என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து பாமக தொழிற்சங்கம் போராட்ட அறிவிப்பு

திங்கள், 20 ஜூன், 2011

நெய்வேலி:

           என்எல்சி அலுவலகப் பணியாளர்களின் பணி நேரம் மாற்றம் தொடர்பாக  பாமக தொழிற்சங்கம் போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

            என்எல்சி நிர்வாகம் அலுவலகப் பணி நேரம் காலை 10 முதல் மாலை 5 மணிவரை என தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் நிர்வாகம் அனைவருக்கும் 8 மணி நேரம் வேலை என்பதை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம் அலுவலகப் பணி நேரத்தை காலை 9 முதல் மாலை 5.30 என மாற்றியமைத்தது.   இதற்கு சில தொழிற்சங்கங்களும், அலுவலர்கள் சங்கமும் எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்தை நாடி இடைக்காலத் தடையுத்தரவு பெற்றதைத் தொடர்ந்து, பணி நேரம் மீண்டும் 10 முதல் 5 மணிவரை என நீடித்தது. 

          இதனிடையே என்எல்சி அலுவலர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டு, நிர்வாகம் நிர்ணயித்த பணி நேரத்தை அமல்படுத்தலாம் என உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்க நிர்வாகிகளுடன், நிர்வாகத்துறை அதிகாரிகள் நிலுவையில் உள்ள கோரிக்கைத் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இப்பேச்சுவார்த்தையின் போது, தொழிற்சங்கத்தினர், டெக்னிக்கல் சொசைட்டி அமைத்து, இறந்த என்எல்சி ஊழியர்களின் வாரிசுகளுக்கும், ஐடிஐ அப்ரண்டீஸ் முடித்த இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கவேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

          ஆனால் நிர்வாகம் அலுவலகப் பணி நேரம் மாற்றம் தொடர்பாக திருத்தம் செய்வதை ஒப்புக்கொண்டால் உங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெளிவாகக் கூறியதாகத் தெரிகிறது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கிடையே ஒருமித்தக் கருத்து ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் பணி நேரத்தை மாற்றியமைப்பதில் நிர்வாகம் தீவிர முனைப்புக் காட்டிவருவதை அறிந்த அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், தற்போது தனித்தனியே ஆலோசனை நடத்திவருகின்றனர். 

         இதனிடையே  நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சனிக்கிழமை பாமக தொழிற்சங்கம் துண்டறிக்கை வெளியிட்டுள்ளது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP