச்செயலாளாரகவும், அன்புமணி ராமதாஸ் இளைஞரணி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கோவிந்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஜி.கே. மணி, 1998-லிருந்து பாமக தலைவராக இருந்து வருகிறார். அதற்கு முன்பு மாநில துணைத் தலைவர், தொண்டரணி தலைவர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். இப்போது 7-வது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1996-லிருந்து எம்.எல்.ஏவாக இருக்கும் அவர் இப்போது சட்டப் பேரவை பாமக தலைவராகவும் இருந்து வருகிறார்.
தீர்மானங்கள்:
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழை மத்தியில் ஆட்சி மொழியாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் நூற்றுக்கு நூறு சதவீதம் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். இலங்கை முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை சொந்த ஊரில் குடியமர்த்துவதில் மெத்தனம் காட்டி வரும் இலங்கை அரசுக்கு கண்டனம்; ஈழத் தமிழர்களுக்காக இலங்கை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி இந்தியா வலியுறுத்த வேண்டும்; தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படையினருக்கு கண்டனம்; கச்சத் தீவை மீட்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது. பெட்ரோலியப் பொருள்களின் மீதான வரிகளை மாநில அரசு குறைக்க வேண்டும், மண்ணெண்ணெய் மீதான விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும். காவரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக