என்.எல்.சி. தொழிலாளர்கள் மீது அடக்குமுறைகளை ஏவிடுகிற என்.எல்.சி. தலைவர், இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள், வீடுகளை முற்றுகையிட்டு மாபெரும் தொடர் போராட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் திரு.வேல்முருகன் அறவிப்பு
வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015
தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் கட்சியின் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் 14.08.2015 இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
வாழ்வுரிமைக்காக போராடும் என்.எல்.சி. தொழிலாளர்கள் மீது அடக்குமுறைகளை ஏவிடுகிற என்.எல்.சி. தலைவர், இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள், வீடுகளை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக மாபெரும் தொடர் போராட்டம்!!
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை உருவாக்க வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம் 26வது நாளாக நீடிக்கிறது. இன்று முதல் தொழிலாளர்கள் காலவரையற்ற சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர்.
கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட வேண்டிய ஊதிய மாற்று பேச்சுவார்த்தையானது 43 மாதங்கள் கடந்த நிலையிலும் பேச்சுவார்த்தையாகவே தொடர்கிறது. தொழிலாளர்களின் நியாயமான முறையான கோரிக்கையை பற்றி எந்த ஒரு அக்கறையுமேயே இல்லாமல் ஆணவத்துடனும் அகம்பாவத்துடனும் என்.எல்.சி. நிர்வாகம் நடந்து கொள்வது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
3 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுமையுடன் போராடிப் பார்த்து தற்போதுவிட்டு தற்போதும் 26 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் என்.எல்.சி. நிர்வாகமோ தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் ஈவிரக்கமற்று காவல்துறை மற்றும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் உதவியுடன் அடக்குமுறையை ஏவிக் கொண்டிருக்கிறது..
இதன் உச்சமாக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத் தலைவர் திருமாவளவனை நிரந்தரமாக பணி நீக்கம் செய்து அதிகார மமதையை என்.எல்.சி. நிர்வாகம் வெளிப்படுத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மத்திய அரசின் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் இத்தனை ஆண்டுகாலம் புதியஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை; போராடுகிற தொழிலாளர்களின் கோரிக்கையை செவிகொடுத்து கேட்க தயாரில்லை என்பது வெட்கக் கேடானது; மத்திய அரசின் கையாலாகதனத்தை காட்டுகிறது.
தற்போது நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் ஒருசேர தங்களது வாழ்வுரிமைக்காக போராட்ட களத்தில் குதித்துள்ளனர். இதனால் தொழிலாளர்களின் குடும்பங்கள் படும் துயரம் சொல்லி மாளாதது. ஒட்டுமொத்தமாக நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப் புற கிராமங்கள் அனைத்திலும் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு பதற்றமான நிலைமையே உருவாகியுள்ளது.
இந்த நிலை நீடிக்குமேயானால் என்.எல்.சியில் மின் உற்பத்தி மிக மோசமாக பாதிக்கப்பட்டு ஒட்டுமொத்த தென்னிந்தியாவே இருளில் மூழ்கிவிடும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நிலவும் அசாதரணமான நிலைமை மிகப் பெரும் போராட்டமாக எந்த நேரத்திலும் வெடிக்கவும் செய்யும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன்.
போராடுகிற தொழிலாளர்களுடன் நியாயமான முறையில்பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தீர்வு காண வேண்டிய என்.எல்.சி. நிர்வாகம் சட்டாம்பிள்ளைத்தனமாக தொடர்ந்து அடாவடியாக செயல்பட்டு வருவதை உடனே நிறுத்த வேண்டும்.
இத்தகைய காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிற நிர்வாகம், என்.எல்.சி. தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவிடுகிற, அராஜகப்போக்குடன் நடந்து கொள்கின்ற என்.எல்.சி. தலைவர், இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகள் அலுவலகங்கள், இல்லங்களை தொழிலாளர் தோழர்கள், பொதுமக்களுடன் இணைந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் தொடர் முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எனவும் எச்சரிக்கிறேன்.
இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உடனே தலையிட்டு சுமூகத் தீர்வு காண உரிய நடவடிக்கை வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்