முல்லைப் பெரியாறு அணையில் தமிழக பொறியாளர் மாதவன் மீது கேரள குண்டர்கள் நடத்திய கொடுந்தாக்குதலுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கடும் கண்டனம்

செவ்வாய், 18 நவம்பர், 2014

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக பொறியாளர் மாதவன் மீது கேரள குண்டர்கள் நடத்திய கொடுந்தாக்குதலுக்கு கடும் கண்டனம்! தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் இன்று (18.11.2014) வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லை பெரியாறு அணையில் தமிழக பொறியாளர் மாதவன் மீது கேரள குண்டர்கள் நடத்திய கொடுந்தாக்குதலுக்கு கடும் கண்டனம்!

முல்லைப் பெரியாறு அணையில் 35 ஆண்டுகாலத்துக்குப் பிறகு தமிழ்நாட்டின் நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவாக அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டும் நிலையில் தமிழக பொறியாளர் மாதவன் மீது கேரள குண்டர்கள் கொடுந்தாக்குதல் நடத்தி அணையை சேதப்படுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

முல்லைப் பெரியாறு பெரியாறு அணையில் நீர்மட்டம் 142 அடியை எந்த நேரத்திலும் எட்டிவிட இருக்கிறது. இந்த நிலையில் பீர்மேடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிஜூமோள் என்பவர் தமது ஆதரவாளர்கள் 50 பேருடன் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய சென்றுள்ளார். அவருடன் கேரள மாநில பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் குண்டர்களும் சென்றுள்ளனர்.

பெரியாறு அணையில் அத்துமீறி நுழைவதற்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்துள்ளது. அங்கு ஐவர் குழு, மூவர் குழு, பெரியாறு அணை தொடர்பான அதிகாரிகள் மட்டும் நுழைய அனுமதி உள்ளது. இந்நிலையில் கேரளா சட்டப்பேரவை உறுப்பினருடன் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் வந்த கேரளா குண்டர்களை தமிழக பொறியாளர் மாதவன் தடுத்துள்ளார். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் குண்டர்களுடன் உள்ளே சென்ற கேரளா எம்.எல்.ஏ பிஜூமோள், அணையின் சுவர்களை சேதப்படுத்தி நீர் கசிவது போன்று வீடியோ படம் எடுத்திருக்கின்றனர்.

இதனைத் தட்டிக் கேட்ட தமிழக பொறியாளர் மாதவனை கேரளா குண்டர்கள் கீழே தள்ளி கொடூரமாக தாக்கியுள்ளனர். இது குறித்து அணையில் பாதுகாப்பில் உள்ள கேரள காவல்துறையினரிடம்  தமிழக பொறியாளர் மாதவன் புகார் கூறியும் அவர்கள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. கேரளாவின் இந்த அத்துமீறலும் அடாவடி தாக்குதலும் தமிழகத்தில் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் இந்த அடாவடி தாக்குதலானது முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. கேரளாவின் இந்த அத்துமீறலையும் அடாவடித்தனத்தையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழக பொறியாளர் மாதவனைத் தாக்கிய கேரளா சட்டப்பேரவை உறுப்பினர் பிஜூமோளைக் கைது செய்து இந்திய இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். அத்துடன் கேரளாவால் முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த நேரத்திலும் பாதிப்பு வரலாம் என்ற அச்சம் தமிழக மக்களிடத்தில் எழுந்துள்ளது. இந்த அச்சத்தைப் போக்கவும் மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP