பண்ருட்டியில் தி.வேல்முருகன் முன்னிலையில் தேமுதிக ஒன்றிய நிர்வாகிகள் பாமகவில் இணைந்தனர்
சனி, 2 ஏப்ரல், 2011
பண்ருட்டி:
காடாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த தேமுதிக ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் நெய்வேலி தொகுதி பா.ம.க. வேட்பாளர் தி.வேல்முருகன் முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் வியாழக்கிழமை இணைந்தனர்.
2001, 2006-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த தி.வேல்முருகன், தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். நெய்வேலி மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் தி.வேல்முருகன் முன்னிலையில் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் பாமகவில் இணைந்து வருகின்றனர்.
வியாழக்கிழமை காடாம்புலியூர் கிராமம் தேமுதிகவைச் சேர்ந்த முன்னாள் ஒன்றியச் செயலர் எம்.முருகன் தலைமையில், அக்கட்சியைச் சேர்ந்த கௌரவத் தலைவர் கொஞ்சிக்குப்பம் ஏழுமலை, காடாம்புலியூர் கிளைப் பொருளர் ஆனந்த், தலைவர் சக்தி, பிரதிநிதிகள் சதிஷ், அன்பரசு, செயலர் மோகன், துணைச் செயலர்கள் இராமலிங்கம், சிவா, கிளைச் செயலர் (தெற்கு) முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் தங்கள் உறுப்பினர்கள் அட்டையை ஒப்படைத்து தி.வேல்முருகன் முன்னிலையில் பாமகவில் இணைந்தனர்.
பாமகவில் இணைந்தவர்களை வாழ்த்தி பேசிய தி.வேல்முருகன் சிறப்பாக கட்சி மற்றும் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக