பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தின்போது தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த இலங்கை தலைவர்களிடம் வலியுறுத்த வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

திங்கள், 23 பிப்ரவரி, 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று (22.02.2015) வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இலங்கை பயணம்!

தமிழக மீனவர்- ஈழத் தமிழர் பிரச்சனையில் சிறுதுரும்பையாவது அசைக்கட்டும்!!

பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. அதுவும் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் மூலமாக ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள ராணுவம் இன்னமும் தமிழீழப் பகுதிகளில் இருந்து விலக்கிக் கொள்ளப்படவில்லை; பல்லாயிரம் தமிழீழ அரசியல் கைதிகளின் நிலைமை என்னவானது எனத் தெரியவில்லை: வாழ்வாதாரமற்று வறுமையில் வாடும் தமிழர்களின் எதிர்காலத்துக்கு என்ன பதில் என்பதற்கு விடையில்லை?

இத்தனைக்கும் மேலாக ஒன்றரை லட்சம் தமிழரை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளிகள் சிங்கள மண்ணில் சுதந்திரமாக ஆட்சி அதிகாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் பெருந்துயரம்...

மாற்றத்தை உருவாக்கிடுவோம் என்ற வாக்குறுதியோடு இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவர் பிரதமர் நரேந்திர மோடி; ஆனால் தமிழக மீனவர் பிரச்சனையிலோ தமிழீழத் தமிழர் பிரச்சனையிலோ எந்த ஒரு சிறுதுரும்பையும் இந்த 9 மாத ஆட்சிக் காலத்தில் பிரதமர் மோடி அரசு அசைத்துப் போட்டது இல்லை...

தமிழக மீனவர்கள் நாளாந்தம் தாக்கப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாக இருக்கிறது: ஈழத் தமிழர் பிரச்சனையிலோ இற்றுப் போன 13வது அரசியல் சாசன திருத்தத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதோடு தமிழ்நாட்டில் அடைக்கலமாகியுள்ள ஈழ ஏதிலியரை கட்டாயமாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப சிங்களத்தோடு கூட்டுச் சதி செய்து கொண்டிருக்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைப் போர்க்குற்ற விசாரணை அறிக்கையை ஒத்திவைப் போட வைக்க சிங்களத்தோடு கை கோர்த்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. இவை அனைத்துமே தமிழகம் மற்றும் தமிழீழ மக்களிடத்தில் சொல்லொண்ணா வேதனையையும் துயரத்தையும் ஆறாத வடுவையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடியின் இலங்கை பயணம் தமிழக மீனவர்கள் மற்றும் தமிழீழத் தமிழர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துவது இயல்பானதானதுதான்.. ஆனாலும் இதுவரை மோடி அரசின் செயல்பாடுகளால் பெருநம்பிக்கை எதுவும் இல்லாத சூழ்நிலையிலும் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக செல்கிற இந்திய பிரதமர் என்பதால் தமிழீழப் பகுதிகளை நிச்சயம் நேரில் பார்வையிட்டு நிலைமையை உணரவேண்டும்.

எப்படியெல்லாம் சிங்கள ராணுவக் கொட்டடியில் தமிழ் மக்கள் அடைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை நேரில் பார்க்க வேண்டும்; தமிழீழத்தின் வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான வடமாகாண சபை முதல்வர் உள்ளிட்டோரை அழைத்து சந்தித்து அங்கு நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானம் குறித்து கேட்டறிந்து கள யதார்த்தத்தை உணர வேண்டும்; சிங்கள ராணுவத்தின் கெடுபிடிகளுக்கும் ஆக்கிரமிப்புக்கும் மத்தியில் கல்வி கற்கும் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்களையும் பிரதமர் மோடி அழைத்து சந்தித்து நிலைமைகளைக் கேட்க வேண்டும்.

சிங்கள அதிபர் உள்ளிட்ட தலைவர்களுடனான சந்திப்பின் போது ராணுவத்தை விலக்க வேண்டும்; அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்;

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தியாக வேண்டும் என்று இலங்கை தலைவர்களிடம் உறுதிபட வலியுறுத்த வேண்டும்; இத்தகைய கோரிக்கைகளில் ஒன்றையாவது அதாவது ஒரு சிறு துரும்பையாவது பிரதமர் மோடி தனது இலங்கை பயணத்தின் போது அசைத்துவிட்டு வரவேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு.

இலங்கை செல்லும் பிரதமர் மோடி அவர்களிடம் இந்த கோரிக்கைகளை தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP