சென்னை திராவிடர் விடுதலை கழகத் தோழர் 'முழக்கம்' உமாபதி மீதுகொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறைக்குக் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பண்ருட்டி தி. வேல்முருகன் கடும் கண்டனம்!

வெள்ளி, 28 நவம்பர், 2014


சென்னை திராவிடர் விடுதலை கழகத் தோழர் 'முழக்கம்' உமாபதி மீதுகொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறைக்குக் கடும் கண்டனம்!
 
தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகளை உடனே கைது செய்து பணி நீக்கம் செய்க! என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பண்ருட்டி தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (28.11.2014)
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை:

சென்னை மயிலாப்பூரில் தமிழீழ விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்த தமிழர்களுக்காக நினைவேந்தல் நினைவு நிகழ்ச்சி நடத்துவதற்கான பதாகைகள் வைத்ததை காவல்துறை அகற்றக் கூடாது என்று கூறிய ஒரே காரணத்துக்காக மட்டுமே திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிர்வாகி தோழர் "முழக்கம்" உமாபதியை மிகக் கொடூரமாக கொலைவெறியுடன் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் இளையராஜா, கலைச்செல்வி மற்றும் காவலர் வடிவேலு ஆகியோர் தாக்குதல் நடத்தியிருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அமைதியான வழியில்- அறவழியில் தமிழக காவல்துறை எந்த ஒரு தடை உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில் இத்தகைய நிகழ்வுகளுக்கு உச்சநீதிமன்றமே அனுமதித்திருக்கும் நிலையில், தமிழர்கள் வாழும் உலகம் எங்கும் நடத்துகிற தமிழினத்துக்கான நினைவேந்தல் நிகழ்வுக்கான பதாகை வைத்ததை அகற்றுவதை எதிர்த்த ஒரே காரணத்துக்காக இவ்வளவு கொடூரமான கொலை வெறித்தாக்குதலை தமிழக காவல்துறையினர் தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையிலே நடத்தியிருப்பது தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்கவே முடியாதவே கடுமையான கண்டத்துக்குரியது.

தமிழர் வாழ்வுரிமைக்காக போராடுகிற தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் மீது இதேபோல் கத்தி திரைப்பட எதிர்ப்பு நிகழ்வுகளிலும் சென்னை மாநகர காவல்துறை மிகக் கொடூரமாக ஈவிரக்கமற்று கொலைவெறியுடன் நடந்து கொண்டது. அப்போது தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தி ஒரு வாக்குமூலத்தை வாங்கி அப்பாவி மாணவர்கள், அவர்தம் குடும்பத்தினரை சித்திரவதை செய்து சிறையில் அடைத்தது. இதை தமிழக அரசின் கவனத்துக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்துக்கும் அன்று இதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பும் கொண்டுவந்தது. ஆனாலும் எந்த ஒரு காவல்துறை அதிகாரி மீதும் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த துணிச்சல் காரணமாக அப்போதே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தற்போது, ஒன்றுமில்லாத காரணத்துக்காக இன உணர்வாளர் என்பதற்காக மட்டுமே திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் "முழக்கம்" உமாபதியை கொலைவெறியுடன் தாக்கியிருப்பது நெஞ்சை பதற வைக்கிறது.. சமூக வலைதளங்களில் அந்த தோழர் தாக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களில் வெளியாகியிருப்பதைக் கண்டு உலகத் தமிழர்கள் பேரதிர்ச்சியும் பெருங்கொந்தளிப்பிலுமாக இருக்கின்றனர்.

முந்தைய திமுக அரசு தமிழின உணர்வாளர்களை கொடூரமாக ஒடுக்கிய அதே பாணியை இன்றைய அதிமுக அரசும் கடைபிடிக்கிறதா? என்ற கேள்வி தமிழ்ச் சமூகத்தில் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தங்களது கவனத்துக்கு நான் அறிக்கை வாயிலாக கொண்டு வந்தும் இன்னமும் அநியாயமாக கொடூரமாக தோழர் "முழக்கம்" உமாபதியை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது எந்த ஒரு நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

இந்த கொடூர தாக்குதல் குறித்து செய்தி வெளியாகிய உடனேயே தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளை தமிழக அரசு பணி இடைநீக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். அப்படி தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததும் அவர்களை உடனே பணி இடை நீக்கம் செய்யாததும் கைது செய்யாததும் மிகவும் வருத்தமும் உலகத் தமிழர்களிடத்தில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளின் மூலமே உலகத் தமிழர்களுக்கு ஆதரவாக, அனுசரணையாக அரசாக தமிழக அரசு இருக்கிறது என்ற ஆறுதலை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்துக்கும் தர முடியும் என்பதையும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.

குற்றம் ஏதும் புரியாத திராவிடர் விடுதலை கழகத் தோழர் "முழக்கம்" உமாபதியை மிகக் கொடூரமாக எழுந்தே நடமாட முடியாத அளவுக்கு குரூர கொலைவெறி மனப்பான்மையுடன் தாக்கியிருக்கும் உதவி ஆய்வாளர்கள் இளையராஜா, கலைச்செல்வி மற்றும் காவலர் வடிவேலு ஆகியோர் மீது தமிழக அரசு உடனே கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவர்களை பணி இடைநீக்கம் செய்வதோடு கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் காவல்துறையைக் கண்டித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் மிகப் பெரிய அளவிலான கண்டனப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
 
 


 
 தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் பிறந்த நாள் மற்றும் தமிழீழத் தேசிய மாவீரர் நாளையொட்டி வைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்றியதை எதிர்த்ததால் காவல்துறையினரின் கொலைவெறித் தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் சென்னை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் "முழக்கம்" உமாபதியை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வன்னியரசு ஆகியோர் மருத்துவமனையில் இன்று (28.11.2014) சந்தித்தனர். (உடன் திராவிடர் விடுதலைக் கழக மூத்த நிர்வாகி தபசி குமரன்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP