முல்லைப் பெரியாறில் கேரளா புதிய அணை கட்டுவதற்காக ஆய்வுக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் கடும் கண்டனம்

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் 14.12.2014  வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லைப் பெரியாறில் கேரளா புதிய அணை கட்டுவதற்காக
ஆய்வுக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கு கடும் கண்டனம்!

முல்லைப் பெரியாறு அணையில் கேரளா புதிய அணையை கட்டுவதற்கான ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்காக 35 ஆண்டுகாலம் பெரும் சட்டப்போராட்டத்தை நடத்தி தற்போதுதான் தமிழ்நாடு தனக்கான நீதியைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் வயிற்றில் அடிக்கும் வகையில் முல்லைப் பெரியாறு அணை அருகேயே கேரளா மற்றொரு அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வாழ்வாதாரமே முல்லைப் பெரியாறு அணை. ஆனால் இந்த மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் புதிய அணை கட்டுவோம் என்று கேரளா அடாவடியாக அறிவித்தது. தற்போது கேரளா முன்வைத்த புதிய அணைக்கான் கோரிக்கையை ஏற்று ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் வன உயிரின வாரிய நிலைக்குழு அனுமதி அளித்துள்ளது.

தற்போதைய அணை மிகவும் பலமாக இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தீர்ப்பளித்துவிட்ட பின்னரும் மத்திய அரசு கேரளாவின் கோரிக்கையை ஏற்று புதிய அணை கட்ட ஆய்வுக்கு அனுமதி அளித்திருப்பது சட்டவிரோதமாகும்.

தமிழ்நாட்டு மக்களின் அத்தனை வாழ்வுரிமை பிரச்சனைகளிலும் கள்ள மவுனமாக இருப்பது அல்லது பச்சைத் துரோகம் இழைப்பது என்பதுதான் எந்த மத்திய அரசாக இருந்தாலும் கடைபிடிக்கிற கொள்கையாக இருக்கிறது. அதுவே தற்போதும் நீடிக்கிறது.

இந்தியப் பேரரசின் தொடரும் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மைக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டத்தான் போகிறார்கள் என்பதை வரலாறு பார்க்கத்தான் போகிறது. கேரளாவின் அடிப்படையில் புதிய அணை கட்ட ஆய்வுக்கு அனுமதித்ததை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.. இல்லையெனில் மிகக் கடுமையான விளைவுகளை மத்திய அரசு சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கிறேன்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தின் அடிப்படையில் மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP