சிவகங்கை, சிவகங்கை,தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது

திங்கள், 13 ஜனவரி, 2014

மதுரை:

மதுரை, சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்   நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடந்தது. ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத்  தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.


பின்னர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத்  தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் அளித்த பேட்டி:
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நலனுக்காக, வாழ்வுரிமைக்காக எங்கள் கட்சி போராடி வருகிறது. நஞ்சு இல்லாத உணவு, நோயற்ற வாழ்க்கை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கல்விக்கொள்ளையை தடுத்தல் ஆகியவற்றுக்காக பாடுபடுவதே கட்சியின் கொள்கையாகும்.

பா.ம.க.அணி கிடையாது 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 3–ம் ஆண்டு விழா வருகிற பிப்ரவரி 23–ந் தேதி நடக்கிறது. அப்போது, பாராளுமன்றத்தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம். ஆனால், காங்கிரஸ் மற்றும் பா.ம.க.கூட்டணியில் இடம் பெற மாட்டோம். 

தமிழக மீனவர்கள்விடுதலை:

தமிழக மீனவர்கள் சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரையும் பொங்கல் பண்டிகையையொட்டி விடுதலை செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசு வெளியுறவுத்துறை செயலாளரை உடனடியாக இலங்கைக்கு அனுப்பி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 

கெயில் நிறுவனம் சார்பில் எண்ணை குழாய் பதிக்கும் பணிகளை நெடுஞ்சாலை பகுதிகளில் மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீத்தேன் வாயு எடுக்கும் திட்டமும் விவசாயத்துக்கு எதிரானது. அந்த திட்டத்தை கைவிட வேண்டும். கேரள மாநில அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம்காட்டி அட்டப்பாடியில் வசிக்கும் 30 ஆயிரம் தமிழர்களையும் வெளியேற்ற நினைக்கிறது. ஆனால், முல்லைப்பெரியாறு விவகாரத்தில் மட்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மறுக்கிறது. இது குறித்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

மேம்பாலங்கள் கட்ட

மதுரையில் வைகையாற்றில் தொழிற்சாலைகளின் கழிவு நீர், சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும். இதற்காக தமிழக முதலமைச்சர் சிறப்பு திட்டம் ஒன்றை உருவாக்கி பழைய வைகை ஆறு போல மாற்ற வேண்டும். சிவகங்கை பகுதியில் சாயப்பட்டறை கழிவு நீர் கிருதுமால் நதியில் கலப்பதை தடுக்க வேண்டும். மதுரையில் தொடர்ந்து அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலங்கள் கட்ட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் எண்ணை நிறுவனங்களை கொண்டு வர வேண்டும். 

பேட்டியின் போது  மாநில அமைப்புச் செயலாளர் காமராஜ், துணைப்பொதுச் செயலாளர் தமிழ்நேசன், மதுரை மாநகர அமைப்பாளர் துரைசேகர், புறநகர் மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன் உடன் இருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP