திருச்சி சிறையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தும் அனைத்து ஈழத் தமிழ் உறவுகளையும் முகாமில் இருந்து விடுதலை செய்ய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கோரிக்கை

சனி, 22 நவம்பர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் இன்று 22.11.2014 வெளியிட்டுள்ள அறிக்கை:

திருச்சி சிறையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தும் அனைத்து ஈழத் தமிழ் உறவுகளையும் முகாமில் இருந்து விடுதலை செய்க!!

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் தொடர்புடைய ஈழத் தமிழர்கள் மற்றும் மலேசிய தமிழர் உட்பட 31 பேர் உள்ளனர். இதில் ஈழத் தமிழர்கள் 26 பேர் தங்களை முகாமில் இருந்து விடுவிக்க கோரியும் வழக்குளை சட்டப்படி வெளியில் இருந்து நடத்தி கொள்வதாக கூறியும் கடந்த 15–ந் தேதி முதல் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இவர்களில் 25 பேர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தங்களது உயிரைப் போக்கிக் கொள்ளவும் துணிந்திருக்கிறார்கள் எனில் அவர்களது துயரத்தையும் வலியும் மிகக் கொடூரமானது என்பதை தமிழக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன் தங்களது விடுதலைக்காக போராடினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக ஈழ ஏதிலியர் ஒருங்கிணைப்பாளரான ஈழ நேரு, கருணைராஜா ஆகியோர் மீண்டும் கைது செய்யப்பட்டு அகதிகளை போராட தூண்டியது, தற்கொலைக்கு தூண்டியது என 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

இதே இந்தியாவில் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தொடர்பே இல்லாத திபெத்திய அகதிகள் ஒரு தனிநாட்டுக்கான அத்தனை சுதந்திரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டின் 7 கோடி மக்களுடன் தொப்புள் கொடி உறவு கொண்ட ஈழத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் அகதி முகாம்களோ மிக மோசமான திறந்தவெளி சிறைச்சாலைகளாகத்தான் இருக்கிறது.

திருச்சி மட்டும்ன்றி தமிழகத்தின் அனைத்து திறந்தவெளிச் சிறைச்சாலைகளான ஈழத் தமிழ் உறவுகள் இருக்கும் முகாம்களையும் இழுத்து மூடி அவர்களை சுதந்திர மனிதர்களாக நடமாட அனுமதிக்க வேண்டும். சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் அனைத்துவிதமான உரிமைகளும் மறுக்கப்பட்டு கொடுங்கைதிகளாக நடத்தப்பட்டு வரும் ஈழத் தமிழ் உறவுகளை சிறைகளில் இருந்து கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.

திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தும் ஈழ உறவுகளின் கோரிக்கைகளை ஏற்று அவர்களை விடுதலை செய்து அவர்களுக்கான உரிய மருத்துவ சிகிச்சைகளை அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP