நெய்வேலியில் மீண்டும் அரசு பஸ் பணிமனை: பாமக வேட்பாளர் தி.வேல்முருகன்
வியாழன், 7 ஏப்ரல், 2011
நெய்வேலி:
நெய்வேலி நகரில் செயல்பட்டு வந்த அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையை மீண்டும் நெய்வேலியிலேயே அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவதாக நெய்வேலி தொகுதி பாமக வேட்பாளர் தி.வேல்முருகன் வாக்குறுதி அளித்தார்.
திமுக கூட்டணி சார்பில் நெய்வேலி தொகுதியில் களமிறங்கியுள்ள பாமக வேட்பாளர் தி.வேல்முருகன், ஞாயிற்றுக்கிழமை நெய்வேலி வட்டம் 21, 30 பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
நெய்வேலியில் இயங்கிவந்த அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை வடலூருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெய்வேலியிலிருந்து ஏராளமான மாணவர்கள் பெருநகரங்களில் உள்ள கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இவர்கள் வந்து செல்ல ஏதுவாக பஸ் வசதி இருந்துவந்ததாகவும், தற்போது முன்னர் இருந்தது போன்று பஸ் வசதி இல்லை எனவும் நெய்வேலி வாசிகளாகிய நீங்கள் கூறிவருகிறீர்கள்.
எனவே வடலூரில் இருக்கும் பணிமனையைப் போன்று நெய்வேலியிலும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையை ஏற்படுத்துவது தொடர்பாக போக்குவரத்துத் துறையிடம் பேசி அதற்கு தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்வேன். நெய்வேலி வட்டம் 21, 30 பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மின்சாரம் கிடைப்பது தொடர்பாகவும், தர வாடகை ரத்து தொடர்பாகவும் என்.எல்.சி. நிர்வாகத்திடம் ஏற்கெனவே பேசியுள்ளேன். சட்டமன்றத்திலும் இதுகுறித்து பதிவு செய்திருக்கிறேன். எனவே வரும் காலத்தில் இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் எனது நடவடிக்கை அமையும் என்றார் வேல்முருகன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக