கல்வி, வேலையில் 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கடலூரில் பா.ம.க. ஆர்ப்பாட்டம்
வியாழன், 29 ஜூலை, 2010
கடலூர்:
கடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு கோரி கடலூர் கிழக்கு மற்றும் வடக்கு பா.ம.க. சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை நிகழ்த்திய பா.ம.க. மாநில இணைப் பொதுச் செயலாளர் தி.வேல்முருகன் பேசியது:
வன்னியர்களுக்குக் கல்வி வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று 1980 முதல் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் எங்களது கோரிக்கை இன்னமும் நிறைவேறவில்லை. சாதிவாரியாக மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஏனென்றால் தற்போது 80 சதவீத கல்வி, வேலை வாய்ப்புகளை ஒரு சதவீதம் பேர் மட்டுமே அனுபவிக்கிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும். பதவிகளுக்காக நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை.
பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்விக்காகவே போராட்டம் நடத்துகிறோம். அவர்கள் இன்னமும் முந்திரிக் காடுகளிலும், வயல் வெளிகளிலும்தான் வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள் என்றார் வேல்முருகன். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைப்பொதுச் செயலாளர் தி.திருமால்வளவன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.பஞ்சமூர்த்தி, வடக்கு மாவட்டச் செயலாளர் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைமை அலுவலகச் செயலாளர் போஸ் ராமச்சந்திரன் வரவேற்றார்.
சிதம்பரம்:
கடலூர் (தெற்கு) மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வேணு.புவனேஸ்வரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் முத்து.குமார் வரவேற்ரார். மாநில இணை பொதுச்செயலாளர் தி.வேல்முருகன், துணைப் பொதுச்செயலாளர் தி.திருமால்வளவன், மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் இரா.சிலம்புச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.
விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி அருகில் பேரணி தொடங்கி பாலக்கரை வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில முன்னாள் துணைப் பொதுச் செயலர் திருஞானம், மாவட்ட தலைவர் சின்னதுரை ஆகியோர் பேசினர். மாவட்ட செயலர் செல்வராசு வரவேற்றார். மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் மருத்துவர் கோவிந்தசாமி தலைமை ஏற்றார். நகர செயலர் முருகன், ஒன்றிய செயலர்கள் ராசவேல், வெங்கடேசன், செல்வகுமார், உத்தண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக