தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை போரூரில் அமைந்துள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில்  30-4-2013 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.
 
அதில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்.

1. தமிழக மக்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் விளையாட்டு வீரர்களுக்கு உறுதுணையாகவும் பாமர மக்களுக்கு  தமிழக, இந்திய, உலகச் செய்திகளை எளிதில் தெரிந்து கொள்ள கிராமங்கள் தோறும் தினத்தந்தி பத்திரிகையை சென்றடையச் செய்த கொடைவள்ளல் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இச்செயற்குழு மூலம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

2. கடந்த மாதம் 23-ந் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் வெளியேறிய விஷவாயுவால் 40 கி.மீ. வரை வசிகின்ற பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். 2003 ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அதிகபட்சமாக கேன்சர் 335 பேருக்கும் தொழுநோய் 10 பேருக்கும் நுரையீரல் பாதிப்பு 5047 பேருக்கும் காசநோய் 529 பேருக்கும் கருச்சிதைவுகள் 128 பேருக்கும் கண்பார்வை கோளாறு 7189 பேருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே பொதுமக்கள் மேலும் பாதிப்படையாமல் இருக்க இந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிறுவனர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தி. வேல்முருகன் தலைமையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை முன்பு ஜூன் மாத இறுதியில் பிரம்மாண்ட முற்றுகைப் போராட்டம் நடத்துவது என இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

3. நாகை மாவட்டம் சீர்காழியில் மே 18-ந் தேதியன்று ஈழப் போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்னுயிர் நீத்த இலங்கை தமிழர்கள் 1.5 லட்சம் பேருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடத்துவது அந்த பொதுக்கூட்டத்தில் அனைவரும் பங்கேற்பது என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

4. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதரமான காவிரி நதிநீர் ஆற்றில் தமிழகத்துக்கான உரிமையை நிலைநாட்டும் வகையில் மிக நீண்ட சட்ட போராட்டங்களின் முடிவில் காவிரி நடுவர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கான முழுமையான முயற்சிகளை மேற்கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இச்செயற்குழு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறது. அத்துடன் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். இதற்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் அனைத்திவித முயற்சிகளுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுதுணையாக இருக்கும் என்பதையும் இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

5. தமிழகத்தின் 5 வட மாவட்டங்களின் வாழ்வாதாரமான தென்பெண்ணை ஆற்று நீரை அப்படியே கபளீகரம் செய்யும் வகையில் கர்நாடக அரசு ராட்சத குழாய்கள் மூலம் உறிஞ்சி எடுத்து வறண்டு கிடக்கும் நூற்றுக்கணக்கான ஏரிகளை நிரப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. இதைக் கண்டித்தும் கர்நாடகாவின் இந்த வஞ்சகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கர்நாடகா எல்லையை முற்றுகையிடும் மிகப் பிரம்மாண்ட போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது. இந்தப் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசும் கர்நாடகாவின் தென்பெண்ணை ஆற்று நீரை சூறையாடும் போக்கை தடுத்து நிறுத்துவோம் என்ற அறிவித்தது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் போராட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இச்செயற்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

6. முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலமாகத்தான் இருக்கிறது என்று இந்திய உச்சநீதிமன்றத்தின் வல்லுநர் குழு உறுதிபடத் தெரிவித்திருக்கிறது. ஆனாலும் முரண்டு பிடிக்கும் கேரள மாநில அரசு நடப்பு நிதி நிலை அறிக்கையில் புதிய முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கேரள அரசின் விதண்டாவாதப் போக்குக்கு தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

7. தமிழக மேற்கு மாவட்ட விவசாயிகளின் எதிர்காலத்தையே குழிதோண்டிப் புதைத்து விவசாயத்தையே நிர்மூலமாக்கும் வகையில் கெயில் நிறுவனமானது விளைநிலங்களின் வழியே எரிவாயு குழாய்களை அடாவடியாக பதிக்கும் பணியை மேற்கொண்டது. பொங்கி எழுந்த விவசாயிகளின் குமுறல்களை ஒருங்கிணைத்து சேலம் மாநகரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கெய்ல் தலைமையகத்தை முற்றுகையிடும் மாபெரும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்தி பல்லாயிரக்கணக்கான தோழர் கைதாகினர். தமிழக விவசாயிகளின் தமிழ வாழ்வுரிமைக் கட்சியின் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்த தமிழக அரசு, உடனடியாக விளைநிலங்களின் வழியாக கெயில் எரிவாயு குழாய்களை பதிக்கக் கூடாது என்று ஆணையிட்டு விவசாயிகளின் வாழ்வாதரங்களை மீட்டுக் கொடுத்தார். அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பால் தமிழர் நலனுக்கான தமிழக வாழ்வுரிமை மீட்புக்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இச்செயற்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

8. கேரளாவில் மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக் கடலில் வீணாகும் நீரை தமிழ்நாட்டுக்குத் திருப்பிவிட தமிழகம் பல்லாண்டுகாலமாக கோரிவருகிறது. ஆனால் கேரளம் தொடர்ந்தும் மறுத்தே வருகிறது. தமிழகத்து உள் ஆறுகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற தமிழக அரசு, கேரள அரசுடன் இது தொடர்பாக உறுதியான பேச்சுவார்த்தைகளை நடத்தி தமிழக நலனைக் காக்கவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

9. தமிழக மீனவர்கள் பாரம்பரியாக வங்கக் கடலில் பாக்நீரிணையில் கச்சத்தீவு கடற்பரப்பில் காலந்தோறும் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் இந்திய மத்திய அரசால் இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே எதேச்சதிகாரமாக கச்சத்தீவை சிங்கள அரசுக்கு தாரை வார்த்துக் கொடுத்ததால் கடந்த 30 ஆண்டுகாலமாக 800க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் காடையர்கள் படுகொலை செய்திருக்கின்றனர். இதுநாள் வரை சிங்கள அரசை ஒருவார்த்தை கூட கண்டிக்காத மத்திய அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனைக்கு ஒரே தீர்வு கச்சத்தீவை மீட்பதுதான்! கச்சத்தீவை மீட்பதற்காக தமிழக அரசும் தமிழக அரசியல் கட்சிகளும் மீனவர்களின் பேரியக்கங்களும் ஒருங்கிணைந்து முன்னெடுக்கும் அனைத்திவித போராட்டங்களிலும் தமிழக வாழ்வுரிமை கட்சி தம்மை தொடர்ந்தும் ஈடுபடுத்திக் கொள்ளும் என இந்த செயற்குழு உறுதியேற்கிறது.

10. தமிழகத்தில் கல்பாக்கம், கூடங்குளம் என்ற இரண்டு அணு உலைகளும் தமிழர்களின் உயிரை மெல்ல மெல்ல சாகடித்துக் கொண்டிருக்கின்றன. என்றேனும் ஒருநாள் இந்த அணு உலைகளால் ஒட்டுமொத்த தமிழினமே காவு கொள்ளக்கூடிய பேராபத்து நம்மை சூழ்ந்து நிற்கிறது. கூடங்குளத்தில் இந்த பேராபத்தை உணர்ந்து கடந்த ஓராண்டு காலத்துக்கும் மேலாக போராடி வரும் போர்க்குணமிக்க அந்த போராட்டத்தோடு தமிழக வாழ்வுரிமைக் கட்சி எப்போதும் இணைந்தே நிற்கிறது. இனி வரும் காலங்களில் தொடர்ந்தும் நிற்கும். இதேபோல் கல்பாக்கம் அணு உலைக்கு எதிரான அனைத்துவிதமாக போராட்டங்களையு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுப்பதுடன் அனைத்து ஜனநாயக சக்திகளுடன் ஒருங்கிணைந்தும் போராடும் என இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

11. அண்மைக்காலமாக இந்தியா முழுவதும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றக் கூடிய இடஒதுக்கீட்டை பின்பற்ற தேசிய கல்வியியல் அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருப்பினும் தமிழகத்தில் மட்டும் நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீட்டு முறை ஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் கடைபிடிக்கப்படுவதில்லை. இதனால் பல்லாயிரக்கணக்கான பிற்படுத்தப்பட,. மிகப்பிற்படுத்தப்பட்டோரின் வேலை வாய்ப்புரிமை பறிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு கனிவோடு பரிசீலித்து சமூக நீதியின் தாயகம் தமிழகம்தான் என்பதை நிலைநாட்டும் வகையில் இடஒதுக்கீட்டை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

12. முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் வழக்கில் பேரறிவாளன்,சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழர்கள் தூக்குக் கொட்டடியில் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். இம்மூவரும் தாக்கல் செய்த கருணை மனுவை 11 ஆண்டுகால தாமதத்துக்குப் பின்னர் இந்திய குடியரசுத் தலைவர் நிராகரித்தார். இதை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. மூன்று தமிழரது உயிரைக் காப்பாற்றும் வகையில் தமிழக அமைச்சரையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அதை அனுப்பி வைக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இதேபோல் வீரப்பனின் வழக்கில் 4 தமிழர்கள் தூக்குக் கொட்டடியில் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களது தூக்கு தண்டனையை ரத்து செய்வது தொடர்பாக கர்நாடக மாநில அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி அந்த 4 தமிழர்களது உயிரையும் காப்பாற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இச் செயற்ழு வேண்டுகோள் விடுக்கிறது.

13. இலங்கைத் தீவில் தமிழர்கள் தங்களது பாரம்பரிய தாயகப் பிரதேசத்தில் தங்களது தனித்துவமான கலாசார பண்பாட்டு விழுமியங்களை பேணிபாதுகாத்து தங்களுக்கான அரசை தாங்களே பல்லாயிரம் ஆண்டுகளாக நிர்மாணித்து வந்தனர். ஆனால் கடந்த 60 ஆண்டுகாலமாக சிங்களப் பேரினவாதத்திடம் சிக்குண்டு தமிழீழத் தேசிய இனமே அழிவின் விளிம்பில் நிற்கிறது. தமிழீழ சிக்கலுக்கு தமிழீழத் தனியரசே தீர்வு என்று ஆயுதமேந்தி போராடிய விடுதலைப் போரின் இறுதி காலத்தில் லட்சக்கணக்கான தமிழர்களை ஈவிரக்கமின்றி சிங்களப் பேரினவாத அரசு படுகொலை செய்தது. சிங்களப் பேரினவாத அரசின் இந்த இனப்படுகொலையை சர்வதேச சமூகம் தற்போது கரிசனையோடு கவனிக்க முன்வந்திருப்பது ஆறுதல் தருகிறது.இருப்பினும் தமிழீழத்தில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே- தமிழீழத்தில் சிங்களப் படைகள் மேற்கொண்டது சர்வதேச போர்விதிகளை மீறிய மனிதாபிமானமற்ற போர்க்குற்றங்களே! என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது,

14.தமிழீழத்தில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்ற விசாரணைகள் முடிவடையும் வரை சிங்கள அரசு மீது பொருளாதார தடையை விதிக்கக் கோரும் தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்று இலங்கை மீது சர்வதேச பொருளாதாரத் தடை விதிக்க இந்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

15. தமிழீழ சிக்கலுக்கான ஒரே தீர்வு தமிழீழத் தனியரசுதான்.. இதற்காக இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்குப் பகுதியிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் ஐக்கிய நாடுகள் அவையம் முன்னிலையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனது உறுதித் தன்மையை வெளிப்படுத்தி இச்செயற்குழு மூலம் தெரிவித்துக் கொள்கிறது.

16.சர்வதேச மனித உரிமை மீறல்களை காலில் போட்டு நசுக்கிய போர்க்குற்றவாளியான சிங்கள அரசுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் வகையில் வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெற உள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் தொடர்ந்து தமிழகம் வலியுறுத்தி வருகிறது. தமிழக சட்டசபையிலும் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழக மக்களின் இந்தக் குரலை ஏற்று இலங்கையில் நடைபெறக் கூடிய காமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்று இச்செயற்குழு வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP