பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி போராட்டம் : பா.ம.க இணைப் பொதுச் செயலாளர் தி.வேல்முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
அன்பார்ந்த புலம்பெயர் உறவுகளே!
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கடந்த 20 ஆண்டுகளாக வெஞ்சிறையில் வெந்து அவதியுறும் தமிழர்களான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்காக பல வழிகளிலும் நாம் போராடி வருகிறோம். வழக்கு நடந்த காலத்திலிருந்து, மொத்தமாக 26 பேருக்கு தூக்கு என்று தீர்ப்பு வந்த காலமாக இருந்தாலும், பின்னர் மேல்முறையீட்டில் 19 பேர் விடுவிக்கப்பட்ட போதும் எஞ்சிய அப்பாவித் தமிழர்களுக்காக, தமிழர்களாகிய நாம் குரல் கொடுத்தே வந்திருக்கிறோம்.
கடந்த இரு இந்தியக் குடியரசுத் தலைவர்களும் தங்கள் காலத்தில் கருணை மனுவை நிராகரிக்கும் முடிவைத் தள்ளிவைத்தனர். ஆனால், இன்று மூன்று தமிழர்களின் மரணதண்டனை மீதான கருணை மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நாம் அனைவரும் இணைந்து குரல்கொடுத்து தூக்குக் கயிற்றிலிருந்து இம்மூன்று தமிழ்ர்களையும் காக்கப் போராட வேண்டியது இன்று மிக முக்கியமானதாகும். தமிழகத்தின் தமிழுணர்வாளர்கள் இதற்காகக் குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், களத்தில் இறங்கி செயல்படவும் செய்கிறார்கள்.
அதுபோக இருபத்தொன்று ஆண்டுகள் தம் வாழ்வின் இளமையை இழந்து தனிமைச்சிறையில் வாடிய அவர்களுக்கு ஆதரவாக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டிய காலம் இது. இன்று உலகத் தமிழர்களும் இணைந்து குரல் தந்து, செயல்களில் கரம் தந்து இணைய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் மூலமும், உலகெங்கும் வாழும் தமிழ் அமைப்புகள் மூலமும் பன்னாட்டு அரசுகளுக்கும் அவற்றின் மூலமாக இந்திய அரசுக்கும் குரல் கொடுத்து தமிழர்கள் மூவரின் வாழ்வைக் காக்கும் பணியை நாம் செய்தாக வேண்டும்.
அதுபோக புலம்பெயர் தமிழர்கள் தத்தமது நாடுகளில் உள்ள எழுத்தாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஒத்த கருத்துள்ளோர்கள் போன்ற அத்துணை பேரையும் இந்த நீதிகாக்கும் போராட்டத்தில் இணைக்குமாறும் நாம் கேட்டுக்கொள்கிறோம். ஆங்காங்கே தமிழர்கள் அமைதியான முறையில் பல்வேறு பரப்புரை இயக்கங்களை துவங்குமாறும் நாம் அறைகூவல் விடுக்கின்றோம். மரணதண்டனைகள் ஒழிக்கப்பட்ட நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அந்நாடுகளையும் இந்த குரலோடு ஒத்திசைக்க ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
விடுதலை வேட்கையோடு
தி.வேல்முருகன்
முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர்
பாட்டாளி மக்கள் கட்சி மாநில இணை பொதுச் செயலாளர் ,
எண் 159.திலீபன் இல்லம்,
திருப்பதி நகர் முதல் தெரு ,
சிறிதேவி குப்பம் பிரதான சாலை,
வளசரவாக்கம்
சென்னை.
தமிழ்நாடு, இந்தியா.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
Read more...