தர்மபுரி, சேலத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தை பாடமாக எடுத்துக் கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச் சத்துகளை உடனே வழங்கி கண்காணிக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கோரிக்கை

வியாழன், 20 நவம்பர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

தருமபுரி குழந்தைகள் பலியான சம்பவத்தை பாடமாக எடுத்துக் கொள்வோம்!

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச் சத்துகளை உடனே வழங்கி கண்காணிக்க வேண்டும்!

தருமபுரி மற்றும் சேலத்தில் கடந்த 4 நாட்களில் அடுத்தடுத்து மொத்தம் 11 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியையும் பெருந்துயரையும் ஏற்படுத்தியுள்ளது.

பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததற்கு ஊட்டச்சத்து குறைவு, மூச்சுத் திணறல் போன்ற காரணங்களைத்தான் மருத்துவர்கள் மீண்டும் மீண்டும் கூறுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது.

ஊட்டச்சத்து குறைபாட்டால் தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்து போகிறது என்பது பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மையங்கள், அங்கன்வாடிகள் போன்றவை இதற்காகவே செயல்பட்டு வரும் நிலையில் இத்தகைய உயிரிழப்புகள் இவற்றின் செயல்பாடுகளை தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டியது அவசியம் என்பதை உணர்த்துகிறது.

இந்த விவகாரத்தில் உடனே தலையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி குழந்தைகள் உயிரிழப்பைத் தடுக்க ஆக்கப்பூர்வமான செயல்பட்ட மேற்கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் நடவடிக்கைகளை வரவேற்கிறேன்.

அதே நேரத்தில் போர்க்கால அடிப்படையில் தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், அங்கன்வாடிகள் மூலமாக அனைத்து கர்ப்பிணி தாய்மார்களின் உடல்நலன் குறித்து ஆராய்ந்து அவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களில் இனியும் இதுபோன்ற அசாதாரண சம்பவங்கள் நிகழ்ந்துவிடாமல் 'வரும் முன் காப்போம்" என்ற உறுதியுடன் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டிய தருணம் என்பதை நினைவில் கொள்வோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP