மத்திய அரசு சுங்கக் கட்டணம் தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் இன்று (01.09.2015) வெளியிட்டுள்ள அறிக்கை:

சுங்கக் கட்டண குறைப்பு எனும் ஏமாற்று வித்தையை அரங்கேற்றும் மத்திய அரசுக்கு கண்டனம்!!

சுங்கக் கட்டணம் தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிடுக!

சுங்க சாவடிகளில் கட்டணம் தர மறுக்கும் "ஒத்துழையாமை" போராட்டம் நடத்தப்படும்!
நாடு முழுவதும் 60 சுங்க சாவடிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் 2.5 விழுக்காடு சுங்கக் கட்டணத்தை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றுகிற நடவடிக்கை.
சுங்க சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுங்கக் கட்டணத்தை மிக மிகக் கடுமையாக உயர்த்துவதையே மத்திய அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது. ஒரு அரசு என்பது மக்களுக்கு செய்து தர வேண்டிய அடிப்படை வசதிகளில் சாலை வசதியும் ஒன்று.
ஆனால் இந்த அடிப்படை வசதியை மக்கள் பயன்படுத்துவதற்கும் கூட சுங்கக் கட்டணம் என்கிற பகல் கொள்ளை கடந்த 15 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 44 சுங்க சாவடிகள் உள்ளன. இதில் 26 சுங்க சாவடிகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டிலும், 18 சுங்க சாவடிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. இருப்பினும் கட்டணம் வசூலிக்கும் உரிமை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த தனியார் நிறுவனங்கள் கொழுத்த லாபம் பார்க்கும் வகையில் நடுத்தர, ஏழை மக்களின் பணத்தை சுரண்டுகிற வகையில் தொடர்ந்து 15 சதவீத அளவில் சுங்கக் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் சுங்கக் கட்டணத்தை வசூலிப்பதே அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு.. அப்படியான எந்த ஒரு வசதியையும் செய்துதராமலேயே கட்டணம் எனும் பகல் கொள்ளையை அரங்கேற்றுவதில்தான் வழிப்பறி செய்வதில்தான் தனியார் நிறுவனங்கள் குறியாக இருந்து வருகின்றன. மத்திய அரசும் இதை கண்டு கொள்ளாமல் இருக்கிறது.
இதனைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றுகிற மாபெரும் முற்றுகைப் போராட்டங்களை 2 முறை நடத்தியிருக்கிறது. தற்போது திடீரென சுங்கக் கட்டணத்தை வெறும் 2.5 விழுக்காடு குறைக்கிறோம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. சுங்கக் கட்டண உயர்வு என்பது 15 விழுக்காடுக்கும் அதிகமாம்.. குறைப்பது என்கிற போது மட்டும் வெறும் 2.5 விழுக்காடா?
பொருளாதாரக் குறியீட்டு எண்படி இந்த சுங்கக் கட்டணத்தை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உண்மையில் பொருளாதார குறியீட்டு எண்ணின்படி 7.5 விழுக்காடு கட்டணத்தைத்தான் மத்திய அரசு குறைத்திருக்க வேண்டும். அதுவும் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் இந்தக் கட்டணக் குறைப்பை அமல்படுத்தியிருக்க வேண்டும். அதை செய்யாமல் வெறும் 60 சுங்கச் சாவடிகளில் 2.5% சுங்கக் கட்டணம் குறைப்பு என்பது ஏமாற்று வித்தைதானே தவிர வேறு எதுவும் இல்லை என வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஆகையால் மத்திய அரசு ஒட்டுமொத்தமாக அனைத்து சுங்கச் சாவடிகளிலும் சுங்கக் கட்டணத்தை முழுமையாக குறைத்து விரைவில் சுங்கக் கட்டண முறையையே ஒழிக்க வேண்டும்; அத்துடன் இதுவரை வசூலிக்கப்பட்ட சுங்கக் கட்டணம் எவ்வளவு? அந்த கட்டணத்தில் இருந்து சாலையை பயன்படுத்துகிற மக்களுக்கு செய்து கொடுத்த வசதிகள் என்னென்ன? இன்னும் எத்தனை ஆண்டுகாலத்துக்கு இந்த சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும்? என்ற விவரங்களை அடங்கிய ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.



மத்திய அரசு சுங்கக் கட்டணத்தை முழுமையாக குறைத்து, சுங்கக் கட்டண வசூல் தொடர்பான முழுமையான வெள்ளை அறிக்கையை வெளியிடாவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் "சுங்கக் கட்டணத்தை செலுத்த மாட்டோம்" என்ற ஒத்துழையாமை இயக்கத்தை பொதுமக்களை ஒன்றுதிரட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP