இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதில் இந்தியா முதன்மை பங்கு - சிங்கள அமைச்சர் கேகலிய ரம்புக்வெல பேச்சிற்கு பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம்
வெள்ளி, 20 ஜூலை, 2012
இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதில் இந்தியா முதன்மை பங்கு - சிங்கள அமைச்சர் கேகலிய ரம்புக்வெல பேச்சிற்கு பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம்
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழ் உறவுகளை படுகொலை செய்த சிங்களக் காடையர்களுக்கு பயிற்சி கொடுப்பதில் தற்போதும் இந்தியாதான் முதன்மைப் பங்கு வகிப்பதாக சிங்கள அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கொழும்பில் வியாழக்கிழமையன்று (19.7.2012) செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் ஒரு சிறு குழுதான் சிங்கள படைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஆனால் இந்திய அரசு ...அதை கண்டுகொள்ளாமல் தங்களுக்கு ஆதரவாகவே இருப்பதாகவும் அந்த அமைச்சர் திமிராகக் கூறியிருக்கிறார்.சர்வதேச சமூகத்தின் முன்பு போர்க்குற்றவாளிகளாக நிற்கும் சிங்களவன் இத்தனை திமிராகப் பேச இடம்கொடுத்திருப்பது இந்தியாதான்.
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சிங்கள படைக்கு பயிற்சி அளிப்பதை ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்துக் கண்டித்து வருகிறது. ஆனால் இந்தியப் பேரரசோ இந்திய மண்ணில் தொடர்ந்தும் சிங்கள காடையர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதைக் கூட கண்டுகொள்ளாமல் தொடர்ந்தும் இலங்கை படைகளுக்கு இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் பயிற்சி அளித்து வருகிறது இந்திய அரசு.
தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்தவுடன் இந்தியாவின் வேறு மாநிலத்தில் பயிற்சி கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது மத்திய அரசு. தமிழ்நாட்டின் உணர்வுகளை மதிக்காமல் இந்திய அரசு நடந்து கொள்வதால்தான் சிங்களவர்கள் ஏகடியம் பேசுகின்றனர். இந்திய அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்கு மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இலங்கைப் படைகளுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்கக் கூடாது என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் நிலைப்பாடு. இதனை உணர்ந்து கொண்டு இலங்கை படைகளுக்கு பயிற்சி தரக் கூடிய அனைத்து ஒப்பந்தங்களையும் இந்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. சிங்கள இனவாதத் திமிருடன் பேசியிருக்கும் இலங்கை அமைச்சர் கேகலிய ரம்புக்வெலவின் பேச்சை சுட்டிக்காட்டி மத்திய அரசை தமிழக முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக